சுடச்சுட

  

  பொதுவாக சென்னையில் சுற்றிப் பார்க்க என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு, சென்னை வாசிகள் கூறும் சில இடங்கள், மெரினா பீச், அண்ணா நகர் டவர், பெசன்ட் நகர். அவ்வளவே. அப்புறம் என்று கேட்பவர்களுக்கு.. ம்ம்ம் என்று மௌனமே பதிலாக அமையும். ஒரு சிலர் யோசித்து யோசித்து இன்னும் ஒரு சில இடங்களைக் கூறலாம். ஆனால் உண்மையில் சுற்றிப் பார்க்க சென்னையில் ஏராளமான இடங்கள் உள்ளன.

  அவற்றை உங்களுக்குக் கூறவே இந்த கட்டுரை. வாருங்கள் சுற்றிப் பார்க்கலாம்.

  மதராஸப் பட்டிணமாக இருந்து மெட்ராஸ் என்று ஸ்டைலாக பெயர் பெற்று, தற்போது செல்லமாக சென்னை என அழைக்கப்படும் இந்த நகரம் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது. தற்போது இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் வந்து வசிப்பவர்களால், இது ஒரு பாரதவிலாஸாக மாறிவிட்டது.

  அண்ணாநகர் டவர்

  சென்னையில் உள்ள மிகப்பெரிய மற்றும் உயர்ந்த டவரைக் கொண்ட பூங்கா இதுதான். இது அண்ணா நகர் ரவுண்டானாவுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. இதில் உள்ள டவரின் உச்சியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் சென்னையின் பரந்து விரிந்த அழகைக் காணலாம். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த டவரில் ஏற முடியும். பூங்கா மிக அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர ஏராளமான பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்துள்ளது.

  சென்னைப் பல்கலைக்கழகம்

  சென்னைப் பல்கலைக்கழகத்தில் படிக்கத்தான் முடியும், பார்க்க என்ன இருக்கிறது என்று கேட்கலாம். இருக்கிறது. அங்குள்ள கம்பீரமான கட்டடங்களின் அழகைக் காணலாம். இது அண்ணா சதுக்கத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் என்பதால், சிவப்பும், சந்தன நிறமும் கலந்த கற்கலால் உருவாக்கப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கட்டடங்களை சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நிச்சயம் காண வேண்டும்.

  வள்ளுவர் கோட்டம்

  வள்ளுவர் கோட்டம் சென்னையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கிய இடத்தை வகிக்கிறது. இதில் பல்வேறு சிறப்புக்கள் உள்ளன. திருக்குறளின் அனைத்துப் பாக்களும் இங்கு கல்வெட்டுக்களாக பொறிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கோட்டத்தின் மேற்புறத்தில் ஒரு வள்ளுவரின் சிலை அமைந்துள்ளது. இதனுள் செல்ல திருவள்ளுவர் தினத்தன்று மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற நாட்களில் வெளியில் இருந்து பார்க்கலாம். கல்லால் செய்யப்பட்ட மிகப்பிரம்மாண்டமான தேர் ஒன்று இங்கு அமைந்துள்ளது. இந்திய சிற்பக் கலைக்கு ஒரு சான்றாகவும் இது விளங்குகிறது. இது தவிர, மிகப்பெரிய அரங்கம், பூங்கா என சிறப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது வள்ளுவர் கோட்டம். இது நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது.

  கிண்டி சிறுவர் பூங்கா

  சென்னையின் முக்கிய பூங்காக்களில் கிண்டி சிறுவர் பூங்காவும் ஒன்று. நகரத்துக்குள் அமைந்த மிகப்பெரிய உயிரியல் பூங்காவும் இது என்பது சிறப்புக்குரியது. பல வகையான பறவைகள், விலங்குகள், முதலைகள், குரங்கு, மான் என இந்த உயிரியல் பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது. குழந்தைகளுக்கு விளையாட சிறந்த இடமாகவும் இது திகழ்கிறது. இதனை ஒட்டி அமைந்துள்ள பாம்புப் பண்ணையும், பாம்புகளைப் பற்றி அறிந்து கொள்ள வழி வகை செய்கிறது. இங்கு விலங்குகள் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

  விவேகானந்தர் இல்லம்

  1842ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த விவேகானந்தர் இல்லம், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தனியார் வசம் இருந்தது. பிறகு அதனை தமிழர் ஒருவர் வாங்கியிருந்தார். சிகாகோ உரைக்கு பிறகு 1897ஆம் ஆண்டு சென்னை வந்த விவேகானந்தரின் நினைவாக, இந்த இல்லத்தை அரசு கைப்பற்றி அதற்கு விவேகானந்தர் இல்லம் என்று பெயரிடப்பட்டது. இதில் விவேகானந்தரின் உருவச் சிலையும் அமைந்துள்ளது. இங்கு புதன்கிழமை விடுமுறை விடப்படுவது வழக்கம்.

  அண்ணா சதுக்கம்

  மெரினா பீச்சுக்கு வரும் எந்த ஒரு சுற்றுலாப் பயணியும் அண்ணா சதுக்கத்தையும், எம்ஜிஆர் சமாதியையும் பார்க்காமல் செல்ல மாட்டார்கள். அறிஞர் அண்ணாவின் நினைவிடமும், எம்.ஜி.ஆரின் நினைவிடமும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த தலமாகும்.

  பாரதியார் நினைவு இல்லம்

  சுதந்திர போராட்டத்துக்காக தனது இலக்கியத் திறனை வெளிப்படுத்திய கவிஞர் சுப்ரமணிய பாரதியாருக்கு, தமிழக அரசு திருவல்லிக்கேணியில் நினைவு இல்லத்தை அமைத்துள்ளது. இந்த வீட்டில் பாரதியார் சில ஆண்டுகள் வாழ்ந்தார். அவரது நினைவாக இந்த வீட்டினை தமிழக அரசு நினைவு இல்லமாக பராமரித்து வருகிறது.

  நினைவிடங்கள்

  மந்தைவெளியில் அமைந்துள்ளது அம்பேத்கர் மணி மண்டபம். இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கருக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடம் பொதுமக்களுக்கு பார்வையிட நல்ல இடமாகும். அகிம்சையை மக்களுக்கு அறிவுறுத்திய மகாத்மா காந்தியின் நினைவிடம் கிண்டியில் அமைந்துள்ளது. இங்கு அவரது உருவச் சிலை அமைந்துள்ளது. எல்லா நாட்களும் இந்த நினைவிடம் திறந்திருக்கும். கிண்டி சிறுவர் பூங்காவுக்கு அருகே இது அமைந்துள்ளது. கிண்டியில் அமைந்துள்ள மற்றொரு நினைவிடம் கல்விக் கண் திறந்த காமராஜரின் நினைவிடமாகும். தமிழக்ததில் 9 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர், இவரது காலத்தில்தான், இலவசக் கல்வியும், பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தவிர தமிழ் மொழிக்காக போராடிய மொழிப்போர் தியாகிகள் மண்டபமும், ராஜாஜி நினைவு மண்டபமும், தியாகிகள் மணி மண்டபமும், கிண்டியில் அமைந்துள்ளன. பெரியார் நினைவிடம் சென்னை வேப்பேரியில் உள்ளது.

  சுற்றிப்பார்க்க இன்னும் பல இடங்கள் உள்ளன. அடுத்த இதழில் சந்திப்போம்...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai