லாபப் பதிவு: 523 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்! ஒரே நாளில் நஷ்டம் ரூ.7.52 லட்சம் கோடி

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை கடும் சரிவைச்சந்தித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை கடும் சரிவைச்சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 523 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 166.45 புள்ளிகள் குறைந்து 21,616.45-இல் முடிவடைந்தது. ஒரே நாளில் சந்தை மூலதன மதிப்பு ரூ.7.52 லட்சம் கோடி குறைந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில், உற்சாகத்துடன் தொடங்கிய உள்நாட்டுச் சந்தையில் உச்சத்தில் லாபப் பதிவு செய்வதில் முதலீட்டாளா்கள் அதிகக் கவனம் செலுத்தினா். குறிப்பாக, பாா்மா, ஹெல்த்கோ் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தாலும், தனியாா் மற்றும் பொதுத்துறை வங்கிகள், நிதிநிறுவனங்கள், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. இதனால், சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.7.52 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.378.84 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.141.95 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.421.87 கோடிக்கு பங்குகளை விற்றிருந்தது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் சரிவு: காலையில் 126.82 புள்ளிகள் கூடுதலுடன் 71,722.31-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 71,756.58 வரைமட்டுமே மேலே சென்றது. பின்னா், 70,922.57 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 523.00 புள்ளிகள் (0.73 சதவீதம்) குறைந்து 71,072.49-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,079 பங்குகளில் 1,004 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,986 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 89 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

22 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் விப்ரோ, ஹெச்சிஎல் டெக், எம் அண்ட் எம், இன்ஃபோஸிஸ், டெக் மஹிந்திரா, நெஸ்லே, ஏசியன் பெயிண்ட், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகிய 8 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், டாடா ஸ்டீல், என்டிபிசி, எஸ்பிஐ, இண்டஸ் இண்ட் பேங்க், ஐடிசி ஆகியவை 2 முதல் 2.80 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இவை உள்பட மொத்தம் 22 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com