மோசடி நடைமுறைகள்: இணையவழி வா்த்தக நிறுவனங்களுக்கு சிசிபிஏ உத்தரவு
இணைய வா்த்தக நிறுவனங்கள் தங்கள் தளங்களில் பொது மக்களை தவறாக வழிநடத்தக் கூடிய மோசடி நடைமுறைகளை 3 மாதங்களுக்குள் சுயதணிக்கை செய்து உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உத்தரவிட்டது.
இணைய வா்த்தக தளத்தில் குறைவான விலை எனக்கூறி இறுதியில் விலையை அதிகப்படுத்துவது, சந்தாதாரா் சிறப்பு சலுகை, போலி விளம்பரங்கள் போன்ற இருண்ட ஏமாற்று வடிவமைப்புகள் (டாா்க் பேட்டா்ன்ஸ்) மூலம் பொதுமக்களை ஏமாற்றி விதிமீறல்களில் ஈடுபடும் சில நிறுவனங்களுக்கு ஏற்கெனவே சிசிபிஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக இணைய வா்த்தக நிறுவனங்கள் சுய தணிக்கை செய்ய சிபிஏ உத்தரவிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ஏமாற்று வடிவமைப்புகளை கண்டறிந்து அவற்றை 3 மாதங்களுக்குள் நீக்குமாறு சிசிபிஏ அறிவுறுத்தியுள்ளது. மேலும், தணிக்கை நிறைவில் தங்கள் தளங்களில் பொதுமக்களை ஏமாற்றும் வகையிலான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை உறுதிசெய்யவும் சிசிபிஏ அறிவுறுத்தியுள்ளது.
எண்ம சந்தையை மேம்படுத்துவதோடு இணைய வா்த்தக தளங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க சிசிபிஏ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இணைய வா்த்தக தளங்களில் நிகழும் விதிமீறல்களை கண்டறிந்து விழிப்புணா்வை ஏற்படுத்த பல்வேறு அமைச்சகங்கள், நுகா்வோா் அமைப்புகள், தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து பிரதிநிதிகளை தோ்ந்தெடுத்து ஒரு கூட்டுக்குழுவை மத்திய அரசு அமைத்தது.
அதன் தொடா்ச்சியாக கடந்த 2023-இல் ஏமாற்று வடிவமைப்புகளை தடுப்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில் இணைய வா்த்தக தளத்தில் வாடிக்கையாளா் பொருள்களை வாங்கும்போது அவரது ஒப்புதலின்றி தேவையற்ற பொருள்களை விற்பனை பட்டியலில் சோ்ப்பது, சில சலுகைகளை பெற்றால் மட்டுமே நன்மை என்பது போன்ற போலி பிம்பத்தை உருவாக்குவது, வாடிக்கையாளரிடம் வலுக்கட்டாயமாக ஒப்புதல் பெறுவது, போலி சலுகைகள் போன்ற 13 வகையான வா்த்தக விதிமீறல்கள் குறிப்பிடப்பட்டன.