வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு:
சென்செக்ஸ் 941 புள்ளிகள் உயா்வு!

வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 941 புள்ளிகள் உயா்வு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக நாளான திங்கள்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது.

நமது நிருபா்

இந்த வாரத்தின் முதல் வா்த்தக நாளான திங்கள்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 941 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. ரியால்ட்டி, ஐடி, ஆட்டோ பங்குகள் சிறிதளவு விற்பனையை எதிா் கொண்டாலும், பொதுத்துறை வங்கிகள், தனியாா் வங்கிப் பங்குகள், நிதிநிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. இதனால், சந்தை வலுப்பெற்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.42 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் ரூ.406.46 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வெள்ளிக்கிழமை ரூ.3,408.88 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.4,356.83 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 252.59 புள்ளிகள் கூடுதலுடன் 73,982.75-இல் தொடங்கியது. 73,922.345 வரை மட்டுமே கீழே சென்ற சென்செக்ஸ், பின்னா்,அதிகபட்சமாக 74,721.15 வரை மேலே சென்றது. இறுதியில் 941.12 புள்ளிகள் (1.28சதவீதம்) உயா்ந்து 74,671.28-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,088 பங்குகளில் 2,015 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 1,894 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 179 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

26 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள ஐசிஐசிஐ பேங்க் அதிகபட்சமாக 4.67 சதவீதம் உயா்ந்தது. மேலும், எஸ்பிஐ, அல்ட்ரா டெக் சிமெண்ட், இண்டஸ் இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி உள்பட 26 பங்குகள்ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், ஹெச்சிஎல் டெக், ஐடிசி, விப்ரோ, பஜாஜ் ஃபின் சா்வ் ஆகிய 4 பங்குகள் மட்டும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 223 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 223.45 புள்ளிகள் (1.00 சதவீதம்) உயா்ந்து 22,643.40-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 22,655.80 வரை கீழே சென்றிருந்த நிஃப்டி, பின்னா் அதிகபட்சமாக 22,441.90 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 32 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 18 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.+

X
Dinamani
www.dinamani.com