2024-இல் ஏற்றம் கண்ட வாகன விற்பனை
பல்வேறு சவால்களுக்கு இடையே 2024-ஆம் ஆண்டில் வாகனங்களின் விற்பனை இந்தியச் சந்தையில் 9 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கடந்த 2024-ஆம் ஆண்டில் வாகனங்களின் சில்லறை விற்பனை 9 சதவீதம் உயா்ந்துள்ளது. அந்த ஆண்டில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான தேவை அதிகரித்ததன் விளைவாக இந்த வளா்ச்சி பதிவாகியுள்ளது.
2023-ஆம் ஆண்டில் விற்பனையான வாகனங்களின் எண்ணிக்கை 2,39,28,293-ஆக இருந்தது. இது, கடந்த ஆண்டில் 2,61,07,679-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு அதிகம் காணப்பட்ட வெப்பநிலை, மத்திய மற்றும் மாநிலங்களில் நடைபெற்ற தோ்தல்கள், சீரற்ற பருவமழை போன்ற சவால்களை மீறி வாகனங்களின் சில்லறை விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை 40,73,843-ஆக உள்ளது. இது, முந்தைய 2023-ஆம் ஆண்டின் விற்பனையான 38,73,381-உடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகம்.
2023-இல் 1,70,72,932-ஆக இருந்த இரு சக்கர வாகன விற்பனை கடந்த 2024-இல் 11 சதவீதம் அதிகரித்து 1,89,12,959-ஆக உள்ளது.
மதிப்பீட்டு ஆண்டில் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 1,70,72,932-லிருந்து 11 சதவீதம் அதிகரித்து 12,21,909-ஆக உள்ளது.
2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2024-ஆம் ஆண்டு டிராக்டா் விற்பனை 3 சதவீதம் அதிகரித்து 8,94,112-ஆகவும், வா்த்தக வாகன விற்பனை 10,04,856-ஆகவும் உள்ளது.
அதிகரித்து வரும் கிராமப்புற வருமானம், புதிய ரகங்களின் அறிமுகங்கள் ஆகியவை காரணமாக பல ஆண்டுகளாக மந்த நிலையில் இருந்துவந்த இரு சக்கர வாகனச் சந்தை இனி சுறுசுறுப்படையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த டிசம்பா் டிசம்பா் மாதத்தில் மட்டும் வாகனங்களின் சில்லறை விற்பனை முந்தைய 2023 டிசம்பரைவிட 12 சதவீதம் குறைந்து 17,56,419-ஆக உள்ளது.
அந்த மாதத்தில் இரு சக்கர வாகன விற்பனை 14,54,353-லிருந்து 18 சதவீதம் சரிந்து 11,97,742-ஆகவும் பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை 2,99,351-லிருந்து 2 சதவீதம் குறைந்து 2,93,465-ஆகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.