3 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவு

3 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவு

நமது நிருபர்

தொடர்ந்து 3 நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை புதன்கிழமை எதிர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 118 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி சற்று மேலே சென்றது. இந்நிலையில், அந்நிய முதலீடு வெளியேற்றத்துக்கு மத்தியில் உச்சத்தில் லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தினர். பொதுத்துறை வங்கிப் பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. ஆனால், தனியார் வங்கிப் பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன. மேலும், நிதி நிறுவனங்கள், ஆட்டோ, எஃப்எம்சிஜி, மீடியா பங்குகளும் அதிகம் விற்பனைக்கு வந்தன. இதனால், இறுதியில் சந்தையில் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயர்வு: சந்தை மூல தன மதிப்பு ரூ.2.26 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக இறுதியில் ரூ.404.26 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.4,065.52 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,527.86 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

சென்செக்ஸ் வீழ்ச்சி: காலையில் 95.62 புள்ளிகள் கூடுதலுடன் 73,200.23-இல் தொடங்கிய சென்செக்ஸ் அதிகபட்சமாக 72,301.47 வரை மேலே சென்றது. பின்னர், 72,822.66 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 117.58 புள்ளிகள் (0.16 சதவீதம்) குறைந்து 72,987.03-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,935 பங்குகளில் 2,201 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,591 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 143 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

16 பங்குகள் விலை சரிவு:

சென்செக்ஸ் பட்டியலில் பார்தி ஏர்டெல், பவர்கிரிட், என்டிபிசி, எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக், எல் அண்ட் டி உள்பட 14 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஏசியன் பெயின்ட், டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், சன்ஃபார்மா, ஹிந்துஸ்தான் யுனிலீவர் உள்பட 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இந்தன.

நிஃப்டி17 புள்ளிகள்

குறைந்தது: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வர்த்தக இறுதியில் 17.30 புள்ளிகள் (0.08 சதவீதம்) குறைந்து 22,200.55-இல் முடிவடைந்தது.

வர்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,297.55 வரை மேலே சென்ற நிஃப்டி, பின்னர் 22,151.75 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 23 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 27 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

அந்நிய முதலீடு: இந்த மாதம் ரூ.33,540 கோடி வெளியேற்றம்

இந்திய பங்குச்சந்தைகளில் எஃப்ஐஐ என்று சொல்லப்படும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த மே 2 முதல் மே 14 -ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் ரூ.33,539.94 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனர். அதே சமயம், உள்நாட்டு நிறுவனங்கள் (டிஐஐ) ரூ.26,500.61 கோடிக்கு பங்குகளை வாங்கி முதலீடுகளை அதிகரித்துள்ளன சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com