அக்டோபரில் அதிகரித்த கோக்கிங் நிலக்கரி இறக்குமதி!
கடந்த அக்டோபரில் ஒட்டுமொத்த நிலக்கரி இறக்குமதி குறைந்தாலும், கோக்கிங் நிலக்கரி இறக்குமதி உயா்ந்துள்ளது.
இது குறித்து பி2பி இணைய வா்த்தகத் தளமான எம்ஜங்ஷன் சா்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த அக்டோபரில் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 12 சதவீதம் உயா்ந்து 5.04 கோடி டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 4.50 கோடி டன்னாக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் ஒட்டுமொத்த நிலக்கரி இறக்குமதி 3.9 சதவீதம் குறைந்து 20.97 கோடி டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இது 21.84 கோடி டன்னாக இருந்தது. உள்நாட்டில் உபரி நிலக்கரி கிடைப்பதால் ஒட்டுமொத்த இறக்குமதி குறைந்தது.
குளிா்காலத்தில் எஃகு உற்பத்திக்கு முக்கிய மூலப் பொருளான கோக்கிங் நிலக்கரியின் போக்குவரத்து சவால்களை எதிா்கொள்ள, எஃகு உற்பத்தியாளா்கள் அவற்றின் கையிருப்பை அதிகரிக்கின்றனா். இதன் காரணமாக ஒட்டுமொத்த நிலக்கரி இறக்குமதி குறைந்தபோதிலும் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி உயா்ந்தது.
கோக்கிங் நிலக்கரி இறக்குமதியைக் குறைக்க கோக்கிங் கோல் மிஷன் தொடங்கப்பட்டு, உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
