Enable Javscript for better performance
கங்கையின் கோர தாண்டவம்! மீண்டுவரும் சிவனார் பூமி! (மினி தொடர் - பகுதி 4)- Dinamani

சுடச்சுட

    

    கங்கையின் கோர தாண்டவம்! மீண்டுவரும் சிவனார் பூமி! (மினி தொடர் - பகுதி 4)

    By சுவாமி ஸுஷாந்தா (இமயத்தில் இருந்து...)  |   Published on : 18th July 2013 02:43 PM  |   அ+அ அ-   |    |  

    sivanarboomi.jpg

    4. பிரளயத்தின் துவக்கம் – தூத்கங்காவின் பிரவாகம்

    மழை கேதாரத்தை கொஞ்சம் குளுமைப்படுத்தி இருந்தது. பாதைகளில் ஒடும் மழைத் தண்ணீர் சாக்ஸ்களை ஈரப்படுத்தி கால்களில் ஜில்லிட்டு உறைய வைத்தது. இந்த சூழ்நிலையிலும் இப்பகுதி மக்களும், நேபாளிகளும் வெறுங்கால்களில் நடந்து பழகி இருந்தனர். நானோ தடுமாறிக் கொண்டு இருந்தேன். குளிர் பெரிதாக பிரச்னை தராவிட்டாலும் தண்ணீரின் குளுமை நரம்புகளை வலிக்க வைத்தது.

    இன்னும் சில தினங்களில் அப்பகுதி மக்களைப் போலவே நானும் வெறும் காலில் நடக்கும் அளவு தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்தேன். ஏனென்றால் என் ஈரமான சாக்ஸ்கள் காய்வதற்கான வாய்ப்பை சூரியனும் தரவில்லை. ஆனால் அதற்கான வாய்ப்பு மழைக் காலமான ஜூலை மாதத்தில்தான் வரும் என நினைத்து இருந்தேன்.

    ஆனால் மந்தாகினியும் மழையோடு கூட்டு சேர்ந்ததை அறியாமல் போனேன். அவர்கள் அருளால் ஐஸ் தண்ணீரில் வெறுங்காலில் நடக்கும் வாய்ப்பு அவ்வளவு சீக்கிரம் வந்து விடும் என்று நான் நினைக்கவில்லை. அதுவும் அன்றைய தினமே ஒரு புதிய செருப்பையும், குடையையும் எனக்கு அளிக்கப்பட்டபோது…………………

    ஒரு பிரளயத்திற்கு விதை போட்டுக் கொண்டிருப்பதை அறியாமல் வாழ்க்கை ஆனந்தமாய் நகர்ந்தது. அதை அமைதியாக ஓடிக் கொண்டிருந்த நதிகளின் நீர்த்துளிகள் பாறைகளில் மோதி அறிவித்ததை உணர்ந்திட யாருமின்றி அவரவர் உலகில் மூழ்கி இருந்தனர்.

    சாக்ஸ் மட்டுமின்றி ஷுவும் ஈரமாகி விட்டிருந்த படியால் ஐஸ் தண்ணீரில் நனைந்த எனது கால்களின் வலி உணர்ந்து அங்கிருந்தவர் ஒரு ஜோடி செருப்புக்களை வாங்கித் தந்தார்.. தொடர் மழையால் நதியில் நீர்மட்டம் அதிகரிக்க ஆரம்பித்ததை என்னால் காண முடிந்தது.

    கேதார்நாத் கிராமத்தின் நுழைவாயிலை அடைய உதவும் இரும்புப் பாலத்தின் அருகே தூத் கங்கா என்ற பால் கங்கை பிரவாகமெடுத்து வந்து மந்தாகினியுடன் கலக்கும். இது கேதார்நாத்தின் இடதுபுறம் அமைந்திருந்கும் மலைத்தொடரின் மேல் இருக்கும் வாசுகி தால் என்ற ஏரியில் இருந்து வழிந்து வருகிறது. பரவசம் கொள்ள வைக்கும் பால் வண்ணத்தில் இருந்து வரும் இந்தச் சிறு நதி பிரவாகமாக மலையின் பாறையில் இருந்து விழுந்தது.

