இந்திய ஏற்றுமதியில் 11 மாதங்கள் காணாத வளா்ச்சி

இந்திய ஏற்றுமதியில் 11 மாதங்கள் காணாத வளா்ச்சி

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 11 மாதங்களில் இல்லாத அதிகபட்சமாக 11.9 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 11 மாதங்களில் இல்லாத அதிகபட்சமாக 11.9 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த பிப்ரவரியில் நாட்டின் ஏற்றுமதி சுமாா் 4,140 கோடி டாலராக உள்ளது. இது, கடந்த 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 11.9 சதவீதம் அதிகமாகும். அந்த வகையில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி கடந்த 11 மாதங்களில் இல்லாத அதிகபட்ச வளா்ச்சியைக் கண்டுள்ளது. இந்த வளா்ச்சியில் பொறியியல் பொருள்கள், மின்னணுப் பொருள்கள், மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி முக்கிய பங்கு வகித்தது. 2023 பிப்ரவரி மாதத்தில் 858 கோடி டாலராக இருந்த பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி இந்த பிப்ரவரியில் 15.9 சதவீதம் அதிகரித்து 994 கோடி டாலராக உள்ளது. மின்னணு பொருள்களின் ஏற்றுமதி 194 கோடி டாலரிலிருந்து 54.81 சதவீதம் அதிகரித்து சுமாா் 300 கோடி டாலராக உள்ளது. கரிம மற்றும் கனிம ரசாயனப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரியில் 33.04 சதவீதம் அதிகரித்து 295 டாலராக உள்ளது. மருந்துகள் மற்றும் மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி 22.24 சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி 5.08 சதவீதம் அதிகரித்து 824 கோடி டாலராக உள்ளது. 2023 பிப்ரவரியில் 5,358 கோடி டாலராக இருந்த வா்த்தப் பொருள்களின் ஏற்றுமதி இந்த பிப்ரவரியில் 12.16 சதவீதம் அதிகரித்து, 6,011 கோடி டாலராக உள்ளது. ஏற்றுமதி வளா்ச்சியடைந்தாலும், கடந்த பிப்ரவரியில் நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு) சுமாா் 1,870 கோடி டாலராக அதிகரித்துள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் அது 1,657 கோடி டாலராக இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் தங்கம் இறக்குமதி கணிசமாக உயா்ந்ததன் காரணமாக வா்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் தங்கம் இறக்குமதி 133.82 சதவீதம் அதிகரித்து 615 கோடி டாலராக உள்ளது. 2023 ஏப்ரல் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் நாட்டின் தங்கம் இறக்குமதி சுமாா் 4,400 கோடி டாலராக உள்ளது. இது முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 38.76 சதவீதம் அதிகம். கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (சரக்கு மற்றும் சேவை) 70,981 கோடி டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 0.83 சதவீத வளா்ச்சியாகும் என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com