உச்சத்தில் லாபப் பதிவு: வங்கி, டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனை!

உச்சத்தில் லாபப் பதிவு: வங்கி, டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனை!

வங்கிகள் மற்றும் டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனை: பங்குச்சந்தையில் லாபப் பதிவு

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் லாபப் பதிவு வந்தது. இருப்பினும், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் பெரிய அளவில் மாற்றமின்றி நிலைபெற்றன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. ஆனால், உச்சத்தில் லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளா்கள் கவனம் செலுத்தினா். குறிப்பாக, வங்கி, ஆட்டோ, நிதிநிறுவனங்கள், டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்தன. அதே சமயம், ஐடி, ரியால்ட்டி பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு சரிவு: சந்தை மூலதன மதிப்பு ரூ.86 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.442.19 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.426.03 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,917.43 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 364.18 புள்ளிகள் கூடுதலுடன் 79,840.37-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 79,855.87 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், லாபப் பதிவால் 79,231.11 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 34.74 புள்ளிகள் (0.04 சதவீதம்) குறைந்து 79,441.45-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,008 பங்குகளில் 2,036 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,880 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 92 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

வங்கிப் பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் பாா்தி ஏா்டெல், கோட்டக் பேங்க், டாடா மோட்டாா்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்பட 19 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், எல் அண்ட் டி, இன்ஃபோஸிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், பவா் கிரிட் உள்பட 11 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 13 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,228.75-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,236.35 வரை மேலே சென்று புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 24,056.40 வரை கீழே சென்ற நிஃப்டி வா்த்தக இறுதியில் 18.10 புள்ளிகள் (0.07 சதவீதம்) குறைந்து 24,123.85-இல் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 21 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 28 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

X
Dinamani
www.dinamani.com