    தொடர் மழையினால் இந்நதியின் வண்ணம் பழுப்பு நிறத்திற்கு மாற ஆரம்பித்தது. மந்தாகினியிலும் நீர்மட்டம் உயர்ந்து வருவதைக் கவனித்தேன். 13ம் தேதி வந்த பக்தர்கள் மழையின் காரணமாக திரும்ப முடியாமல் அங்கேயே அடைக்கலம் புக ஆரம்பித்தனர். 14ம் தேதி மாலை மழை நின்றிருந்த 1 மணி நேரம் மட்டும் ஆரம்பித்த ஹெலிகாப்டர் சேவையில் தில்லி வாழ் தமிழர்கள் சிலர் உட்பட ஒருசிலர் திரும்ப முடிந்தது.

    ஜுன் 14ம் தேதி காலையே தூத் கங்கா முழுவதுமாக காப்பி வண்ணத்தில் கங்காவாக மாறி இருந்தது. மந்தாகினியில் நான் கடந்த ஒரு மாதமாக தரிசித்த பெரிய பெரிய பாறைகள் தண்ணீருக்குள் தன் அடையாளத்தை மறைக்க ஆரம்பித்து இருந்தன.

    ஜுன் 15ம் தேதி காலை கேதாரநாத்தின் அடிவாரமான கௌரிகுண்டில் இருந்து கீழே 45 கி.மீ., தொலைவில் உள்ள குப்தகாசி அருகே 7 கி.மீ., தொலைவில் குண்ட் என்ற இடத்தில் தண்ணீர் வெள்ளப் பெருக்கு அதிகமானதில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் கிடைத்தது.

    மழை இடைவிடாது பெய்ததால் கௌரிகுண்டிலிருந்து கேதாருக்கு பக்தர்கள் வருவது நின்று போயிருந்தது. கேதார்நாத்துக்கும் குப்தகாசிக்கும் இடைப்பட்ட ராம்பாடா, சோன்பிரயாக், சீதாபூர், ராம்பூர், பாட்டா ஆகிய பகுதிகளில் தங்கியிருந்த பக்தர் கூட்டம் எந்தப் பக்கமும் செல்ல முடியாமலர் மாட்டித் தவித்தது.

    அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிவதை உள்ளுர் மக்களின் தொலைபேசித் தகவல்களில் அறிய முடிந்தது. அளவுக்கு அதிகமான கூட்டத்தாலும் ஒவ்வொரு அறையிலும் சாதாரணமான எண்ணிக்கையைக் காட்டிலும் இரு மடங்கு மக்கள் ஒடுங்க வேண்டிய சூழல் இருந்தது.

    கேதார்நாத்தில் புதிய பக்தர்கள் வராவிடினும் ஏற்கெனவே வந்தவர்கள் வெளியேற முடியாமல் தவிக்க ஆரம்பித்தனர். வானிலை அறிவிப்பில், மழை இன்னும் தீவீரமடையும் என்று மொபைல் போன் தகவலில் அறிந்தேன்.

    அத்தனை பக்தர்கள் அங்கேயே இருந்த போதும் முதல் முறையாக ஆரத்தி சமயத்தில் ஆலயம் மிக மிக சொற்பமான அளவில், பக்தர்களின் கூட்டமின்றி நடந்தது. மழையின் காரணமாக மக்கள் தங்கள் அறைகளிலேயே முடங்கிக் கிடந்தனர்.

    கேதார்நாத்தில் என்னைச் சந்தித்துச் சென்ற பல்வேறு யாத்ரீகர்கள் பத்ரீநாத், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் இருந்து தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டு வெள்ளப் பெருக்கைத் தெரிவித்த படி இருந்தனர்.

