Enable Javscript for better performance
கங்கையின் கோர தாண்டவம்! மீண்டுவரும் சிவனார் பூமி! (மினி தொடர் - நிறைவுப் பகுதி)- Dinamani

சுடச்சுட

    

    கங்கையின் கோர தாண்டவம்! மீண்டுவரும் சிவனார் பூமி! (மினி தொடர் - நிறைவுப் பகுதி)

    Published on : 02nd August 2013 09:11 AM  |   அ+அ அ-   |    |  

    sushantha

    14. (நிறைவுப் பகுதி) தொடரும் பயணம்!

    பெரிய காரணம் எல்லாம் இல்லை, தற்போது என்னிடத்திலோ அல்லது எனக்கு பின்பலமாகவோ எவ்வித அமைப்பும் இல்லை. அது ஒரு குறையும் அல்ல, தேவையும் அல்ல.

    கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும்

    நலம்தான் இலாத சிறியோற்கு நல்கி

    நிலம்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி

    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே என்பார் மாணிக்கவாசக சுவாமிகள்.

    அப்படி யாரோ கருணை கொண்டு என்னை ஆட்கொண்டதாலேயே இன்று வாழ்வும், ஆனந்தமும். குறைந்த பட்சம் கடந்த 1 மாத காலம் கேதாரோடு என்னை இணைத்து விட்ட அந்த அன்பு மனிதர்களுக்கு நான் என்ன செய்ய இயலும். ஆனாலும் என்னாலான சிறு பணியை நான் செய்யாவிடில் அவர்களுக்கான என் நன்றிகளை வெளிப்படுத்த இயலாது.

    அகத்தியரும், ஆதிசங்கரரும் நடந்த இந்த கேதாரத்தில். சமயக் குறவர்களான ஞானசம்பந்தரும், சுந்தர மூர்த்தி நாயனாரும் பாடல் பெற்ற இந்த கேதாரத்தில் ஆன்மீகத்தின் முகம் மாற வேண்டும் என்றே விரும்புகிறேன்.

    காவியுடை அணிந்தவர்கள் காசுக்காக கைகளை ஏந்தாது கண்மூடி ஜப, தபங்களில் முழ்கியிருக்கும் அற்புத நாளுக்காக பணி செய்ய காத்திருக்கிறேன். அத்தகைய மனிதர்களுக்காக அச்சூழலை உருவாக்கிட முயலுமானால் அதுவே என் குருநாதனுக்கும் அவனது பாரம்பரியத்திற்கும் நான் செய்யும் நன்றியாக அமையும்,

    இப்படித்தான் நமது மக்கள் இந்தியாவின் பல பகுதிகளில் தங்களது திருமடங்களின் கிளைகளை உருவாக்கி இருந்தனர். பல ஆதீனங்களின் கீழ் இவை இன்றும் இருக்கின்றன. ஆனால் அவற்றில் எல்லாம் சுத்தமாக வைத்திடக் கூட சரியான பணியாளர்கள் இல்லை. இந்தியா முழுவதும் கால்நடையாய் சுற்றியுள்ளேன்.

    sivanarboomi.jpg

    என்னை வெளிப்படுத்திக் கொள்ளாது இவற்றை மனதின் வலியோடு கவனித்து உள்ளேன். எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. பாரம்பரியம் மிக்க ஆதீனங்கள், திருமடங்கள்.. அவற்றின் இன்றைய நிலையை என்னை விட தாங்கள் நன்றாக அறிவீர்கள்.

    தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களுக்கு செல்ல வேண்டுமெனில் என்னிடம் குறைந்த பட்சம் ரூ 10 இருக்க வேண்டும். காரணம் செருப்புக்கும், இயற்கை உபாதைக்கு ஒதுங்குவதற்கும் காசு கொடுக்க இயலாவிடில்..? என் இறைவன் இருக்கும் பூமியை சுற்றி கழிப்பறையாய் மாற்றுவதில் எனது பங்களிப்பும் இருக்கும்.

    கோவிலே கூடாது என்பதல்ல கோவில் கொள்ளையடிப்பவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்பதுதான்! - இந்த வசனத்திற்காக கைதட்டிய கைகள் எல்லாம் இன்று அந்த கோவில் தரும் டென்டருக்காக கையேந்தி நிற்கின்றன.

    இப்பணிகளில் எவரோடு வேண்டுமானாலும் இணைய சித்தமாய் இருக்கிறேன். ஏனென்றால் இவையெல்லாம் நான் நினைத்தது போலவே 100 சதவிகிதம் நடந்து விடாது என்பது எனக்கு தெரியும். ஆனாலும் ஒரு விழிப்புணர்வு அலையை உருவாக்கவும், ஒரு சில சரியான முன்னுதாரங்களை உருவாக்கவும் இவை நிச்சயம் உதவும் என்றே கருதுகிறேன். ஆனால் இதற்காகவெல்லாம் நான் உயிரைக் (கொ)கெடுத்து வேலை செய்யப் போவதில்லை.

