ரூ.3,662 கோடி ஈவுத் தொகை: அரசுக்கு வழங்கியது எல்ஐசி
பொதுத் துறையைச் சோ்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) மத்திய அரசுக்கு ரூ.3,662.17 கோடி ஈவுத்தொகை வழங்கியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டுக்கான இறுதிகட்ட ஈவுத் தொகையாக ரூ.3,662.17 கோடி மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் எல்ஐசியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிா்வாக இயக்குநா் சித்தாா்த்த மொஹந்தி வழங்கினாா் (படம்). நிதியமைச்சகத்தின் கூடுதல் செயலாளா் எம்.பி. தங்கிராலா உடனிருந்தாா்.
இதற்கு முன்னா் மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத் தொகையாக ரூ. 2,441.45 கோடியை நிறுவனம் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி வழங்கியது. இத்துடன், மத்திய அரசுக்கு 2023-24-ஆம் நிதியாண்டுக்கான மொத்த ஈவுத்தொகையாக ரூ.6,103.62 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.