    நிலச் சரிவினால் பாதிக்கப்பட்டு பாதைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் தடைப்பட்டு இருப்பதாக சிலர் பத்ரிநாத்தில் இருந்து தெரிவித்தனர். மேலும் இதிலிருந்து வெளியேற என்ன செய்வது என்று கேட்டார்கள்.

    ஹிமாலயத்தில் யாத்திரை மேற்கொண்டால் இதெல்லாம் சகஜம்தான் என்று சொன்ன நான், பாதை முழுவதுமாக தடையில்லாமல் செல்லும் வரை அவர்களை அங்கேயே தங்கச் சொன்னேன். அவர்களோடு இருந்த டிரைவர் என்னை நன்கு அறிந்தவர் என்பதால் அவர் சொல்படி கேட்குமாறு சொன்னதோடு, அவசரப்பட்டு புறப்பட்டு வந்து நடு வழியில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினேன்.

    அடுத்த நாள் ஜுன் 16ம் தேதி மந்தாகினி உக்கிரம் பிடித்தவள் போல தன் உயரத்தை பெருமளவு அதிகரித்து இருந்தாள். போதாக்குறைக்கு பழுப்பு கங்கையாக மாறிய தூத் கங்காவும் தன் பங்கை இணைத்து கேதார் நகர இணைப்புப் பாலத்தை தொடும் முயற்சியில் இறங்கியதைப் போல பாலத்திற்கு வெறும் 1 அடிக்கும் சற்று மேலே பிரவாகமெடுத்து இருந்தது

    தொடர் மழையினால் எங்கும் ஈரம். நான் தங்கியிருந்த மஹாராஷ்ட்ரா மண்டலின் கேன்டீனில் இருந்து கேதார் பாலத்தையும் அதன் கீழ் செல்லும் நதியின் பிரவாகத்தையும் கவனித்துக் கொண்டு இருந்தேன்.

    அப்போது பாலத்தின் கீழ் ஏதோ உடைந்து விழுந்த சப்தம் நதியின் இரைச்சலை மீறி காதில் விழுந்தது. நதியின் ஸ்பரிசத்தில் பாலத்தின் பலகை உடைந்தது போன்று எனக்கு மனப் பிரமை. ஆனால் விழுந்தது பாலத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த 4 பேர் தூக்கிச் செல்லும் டோலி.

    பாலத்தின் மேல் மக்கள் நடந்து கொண்டிருப்பதை சுட்டிக் காட்டி, பாலம் உடையவில்லை என்று உள்ளுர்வாசியான லோகேஷ் கர்ணாடகி எனக்கு விளக்கிக் கொண்டிருந்தார். அவரது பதிலால் நான் திருப்தியடைந்தாலும் காதில் கேட்ட அந்த சப்தம், கண்கள் பிரமை கலந்து பாலம் உடைந்தது போன்று எண்ணத்தைத் தொடர்ந்து என்னுள் உருவாக்கியது.

    மாலை 5 மணி ஆனதால் ஆரத்திக்கு ஆலயத்துக்குச் சென்றேன். நானும் இறையனாரும் மட்டும்தான் என்று சொல்லும் அளவுக்கு வேறு யாரும் இல்லை. மழையின் காரணமாக ஆரத்தி 15 நிமிடங்களுக்கு முன்னதாக துவங்கியது.

    எப்போதும் தவறாது வந்து விடும் கேதார் பாபா என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் சந்திரகிரி சுவாமிகளும் ஆரத்தியின் சரியான நேரமான 7,30 மணிக்கு வந்தாலும் அன்றைய தினம் என்னவோ சீக்கிரமாக ஆரத்தியை துவங்கியதால் அவரது வருகை காலதாமதமான ஒன்றாகவே தோன்றியது.