    ஏனெனில் சிவனெவன் என் சிந்தையுள் நின்று அவனருளாலே அவன் தாள் வணங்கி.. என்று பாடி விட்டேன். இதைத்தான் என்னை சந்தித்த உழவாரக் குழு பக்தர்களிடமும் தெரிவித்தேன். தங்களோடும் பகிர்கிறேன், நாம் நேசிக்கும் மண்ணில் சில மலர்ச் செடிகளை மென்மையாக நடத் தெரிந்தவர்கள் இறையருளால் ஒன்று கூடினால் ஆனந்தமாக நிகழ்த்தலாம்.

    காத்திருப்பது என்று முடிவாகிவிட்டது. அந்தக் காலத்தில் நாளைய காலத்தில் மலர்ந்திட சில அற்புத விதைகளையாவது விதைத்திடலாமே. அதுவும் இந்த மந்தாகினியைப் போல பிரவாகமாகி விழிப்பு உணர்வில் இந்த தேசத்தை, அதன் மக்களை விழிக்கச் செய்யட்டும்

    ஊழல், சோம்பேறித்தனத்திலும் திளைத்துப் போய், பொறுப்பு எடுத்துக் கொள்ளாமல் பழியை சுமத்திக் கொண்டிக்கும் இந்த தேசத்தை தூய்மைப்படுத்துவது சற்றேனும் அவசியம்

    சமீப காலமாக இந்த ஊழல் நதிகள் அடிக்கடி பெருக்கெடுத்து ஒடி வருவதால், அப்பாவி மக்கள் அதன் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த மக்களும் அந்த நதிகளைப் பற்றிய கவனமின்றி தங்கள் போன போக்கிலேயே சென்று கொண்டிருப்பதால்தான்.

    இப்போதாவது விதைகளை விதைப்போம். ஏனென்றால் இது இந்த மண்ணில் விளைந்த மரத்தின் கனிகளில் இருந்து வந்த விதைகள். அவை நிச்சயம் வளர்ந்து நிழல் பரப்பும். அற்புதமான கனிகளை தரும். அவற்றின் கருணயில் நம் எதிர்கால சந்ததியினர் ஆனந்தமாய் ஆன்மீகமாய் வாழ்வர்.

    அது சரி இவற்றையெல்லாம் செய்திட அரசாங்கம் இருக்கிறது, திருமடங்கள் இருக்கின்றன. நீங்கள் ஒரு தனிமனிதனாக என்ன செய்து விட முடியும் என்று கேட்கலாம்.

    உண்மைதான். ஆனால் நீங்கள் வகைப்படுத்தும் அனைத்திலும் ஒரு தனி மனிதனே அமர்ந்துள்ளான். அவனிடத்தில் அதிகாரம் உள்ளது. கட்டமைப்பு உள்ளது ஆனால் நீங்கள் அறிந்தவற்றையெல்லாம் பேசி நேரம் வீணடிக்க வேண்டாம்.

    ஏனென்றால் என்னிடத்தில் இந்த நொடி மட்டுமே உள்ளது. இன்றைய நாளின் எந்த நொடி வேண்டுமானாலும் என்னுடைய இறுதியானதாய் இருக்கலாம். அந்த நேரம் தங்களுக்கு நன்றியோ அல்லது விடைபெற சொல்வதோ இயலாமல் போய்விடும்.

    இதுதான் லைப் ஆஃப் மை

    ஆனால் அதற்காக கவலைப்பட எல்லாம் நேரமில்லை. ஏனென்றால் இது காத்திருக்கும் காலம். கனவுகளை என் கர்ப்பத்தில் ஆனந்தமாய் சுமந்திருக்கும் காலம். இந்த விதைகள் நாளை பிரசவிக்கப் போகும் அந்தக் குழந்தைக்கு ஊட்டச்சத்து.

    அதனால் என் கடன் பணி செய்து கிடப்பதே. உங்களுக்கு இடமில்லையே என்று ஏங்க வேண்டாம். என் பூமி பரந்தது. எல்லைகளற்றது. நீங்கள் எதை விதைத்தாலும் அதை மக்கச் செய்து மடியச் செய்து ஒரு மலராய் மலரச் செய்வது.

    ஏனென்றால் இந்த மண்ணுக்குள் மரணமடைந்த பின்னரும் எண்ணற்ற ஞானிகளும் சித்தர்களும் தங்கள் பணிகளை எவரும் அறியாமல் தொடர்ந்து வருகின்றனர். அவர்களது ஆசியைப் பெறுவதற்காகவே இந்த மண்ணில் பணி செய்ய விருப்பம் கொள்கிறேன்.

    பல்வேறு வகையில் தொடர்பு கொண்டு ஊக்கமளித்த எண்ணற்ற வாசகர்களுக்கும், பக்தர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைக் கூறி கேதாரத்திற்கான எனது பயணத்திற்காக காத்திருந்தாலும், வாழ்க்கை பயணத்தில் பயணிக்கிறேன்...

    சுவாமி சுஷாந்தாவை இமெயிலில் தொடர்பு கொள்ள: swami.sushantha@gmail.com

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp