Enable Javscript for better performance
கங்கையின் கோர தாண்டவம்! மீண்டுவரும் சிவனார் பூமி! (மினி தொடர் - பகுதி 8)- Dinamani

சுடச்சுட

    

    கங்கையின் கோர தாண்டவம்! மீண்டுவரும் சிவனார் பூமி! (மினி தொடர் - பகுதி 8)

    By சுவாமி ஸுஷாந்தா (இமயத்தில் இருந்து...)  |   Published on : 22nd July 2013 02:50 PM  |   அ+அ அ-   |    |  

    sushantha

    8. அந்த மரண நொடிகள்

    அந்த நொடியில் அந்தக் காரியத்தை மட்டும் செய்திராவிட்டால் இன்று இக்கட்டுரை எழுதிட நான் இருந்திருப்பேனா என்பதை என்னால் ஊகிக்க இயலவில்லை. மந்தாகினியின் ஊழி வேகத்தில் மண்ணில் புதைந்திருப்பேனோ என்னவோ?

    மரணத்தை அறிந்திருந்தாலும் மரண நொடியை அறிந்திருப்பேனா என்பது சந்தேகம்தான். அதைவிட என் புத்தி என்ன யோசித்திருக்கும் ? என் நினைவில் என்ன நின்றிருக்கும் என்பது என்னைப் போலவே வேறு யாருக்கும் கூட தெரியாமல் போயிருக்கும்.

    70 அடி உயரத்திற்கு ஆலயத்தை ஒட்டி ஆக்ரோஷமாக பொங்கிய அலை போல் பெரும் சப்தத்தோடு பாறைகளையும் புரட்டி வந்த நதியை கண்ட என் கண்கள் கோவிலுக்கு மேலே இருந்தும் தண்ணீரை எதிர்பாத்து காணாமல் போனது. ஒரு வேளை அவ்வழியாகவும் சிறிதளவேனும் சிறிது நேரமேனும் வழிந்திருந்தாலும் தண்ணீரில் கலந்திருந்த மண்ணின் அடர்த்தி மரணத்தை சுவாசிக்க வைத்திருக்கும்.

    நந்தி மேடையில் நின்று கொண்டு கோவிலின் முன்புறம் அதனருகே நான் பிடித்து நின்றிருந்த இரும்பு தடுப்பு கம்பியும் தரையில் இருந்து கழன்றது, ஷணப் பொழுதில் இடுப்பளவு உயர்ந்த தண்ணீர் அடித்துச் சென்று விடாமல் இருக்க வேண்டி அதை விட குறைந்த உயரத்தில் குதிக்க வேண்டி, பெயர்ந்து விழுந்த தடுப்பு கம்பி தண்ணீருக்குள் மூழ்குவதற்குள் அதன் மேல் கால் வைத்து ஏறி கோவிலின் வாசலில் குதித்தேன்.

    sivanarboomi.jpg

    என்னோடு விரல் விட்டு எண்ணும் அளவு மனிதர்களும் அதே காரியத்தை தவறோ சரியோ என்று முடிவு செய்யாது செய்யத் துணிந்தனர். சிலர் அப்படி முயற்சி செய்தது தவறு என்பதைப் போன்று மந்தாகினி மறுநொடிக்குள் அவர்களுக்கு மரணத்தை பரிசளித்திருந்தாள்.

    எனக்கு பின்னால் என்ன நிகழ்கிறது என்பதையே உணர முடியாத அளவு அவளது ஆரவாரத்தில், உருண்டு வந்த பாறைகளின் சப்தத்தில், இடித்து விழுந்த கட்டிடங்களின் பேரிரைச்சலில் மனித ஓலங்கள் மௌனத்தை தழுவின.

    தண்ணீருக்குள் விழுந்த நான் தரையின் பிடிமானத்தால் ஏறி நின்று கோவில் படிக்கட்டில் ஏறி ஒரத்தில் சுவர் அருகே இருந்த கம்பியை பிடித்து நின்றேன். எகிறிக் குதித்த மக்களில் பலர் கூட்ட நெரிசலில் நிலத்தில் கால் வைக்க முடியாது போனதால் மந்தாகினியின் மண் கலந்த நீரில் மௌனமாய் மரணதேவனை நொடிக்குள் தழுவினார்கள்.

    ஒரு சிலரோ நின்று கொண்டிருந்தவர்களின் தலையில் தன் பாதம் வைத்து ஆசீர்வதித்து கோவிலின் சுவரில் பல்லிபோல் ஒட்டிக் கொண்டார்கள்.

    ஒரு சிலரோ நின்றிருந்தவர்கள் தலைமேல் கால் வைத்து நடந்து சென்று கோவில் வாசலில் செக்யூரிடி செக்கிங்காக வைக்கப் பட்டிருக்கும் மெட்டல் டிடெக்டர் பலகையில் தொங்கவும், நிற்கவும் ஆரம்பிக்க அது எடை தாங்காமல் உடைந்து விழுந்தது. அதன் அடியில் சிக்கியவர்கள் அப்போதே சிவபதம் பெற்றார்கள்.

