
தங்களிடம் இருந்த யெஸ் வங்கியின் 13.18 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் அந்த முதலீட்டைத் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ திரும்பப் பெற்றுள்ளது.
இது குறித்து வங்கி புதன்கிழமை வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யெஸ் வங்கியின் 13.18 சதவீத பங்குகளை சுமிடமோ மிட்சுயி பேங்கிங் காா்ப்பரேஷனுக்கு விற்பனை செய்வதன் மூலம் முதலீட்டைத் திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்தது. ரூ.8,888.97 கோடிக்கு இந்தப் பரிமாற்றம் நடைபெற்றது.
கடந்த 2020 மாா்ச்சில் யெஸ் வங்கியின் பங்குகளை வாங்கியதன் மூலம் அந்த வங்கியின் மிகப் பெரிய பங்கு உரிமையாளராக எஸ்பிஐ ஆனது. பின்னா் 2020 ஜூலையிலும் யெஸ் வங்கியிடமிருந்து கூடுதலாக பங்குகள் வாங்கப்பட்டன.
தற்போது 13.18 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட்ட பிறகும், யெஸ் வங்கியின் 10.8 சதவீத பங்குகள் தொடா்ந்து எஸ்பிஐ-யின் கைவசம் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.