    கீழே நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் கேதார்நாத் கடைகளும், தங்குமிடங்களும் ஜெனரேட்டர் உதவியால் இரு தினங்களாக வெளிச்சம் பெற்று வந்தன. ஆரத்தி முடிந்து மஹாராஷ்டிரா மண்டலுக்கு வந்த போது சூடாக கிச்சடி பெற்றேன்.

    தங்கியிருந்தவர்களுக்கும் அவர்களது அறைகளிலேயே சர்வீஸ் செய்ய பணியாளர்கள் தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போதுதான் மீண்டும் அந்த சப்தம்... அதுவும் நான் நின்று கொண்டிருந்த கேண்டீனுக்குக் கீழேயே! இம்முறை அனைவரும் அதை உணர்ந்தனர்.

    நிலச்சரிவு ஏற்பட்டதா அல்லது பூகம்பத்திற்கான அறிகுறியா எனத் தெரியவில்லை. சப்தமும், கட்டிடம் அசைந்த அசைவும் அனைவரையும் கேன்டீனை விட்டு உடனே வெளியேற வைத்தது. ஜெனரேட்டர் ஓடிக் கொண்டிருந்தாலும் வயர்கள் அறுந்து விழ ஆரம்பிப்பது போல தொங்கத் தொடங்கின. ஒரு சிலர் அந்த இருட்டிலும் ஜெனரேட்டரை நிறுத்துவதற்காக ஓடினர்.

    என்ன ஏது என்று புரிவதற்குள்ளாகவே அனைவரையும் கோவிலுக்கு ஓடச் சொல்லி கூவிக் கொண்டே ஓட ஆரம்பித்தனர். எந்த வழியாகக் கோவிலை அடைவது என்பதிலும், தன் மக்களை தேடுவதிலும், அழைத்துச் செல்வதிலும் நேரம் கடத்தியவர் பலர்.

    உள்ளுர் மக்களும், இந்த வட தேசத்தில் பரிச்சயமானவர்களும் நொடியில் அனைத்தையும் உதறிவிட்டு கோவிலுக்கு ஓடினர். இருட்டு வேறு மக்கள் பலரைத் தடுமாறச் செய்தது. யாத்ரீகர்கள் பலருக்கு நிலைமையின் தீவீரம் புரியவே இல்லை. சாவகாசமாய் நடக்க ஆரம்பித்தனர். உள்ளூர் மக்கள் விரட்டிய பின்னரே அவர்கள் விபரீதத்தை உணர ஆரம்பித்தனர்,

    காரணம் மந்தாகினி தன் பாதையை மாற்றி வருவதாக உள்ளூர்வாசி கூறியதுதான்.

    பழக்கமான மக்களைத் தவிர யாத்ரீகர்கள் பல திசைகளில் பிரிந்து ஓடினார்கள். ஆற்றில் அடித்து வரப்பட்ட பாறைகள் எழுப்பிய சப்தம் அடி வயிற்றைப் புரட்டி எடுத்தது.

    கேண்டீன் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதா அல்லது அந்தக் கட்டடத்தின் நடுக்கமும், சத்தமும் பூகம்பத்தின் ஆரம்பமா என்பது புரியவில்லை. மற்ற இடங்களில் நடுக்கம் உணராததால் மண்சரிவு என்றே எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது.

    கட்டடத்தின் கீழ்ப் பகுதியில் மண் சரிந்ததால், கட்டடத்தின் அசைவும், கற்கள் உருண்டதால் ஏற்பட்ட சத்தமும் இணைந்து அப்படி ஒரு கிலியை ஏற்படுத்தி இருந்தது...

    நேபாளி தர்மசாலா வழியாகப் புகுந்து, ஜோத்பூர் ஹவுஸ் வழியாகச் சென்று மார்க்கெட் பகுதியில் உத்தவ் குண்ட் என்கிற இடத்தில் கலந்திட எத்தனித்த போதுதான் அதைப் பார்த்து சில நிமிடங்கள் திகைக்த்து நின்றேன்....!

    (நாளையும் தொடரும்)

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp