சுடச்சுட

    

    ஆண்டு தோறும் சென்னை தீவுத் திடலில் தமிழக அரசால் நடத்தப்படும் சுற்றுலாப் பொருட்காட்சிக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு தான்.

    அதற்கு காரணங்கள் பல...

    குறைந்த நுழைவுக் கட்டணம்

    தகவல் அளிக்கும் அரங்கங்கள்

    பொழுதுபோக்கு அம்சங்கள்

    உணவகங்கள்

    பல்வேறு கடைகள்.. இவையெல்லாம் ஒருங்கே அமையப் பெற்றிருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கானோர் சுற்றுலாப் பொருட்காட்சிக்கு வருகை தருகின்றனர்.

    வார நாட்களில் தினமும் பகல் 3 மணி முதல் இரவு 10 வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சுற்றுலாப் பொருட்காட்சி திறந்திருக்கும். இதற்கு வருகை தரும் பெரியோருக்கு ரூ.15ம், 5 முதல் 10 வயதுக்கு உட்பட்ட சிறியவருக்கு ரூ.10ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    அங்குள்ள கலையரங்கில், தினமும் இரவு 7 மணிக்கு பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு ஓட்டல் சார்பாக விதவிதமான உணவு வகைகளும் விற்பனைக்கு உள்ளன.

    மத்திய, மாநில துறைகளின் அரங்கங்கள்

    பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளவைகளில் மத்திய, மாநில துறைகளின் அரங்கங்கள் தான் சிறப்பானவை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒவ்வொரு துறைக்கும் ஒரு அரங்கு என்று மிகச் சிறப்பாக அமையப் பெற்றுள்ளது. சுகாதாரத் துறை அரங்கில், மக்கள் பயன்பெறும் வகையில் உண்மையான மனித உடல் உறுப்புகள் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதுபோல வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், அரிதான மூலிகைச் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பயன்பாடுகளும் அதில் விளக்கப்பட்டுள்ளது. இதுபோல, மின்சாரத் துறை, பட்டுப்புழு வளர்ப்பு, வேளாண் துறை, ரயில்வே துறை, எரிசக்தித் துறை போன்றவைகளின் அரங்குகளைப் பார்ப்பதன் மூலமாக, பொதுமக்களுக்கு பல்வேறு தகவல்கள் தெரிகின்றன.

    இந்த அரங்கங்களிலேயே, மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்த பல்வேறு பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மிக அரிய, கைவேலைப்பாட்டுப் பொருட்களும் தரமானவையாக உள்ளன.

    பொழுதுபோக்கு அம்சங்கள்

    பெரிய ராட்டினம், படகு போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளமாக உள்ளன. குழந்தைகளுக்கு ஏற்ற விளையாட்டு அம்சங்களும், பெரியவர்களுக்கான விளையாட்டு அம்சங்களும் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பெரிய அம்யூஸ்மென்ட் பூங்காக்களுக்கு பல நூறு ரூபாய்களைக் கொடுத்தால்தான் இவற்றில் விளையாட முடியும் என்ற பட்சத்தில், இதுபோன்ற விளையாட்டுக்கள் சுற்றுலா பொருட்காட்சியில் அமைந்திருப்பது வரவேற்புக்குரியதாகும்.

    கடைகள்

    கிடைப்பதற்கு அரிதான பொருட்களும், கைவேலைப்பாட்டுப் பொருட்களும் இங்கு விற்பனையாகின்றன. கைத்தறி சேலை முதல், வாசனைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், தலையணை முதல் மேஜை விரிப்புகள் வரை இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை என்று கூறலாம். பல்வேறு வகையான ஊறுகாய்கள், அப்பள வகைகள், ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனை பொருட்களும் இங்கு தாராளமாக விற்பனையாகின்றன. சில பொருட்கள் விலை மலிவாகவும் கிடைக்கின்றன. பல கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றன. தேவையற்றப் பொருட்களை வாங்காமல், அங்கு மட்டுமே கிடைக்கும் என்பது போன்ற பொருட்களை தேர்வு செய்து வாங்க வேண்டும்.

    பொருட்காட்சி என்றாலே..

    பொதுவாக ஆண்டு தோறும் பொருட்காட்சிக்கு செல்பவர்களுக்கு பொருட்காட்சி என்றாலே என்ன நினைவுக்கு வரும் என்று கேட்டால்.. அங்கு விற்கப்படும் பெரிய அப்பளமும், சிறிய வகை ரயில் பயணமும்தான். பல ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5க்கு விற்பனையான அப்பளம் தற்போது ரூ.30க்கு விற்பனையாகிறது. ரயில் சேவையும் அதுபோலவே. ரூ.5ல் ஆரம்பித்து தற்போது 15 ரூபாய் கட்டணமாக உள்ளது. சுற்றுலாப் பொருட்காட்சியின் பாதி இடங்களை இந்த ரயிலில் பயணம் செய்தால் பார்த்துவிடலாம்.

    இதுமட்டுமல்ல.. நீங்கள் வாங்கும் நுழைவுக் கட்டண ரசீதில் உள்ள எண்ணை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு நாள் இரவும் 9 மணிக்கு குலுக்கல் நடைபெறுகிறது. அதில் நீங்கள் வாங்கிய எண் தேர்வானால் உங்களுக்கு சிறப்பான பரிசும் உள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

    மேலும்.. இந்த ஆண்டு சுற்றுலாப் பொருட்காட்சியில் அரிமா சங்கம் சார்பில் இலவச மருத்துவப் பரிசோதனைக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. கண் பரிசோதனை, சர்க்கரை, ரத்த அழுத்தம், பல் பரிசோதனைகளும் இலவசமாக செய்து கொள்ளலாம். இதில் ரத்த தானம் செய்ய முன்வருபவர்களும் ரத்த தானம் அளிக்க சிறப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு சுற்றுலாப் பொருட்காட்சி ஜனவரி மாதம் துவங்கி மார்ச் மாதம் வரை சுமார் 70 நாட்கள் நடைபெற உள்ளது. அதற்குள் ஒரு நாளாவது சென்னைவாசிகள் பொருட்காட்சிக்கு சென்றுவிட்டு வந்தால் மேற்கூறிய விஷயங்களைக் கண்கூடாக காணலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai