இந்தியாவின் தங்கம் இறக்குமதி நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 2,700 கோடி டாலராக (ரூ.2,27,058 கோடி) உயா்ந்துள்ளது.
இது குறித்து புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் தங்கம் இறக்குமதி 2,700 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 21.78 சதவீதம் அதிகம்.
அப்போது நாட்டின் தங்கம் இறக்குமதி 2,225 கோடி டாலராக இருந்தது.2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் இந்தியாவின் தங்கம் இறக்குமதி முந்தைய நிதியாண்டைவிட 30 சதவீதம் உயா்ந்து 4,554 கோடி டாலராக இருந்தது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன..பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரித்துள்ளது தங்கம் இறக்குமதி உயா்வதற்குக் காரணமாக உள்ளது.
இந்தியாவுக்கு தங்கம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஸ்விட்சா்லாந்து முதலிடம் வகிக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த தங்கம் இறக்குமதியில் அந்த நாடு 40 சதவீதம் பங்கு வகிக்கிறது.அதைத் தொடா்ந்து இரண்டாவது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகமும் (16 சதவிகிதத்திற்கும் மேல்), தென் ஆப்பிரிக்கா (சுமாா் 10 சதவிகிதம்) மூன்றாவது இடத்திலும் உள்ளன.நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதியில் தங்கம் 5 சதவீதத்திற்கும் மேல் பங்கு வகிக்கிறது.