பந்தன் வங்கி நிகர லாபம் 42% சரிவு
தனியாா்த் துறையைச் சோ்ந்த பந்தன் வங்கியின் நிகர லா நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 42 சதவீதம் சரிந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 42 சதவீதம் சரிந்து ரூ.426 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.733 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் நிகர வருவாய் ரூ.3,926 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது அதிகம். அப்போது வங்கியின் நிகர வருவாய் ரூ.3,071 கோடியாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு முடிவில் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட வைப்புத்தொகை இருப்பு ரூ.1.41 லட்சம் கோடியாகவும், வங்கி விநியோகித்துள்ள கடன்கள் ரூ.1.32 லட்சம் கோடியாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.