
6. இரவின் ஆர்ப்பரிப்பில் கருணையின் காலடியில்
உத்தவ் குண்ட் அருகே சென்ற போது கோவிலுக்கு எதிரே உள்ள மார்க்கெட் ரோடிலும் தண்ணீர் முழுங்கால் அளவு பிரவாகம் எடுத்து இருந்தது.
பக்கத்தில் இருந்த கட்டடத்தின் மேல் ஏறி நின்று கொண்டேன். யார் எங்கே இருக்கின்றனர் என்பதை இருட்டில் பார்த்தறிய முடியவில்லை. நகரத்தின் முக்கிய வீதிகளாக கருதப்படும் இரு வீதிகளிலும் தண்ணீர் ஒடியது. மாடியில் இருந்து பார்த்த போது மழை வெள்ளம் மந்தாகினியின் பெயரை கெடுப்பது போல முழுங்கால் அளவு மார்க்கெட்டில் ஒடியது.
அரைமணி நேரம் கழித்து தண்ணீர் வடிந்தது. ஒரே மேடான பகுதியான கேதாரநாதனின் ஆலயத்திற்கு அனைவரும் ஓடினோம், அங்கோ அந்த முன் இரவில் ஆலயம் நிற்க இடமின்றி நிரம்பி வழிந்தது, நிலத்தில் இருந்து சாதாரணமாக 10 அடி உயர மேடையில் இந்த புகழ் பெற்ற ஆலயம் அமைந்திருந்தது.
ஏறக்குறைய யாருமே வேறு எங்கும் இல்லை என்கிற நிலையில் கோவிலுக்குள் நுழைய இடமின்றி மக்கள் கூட்டம் இரு வாசலையும் அடைத்து நின்றது. கையில் குடை இருந்ததால் நந்தி அருகே நின்றிருந்தேன். அடாது மழை பெய்தாலும் விடாது விளையாடும் கிராமத்து சிறுவர்களைப் போல ஏராளமான தெரிந்த முகங்கள் கிராமத்திற்குள் நுழைந்த மந்தாகினியை கண்டு மிரண்டு இருந்தன.
கோவிலுக்கு இடது புறம், பிர்லா ஹவுஸ், ராஜஸ்தான் பவன் ஒட்டி கோவில் மேடை உயரத்திற்கு தண்ணீர் ஓடியது. கோவிலுக்கு பின்னால் ஆதிசங்கரர் ஸ்தூபியை ஒட்டி பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையாக வரும் நிழற்குடை அமைந்திருக்கும். அதன் வழியாக மந்தாகினியும் புகுந்திருந்தாள்.
அந்த நிழற்குடைக்கும் மந்தாகினியின் இயல்பான நதி தீரத்திற்கும் இடையே பாரத் சேவா சங்கத்தின் ஆசிரமம் உள்ளது. இது கோவிலுக்கு பின்புறம். அதை ஒட்டி பத்ரி கேதார் சமிதியின் புதிய தங்குமிடம். அதில் போலிஸ்காரர்களும். சமிதியின் தொண்டர்களும் தங்கியிருந்தனர். அதன் முன்பகுதியில் கடந்த 1 மாதமாக பக்தர்களுக்கு அன்னதானம் அளித்து வரும் ஹரியானா மாநில பக்தர்கள் தங்கியிருந்தனர்.
அதை ஒட்டி அமைந்துள்ள மிகப் பெரிய சதுரமான கட்டிடம் ஆதிசங்கரரின் யோக சமாதி. இக்கட்டிடங்களின் தரைத்தளத்தின் உயரமும் இடைவெளி கடந்து நிற்கும் பக்தர்களின் தரிசனத்திற்கான நிழற்குடை வரிசையின் நிலமும் ஒரே சமதளத்தில் இருக்கும்.
ஆதிசங்கரரின் யோக சமாதி கோவிலுக்கு பின்புறம் இடது மூலையில் அமைந்திருந்தது. அதை ஒட்டி சிறு இடைவெளியும் பக்தர்களுக்கான கழிப்பறை கட்டடமும் இருந்தது. அதற்கு பிறகு நேர்வரிசையில் ஒரு மண்டபமும், அம்மண்டபத்தின் முன் சாது யாரோ ஒருவரின் சமாதியும் இருக்கும்.
