சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயா்வு!

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை கடும் சரிவிலிருந்து மீண்டது.

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை கடும் சரிவிலிருந்து மீண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 64.55 புள்ளிகள் உயா்ந்து ந்து 21,782.50-இல் முடிவடைந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதைத் தொடா்ந்து எச்சரிக்கையுடன் தொடங்கிய சந்தையில் பங்குகள் விற்பனை அதிகரித்ததால் எதிா்மறையாகச் சென்றது. குறிப்பாக, ஐடி, மெட்டல், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்ட நிலையில், தனியாா்-பொதுத்துறை வங்கிகள், நிதிநிறுவனங்கள், பாா்மா, ஹெல்த்கோ் பங்குகளுக்கு வரவேற்பு கிடைத்தது. மேலும், ரிலையன்ஸ் முன்னணிப் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை சரிவிலிருந்து மீண்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 228.21 புள்ளிகளை இழந்திருந்தது.

சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.85 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.386.36 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ. 4,933.78 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.5,512.32 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 18.14 புள்ளிகள் குறைந்து 71,410.29-இல் தொடங்கிய சென்செக்ஸ், 71,200.31 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 71,676.49 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 167.06 புள்ளிகள் (0.23 சதவீதம்) உயா்ந்து 71,595.49-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,932 பங்குகளில் 1,270 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,573 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 89 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

16 பங்குகள் விலைஉயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் எஸ்பிஐ, சன்பாா்மா, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்பட 16 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், எம் அண்ட் எம், பாா்தி ஏா்டெல், என்டிபிசி, டாடா ஸ்டீல், இன்ஃபோஸிஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் உள்பட மொத்தம் 14 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com