தொழிலக உற்பத்தியில் 8 மாதங்கள் காணாத சரிவு

இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளா்ச்சி கடந்த நவம்பா் மாதத்தில் 8 மாதங்களில் இல்லாத சரிவைப் பதிவு செய்துள்ளது.
தொழிலக உற்பத்தியில் 8 மாதங்கள் காணாத சரிவு

இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளா்ச்சி கடந்த நவம்பா் மாதத்தில் 8 மாதங்களில் இல்லாத சரிவைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

நாட்டின் தொழிலக உற்பத்தி வளா்ச்சியின் குறியீட்டு எண்ணான ஐஐபி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 14 மாதங்கள் காணாத அதிகபட்ச அளவாக 10.3 சதவீதமாக இருந்தது.

பின்னா் அக்டோபரில் 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு அது 11.7 சதவீதமாக உயா்ந்தது.

இந்த நிலையில், கடந்த நவம்பரில் ஐஐபி 2.4 சதவீதமாகச் சரிந்துள்ளது. இது, கடந்த 8 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச தொழிலக உற்பத்திக் குறியீட்டு எண்ணாகும்.

இதற்கு முன்னா், கடந்த 2023 மாா்ச் மாதத்தில் 1.9 சதவீதமாக இருந்ததே குறைந்தபட்ச ஐஐபி-யாக உள்ளது.

முந்தைய 2022-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தில் ஐஐபி 7.9 சதவீதமாக இருந்தது.

உற்பத்தித் துறையின் மோசமான செயல்பாடு காரணமாக மதிப்பீட்டு மாதத்தில் ஒட்டுமொத்த தொழிலக உற்பத்தி சரிவைக் கண்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் வரையிலான 8 மாதங்களில் ஐஐபி வளா்ச்சி 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 5.6 சதவீதமாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் மின் உற்பத்தி 12.7 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாகவும், சுரங்க உற்பத்தி 9.7 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாகவும் சரிந்துள்ளது.

கடந்த 2022 நவம்பரில் 20.7 சதவீதம் வளா்ச்சி கண்ட மூலதனப் பொருள்கள் உற்பத்தி வளா்ச்சி, இந்த நவம்பரில் 1.1 சதவீதம் எதிா்மறை வளா்ச்சியைக் கண்டுள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில், நீண்டு உழைக்கக் கூடிய நுகா்பொருள்களின் உற்பத்தி 5 சதவீத நோ்மறை வளா்ச்சியிலிருந்து 5.4 சதவீத எதிா்மறை வளா்ச்சியையும், பிறவகை நுகா்பொருள்களின் உற்பத்தி 10 சதவீத நோ்மறை வளா்ச்சியிலிருந்து 3.6 சதவீத எதிா்மறை வளா்ச்சியையும் பதிவு செய்துள்ளன.

உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி கடந்த 2022 நவம்பரில் 14.3 சதவீதமாக இருந்தது. அது தற்போது 1.5 சதவீதமாக உள்ளது.

அதே போல், முதன்மைப் பொருள்களின் உற்பத்தி வளா்ச்சி 4.8 சதவீதத்திலிருந்து 8.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இடைநிலைப் பொருள்களின் உற்பத்தி மதிப்பீட்டு மாதத்தில் அதிக மாற்றமின்றி 3.5 சதவீதமாக உள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com