கேதார்நாத் பாபா என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்ட சந்திரகிரி சுவாமிகள் அந்த இடத்திலேயே ஒரு கொட்டகை அமைத்து கடந்த 20 வருடத்திற்கும் மேலாக பக்தர்களுக்கு அன்னதானம் அளித்து வருகின்றார். இந்த இடத்தில் ட வடிவில் வரிசை வலது பக்கம் திரும்பி செல்லும்.
ரயில்வேயின் பயன்படுத்தாத ஒரு பிரம்மாண்ட மண்டபமும் அதை ஒட்டி டெலிபோன் டவர்களும் எக்ஸ்சேன்ஞ்சும் இன்னொரு மூலையை மறைத்து ஒரு ப வடிவை உருவாக்கி நிலையில் இருக்கும்.
கோவிலுக்கு வலது புறம் உள்ள ப வடிவிலான சமிதியின் வளாகத்திற்கு சென்றால் அங்கு பாரத ஸ்டேட் வங்கியின் கிளை, பிரதான் பூஜாரியின் தங்கும் அறை, சமிதியின் பணியாளர்கள் தங்கும் அறை, ஆலயத்தின் அலுவலகங்கள் மற்றும் கேதார்நாத் கோவிலின் மின்சார கட்டுப்பாட்டு விநியோக அறை ஆகியவை இருக்கும்.
தண்ணீர் வடிவது குறைய ஆரம்பித்து இருந்தாலும் ஊருக்குள்ளே தண்ணீர் வரத்து பீதியை ஏற்படுத்த தவறவில்லை. நான் கூட தொலைபேசியில் என்னை நன்கு அறிந்து இருந்த ஸ்வாமி நிசர்காவிடம் தொடர்பு கொண்டு நிலமையை தெரிவித்தேன்.
சில மணி நேரம் கழித்து நடுநிசியில் ராணுவ மற்றும் ITBP அதிகாரிகள், உள்ளுர் போலீஸ் அதிகாரிகள், பத்ரி கேதார் சமிதியின் பணியாளர்கள் மற்றும் உள்ளுர் வாசிகளான இளைஞர்கள் என அனைவரும் அடங்கிய கூட்டம் பணியில் இறங்கியது.
பாரத் சேவா ஆசிரமத்தில் தரைத் தளம் மற்றும் முதல் தளம் மண் மூடியிருந்தது. அங்கு வெள்ளத்தில் நனைத்து சிக்கியிருந்த மக்கள் சிலரை மீட்டு வந்தனர்.
ஆதிசங்கரர் யோக சமாதி நிலையிலேயே தன்னுடைய வாசஸ்தலத்துடன் மந்தாகினியில் பயணித்திருந்ததாக தகவல்கள் தெரிய ஆரம்பித்தன. சந்திரகிரி சுவாமிகளின் இடமும் அங்கிருந்தவர்களின் நிலையும் அறிய இயலவில்லை. ஆயினும் தண்ணீர் வடிந்து விட்டமையால் விடிந்தவுடன் அனைவரையும் கண்டு பிடித்து விடலாம் என்று கூறினார்கள்.
பாரத் சேவா ஆசிரமம், பிர்லா ஹவுஸ். ராஜஸ்தான் பவன், கான்பூர் ஹவுஸ் என பல இடங்களில் தங்கியிருந்த யாத்ரீகர்கள் தண்ணீர் உட்புகுந்த அந்த கணத்தில் தங்கள் குழுவைப் பிரிந்து இருந்தனர். நேரம் கழித்து கோவிலுக்கு அருகே ஒருசிலர் சேர்ந்து கொண்டாலும் பெரும்பாலானவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடங்களை விட்டு வெளியே வந்து தேட பயந்திருந்தனர் என்பது உண்மை.
2 மணி நேரம் கழித்து இரவு 11 மணி அளவில் நானும் கோவிலுக்குள் புகுந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வீரபத்ர சுவாமியுடன் பஞ்ச பாண்டவர்கள் வீற்றிருக்கும் அந்த முன்மண்டபத்தில் நூற்றுக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். குறைந்த ஆக்சிஜன் அளவாலும், பயத்தாலும் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் ஆக்சிஜன் சிலிண்டர் பந்தாடிக் கொண்டே இருந்தது.
