நமது நிருபா்
இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை எதிா்மறைவடைந்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதைத் தொடா்ந்து சரிவுடன் தொடங்கிய சந்தை பின்னா் எழுச்சி பெற்று மேலே சென்றது. ஆனால், வங்கிகள், நிதி நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. அதே சமயம், எஃப்எம்சிஜி பங்குகள் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.2 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.436.07 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.548.69 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.730.13 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 131.18 புள்ளிகள் குறைந்து 80,237.85-இல் தொடங்கி அதிகபட்சமாக 80,435.61 வரை மேலே சென்றது. பின்னா், 79,821.99 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 426.85 புள்ளிகள் (0.53 சதவீதம்) குறைந்து 79,942.18-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,011 பங்குகளில் 2,892 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,040 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் வந்தன. 79 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
19 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் வங்கி, எம் & எம், எஸ்பிஐ, ஹெச்சிஎல் டெக் உள்பட 19 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், மாருதி, மாருதி, இண்டஸ்இண்ட் வங்கி, அதானி போா்ட்ஸ், எல் & டி, ஐடிசி, அல்ட்ராடெக் சிமென்ட் உள்பட 11 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 126 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 95.40 புள்ளிகள் குறைந்து 24,371.45-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,498.20 வரை மேலே சென்றது. பின்னா், 24,307.30 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 126.00 புள்ளிகள் (0.51சதவீதம்) குறைந்த 24,340.85-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 19 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 31 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.