ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வு

ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வு

நமது நிருபர்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும் அவ்வப்போது லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தினர். மெட்டல், ஆயில் அண்ட் காஸ், ஃபார்மா, ஹெல்த்கேர் பங்குகள் சிறிதளவு விற்பனையை எதிர்கொண்டாலும், ஆட்டோ, ரியால்ட்டி, எஃப்எம்சிஜி, ஐடி, நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தி நிறுவனப் பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. இதனால், சந்தை 3-ஆவது நாளாக நேர்மறையாக முடிந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயர்வு: அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.2,915.23 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,542.93 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.79 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக இறுதியில் ரூ.399.65 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 400.32 புள்ளிகள் கூடுதலுடன் 74,048.94-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 74,059.89 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னர், 73,688.31 வரை கீழே சென்ற சென்செக்ஸ் வர்த்தக இறுதியில் 89.83 புள்ளிகள் (0.12 சதவீதம்) உயர்ந்து 73,738.45-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,934 பங்குகளில் 2,338 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 1,475 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 121பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

25 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் பார்தி ஏர்டெல், நெஸ்லே, மாருதி, ஹெச்சிஎல் டெக், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட் உள்பட மொத்தம் 18 பங்குகள்ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், சன்ஃபார்மா, ரிலையன்ஸ், எம் அண்ட் எம், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல் உள்பட 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 32 புள்ளிகள் உயர்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வர்த்தக இறுதியில் 31.60 புள்ளிகள் (0.14 சதவீதம்) உயர்ந்து 22,368.00-இல் முடிவடைந்தது.

வர்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,447.55 வரை மேலே சென்ற நிஃப்டி, பின்னர் 22,349.45 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 24 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 25 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com