தாகத்தால் தவித்தவர்களுக்கோ மழைநீரை நேரடியாக வானத்தில் இருந்து பாட்டிலில் பிடித்துத் தரவேண்டிய நிலை. வெள்ள தண்ணீர் அபிஷேகம் செய்யப் பெற்றதால் பலரும் மண்பூசி மரண பயத்தில் சிவனை தஞ்சம் அடைந்திருந்தனர். அவர்கள் தண்ணீரில் தப்பித்த கதை கேட்பவர்கள் அல்லது அவர்களை பார்ப்பவர்கள் மந்தாகினியை எதிர்த்து போராடும் எண்ணத்தை எப்போதோ கைவிட்டிருப்பார்கள்.
அந்த நேரத்தில்தான் உடம்பெல்லாம் சிராய்ப்புடன், முகத்தில் ரத்தக் காயங்களுடன் தலையும் உடம்பும் ஆற்று மண் பூசி ஓர் இளைஞன் கோவிலுக்குள் நுழைந்தான். அவன் தஞ்சம் புகுந்த விதம் நம்மை இயல்பாக அவனுக்கு இடமளிக்க வைத்தது.
கோவிலுக்கு பின்புறம் சந்திரகிரி சுவாமி அன்னதான கூட ஆசிரமத்திற்கு அருகே பணியாற்றிக் கொண்டு இருந்தபோது அடித்துச் செல்லப்பட்டு மந்தாகினியின் கருணையால் தப்பிப் பிழைத்ததாக ஒரிரு வார்த்தைகள் மட்டும் பேசினான்.
மரணம் அவனை மௌனமாக்கி இருந்தது போல எனக்குத் தோன்றியது. அவனோடு இருந்த சிலர் மந்தாகினியின் மரணப் பசிக்கு தன்னை இழந்திருப்பார்கள் என்பதை வாழ்க்கையின் நொடிகள் வார்த்தைகள் இன்றி புரிய வைத்தது. நிலைமையின் உக்கிரம் புரிந்தது. ஒருவேளை இன்னுமொரு முறை அவள் ஊருக்குள் தன் தடம் பதித்தால் என்ன கதியென எவராலும் யோசிக்க இயலவில்லை
கோவிலுக்குப் பின்புறம் தற்போது பெரிய இடைவெளியை உருவாக்கியிருந்தது. மந்தாகினியைப் போல மறுபக்கம் செல்லும் சிற்றோடை சரஸ்வதி பிரவாகம் எடுக்காவிட்டாலும் தன் அளவை அதிகரித்து ஓடிக்கொண்டிருப்பதாக கூறினார்கள்.
கேதாரத்திற்கு வலதுபுறம் மலையில் உள்ள காலபைரவன் சந்நிதிக்கு அருகே வழிந்து வரும் நீரோடை வெள்ளப் பெருக்கெடுத்து ஹெலிப்பேடுகளையும் அதன் அருகே இருந்த சில கடைகளையும் மந்தாகினியில் கரைத்து விட்ட கதையை இரவு 1 மணிக்கு கேள்வியுற்ற போது, மறுநாள் காலை ஹெலிகாப்டர் வந்தால் தப்பித்துவிடலாம் என்று எண்ணியவர்கள் சிந்தனைக்கு இடி தாக்கியது.
எப்படியாவது காலையில் முதல் வேலையாக கேதாரத்தை விட்டு வெளியேற பலர் எண்ணம் கொண்டனர். நேரம் ஆக ஆக மேலும் பலர் சகதி பூசி ஈரஉடைகளுடன் பாரத் சேவா ஆஸ்ரமத்தில் இருந்து காப்பாற்றி அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுக்கு முதலுதவி அளித்திட வேண்டி நாங்கள் குடையின் கீழ் மழையில் நிற்கலானாலோம். தூறலோ தனது ஆசீர்வாதங்களை இடைவிடாமல் தூவிக் கொண்டு இருந்தது...
(நாளையும் தொடரும்)