கோல் இந்தியா உற்பத்தி மே மாதத்தில் சரிவு
அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி கடந்த மே மாதத்தில் 1.4 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் மும்பை பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மே மாதத்தில் நிறுவனத்தின் உற்பத்தி 6.35 கோடி டன்னாக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 6.44 கோடி டன்னாக இருந்த உற்பத்தியோடு ஒப்பிடுகையில் இது 1.4 சதவீதம் குறைவு.
ஏப்ரல்-மே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 12.56 கோடி டன்னாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 12.62 கோடி டன்னாக இருந்தது.
கடந்த மே மாதத்தில் நிறுவனத்தின் நிலக்கரி விநியோகம் 7.8 சதவீதம் குறைந்து 6.4 கோடி டன்னாக உள்ளது. 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது 6.94 கோடி டன்னாக இருந்தது. ஏப்ரல்-மே காலகட்டத்தில் விநியோகம் 13.37 கோடி டன்னில் இருந்து 12.85 கோடி டன்னாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.