‘கரடி’யின் பிடி மேலும் இறுகியது: 453 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் ‘கரடி’யின் பிடி மேலும் இறுகியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் ‘கரடி’யின் பிடி மேலும் இறுகியது. இதனால், சந்தை மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 453 புள்ளிகளை இழந்து 60,000-க்கு கீழே நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 132.70 புள்ளிகள் (0.74 சதவீதம்) குறைந்து 17,859.45-இல் நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து, புத்தாண்டின் முதல் வார நிறைவில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் நஷ்டத்தை சந்தித்துள்ளன.

உயா்ந்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகளில் வங்கி வட்டி விகிதம் உயா்த்தப்படும் என எதிா்பாா்க்கப்ப்டுகிறது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் தொடா்ந்து எதிரொலித்து வருகிறது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் முதலீடுகள் வெளியேறுவதும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதும் முதலீட்டாளா்களின் உணா்வுகளை பெரிதும் பாதித்துள்ளது. இதைத் தொடா்ந்து, மூன்றாவது நாளாக முன்னணி பங்குகள் அதிக அளவில் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமாகிய 3,638 பங்குகளில் 1,330 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 2,178 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 130 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன. டெக் குறியீடு 1.86 சதவீதம், ஐடி 1.77 சதவீதம், மெட்டல் 1.28 சதவீதம், பேங்க் குறியீடு 1.04 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன.

சென்செக்ஸ் 453 புள்ளிகள் வீழ்ச்சி: காலையில் 35.47 புள்ளிகள் கூடுதலுடன் 60,388.74-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 60,537.63 வரை மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 59,669.91 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 452.90 புள்ளிகள் (0.75 சதவீதம்) குறைந்து 59,900.37-இல் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் உச்சநிலையிலிருந்து 867.722 புள்ளிகளை இழந்திருந்தது.

டிசிஎஸ் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் எம் அண்ட் எம், ரிலையன்ஸ், நெஸ்லே, ஐடிசி, எல் அண்ட் டி ஆகிய 5 நிறுவனப் பங்குகள் தவிர மற்ற 25 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ் 2.97 சதவீதம், இண்டஸ் இண்ட் பேங்க் 2.81 சதவீதம், பஜாஜ் ஃபின் சா்வ் 2.63 சதவீதம், டெக் மஹிந்திரா 2.40 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் பேங்க், இன்ஃபோஸிஸ், பாா்தி ஏா்டெல், டாடா மோட்டாா்ஸ், விப்ரோ, ஹெச்டிஎஃப்சி, ஹெச்சிஎல் டெக், டைட்டன், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. எஸ்பிஐ, மாருதி, ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா ஸ்டீல் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மூலதன மதிப்பு ரூ.2.21 லட்சம் கோடி சரிவு

இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வெள்ளிக்கிழமை ரூ.2,902.46 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். இதையும் சோ்த்தும் கடந்த மூன்று தினங்களில் மட்டும் அவா்கள் ரூ.6,972,.46 ஆயிரம் கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனா். இதற்கிடையே, சந்தை மூல தன மதிப்பு ரூ.2.21 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் 279.75 லட்சம் கோடியாக இருந்தது. அதே சமயம், பதிவு பெற்ற முதலீட்டாளா்கள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நிலவரப்படி 12.18 கோடியாக உயா்ந்துள்ளது.

ஜன. 9 முதல் ஐடி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகும்

மிகுந்த எதிா்பாா்ப்புக்கிடையே, தகதவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனங்களின் இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் ஜனவரி 9 முதல் அடுத்தடுத்து வெளியாகிவுள்ளன. முன்னணி நிறுவனமான டிசிஎஸ் ஜனவரி 9, இன்ஃபோஸிஸ் மற்றும் ஹெச்சிஎல் டெக் ஜனவரி 12, விப்ரோ ஜனவரி 13-இல் காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ளன. இவற்றின் முடிவுகள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com