    எப்படியோ தப்பித்து இருவர் அப்பலகைக்கு மேலே உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருந்த வெங்கல மணியில் கால் வைத்து முதுகை சுவரில் தாங்கி இறையருளில் பேலன்ஸ் செய்தார்கள்.

    இப்படியெல்லாம் செய்ய முயன்ற மேலும் பலர் சரியான முறையில் சில நொடிகளுக்குள் செய்திட முயலாமல் மக்களுக்கு நடுவே சிக்கி, நெரிசலில் உந்தப்பட்டு தடுமாறி என்ன நிகழ்கிறது என்று உணர்வதற்குள் மரணமடைந்தவர் பட்டியலில் தங்களை பதிவு செய்தனர்.

    தண்ணீருக்குள் குதித்த அந்த ஷணத்தில் கருணை கொண்டு யாரும் என் மீது தங்கள் பாத கமலங்களை பதிக்காததால் விழுந்து புரண்டு மண் அப்பி ஈரமடைந்து எழுந்த நொடி தாமதிக்காது இடது புறம் இருந்த இடைவெளியில் தடுமாறி கோவில் வாசலில் இருந்த கம்பியை பிடித்துக் கொண்டேன். உயரக் குறைவு காரணமாக மண் கலந்த தண்ணீர் மார்ப்பளவு ஒடீ ஒரு சில நிமிடத்தில் இடுப்பளவு குறைந்தது.

    அந்த கம்பியின் இருபுறமும் சுமார் 15க்கும் மேற்பட்டவர் தொங்கிக் கொண்டிருந்தததால் தண்ணீரின் வேகத்திற்கு எடை தாங்காமல் கழன்றுவிடுமோ என்ற அச்சத்தில் அனைவரும் இருந்தனர். நான் என் இறுதி நிமிடங்களை உணர்ந்தேன்.

    காலுக்கடியில் கோவில் வாசலில் உயிரற்ற உடல்கள் தண்ணீரில் புரண்டன. கம்பியை உதறிச் கோவிலுக்குள் செல்ல முயற்சித்தால் உத்திரவாதம் எண்ணத்தில் கூட தோன்றவில்லை. என்ன ஆனாலும் சரி அங்கேயே இருப்பது என்று முடிவு செய்தேன்.

    கோவிலுக்குள்ளும் சரி பக்கவாட்டு நுழைவாயில் வாயிலாக தண்ணீர் புகுந்து இருக்கும் போல, முன்புறம் இருந்து அறிய முடியவில்லை. உள்ளேயும் மரண ஓலங்கள் எழுந்து அடங்கியிருக்கலாம். இந்த பிரளயத்தின் சப்தத்தில் எதுவும் அறிய இயலவில்லை.

    ஒருவேளை மந்தாகினியின் ஆக்ரோஷம் தாங்காமல் கோவிலின் பின்புறம் பொத்தல் விழுந்தாலோ அல்லது ஏதாவது ஒரு பெரிய பாறை வந்து மோதினாலோ, சினிமாக்களில் வருவது போல தண்ணீர் எவரையும் விட்டு வைப்பதற்கு சாத்தியமே இல்லை என்று தோன்றியது. சிறுவயதில் பார்த்த நாடோடி மன்னன் திரைப்பட கிளைமேக்ஸ் தேவையில்லாத நேரத்தில் ஞாபகத்தில் தோன்றியது.

    ஓடும் தண்ணீரில் கம்பியை பிடித்துக் கொண்டு அவனது சன்னதியின் காலடியில் 1 மணி நேரம் கடந்து போயிருந்தது. தண்ணீரின் ஜில்லிப்பு கால்களில் ஒட்டிக் கொண்டு தசைகளை உறைய வைப்பது போல வலிக்கச் செய்தது. என் முயற்சிகள் அனைத்தையும் கைவிட்டு அமைதியானேன்.

    மனதில் நாவுக்கரசு சுவாமிகள் பாடிய சொற்றுனை வேதியன் சோதி வானவன் பாடல் உதித்தது. தப்பும் தவறுமாக தெரிந்த வரிகளை பாடிய போது நமச்சிவாயம் துணையாய் வந்து இனம் புரியாத அமைதியும் வெறுமையும் என்னைப் போர்த்தியது.

    மனதில் 90 நாட்கள் சாதனாவை முழுமை செய்யாது மரணம் தழுவுவது சிரமத்தை தந்தது. அந்த காலம் வரையிலாவது இவ்வுயிர் இருக்க கருணை புரிய மாட்டீர்களா என்ற சிந்தனை எழுந்தது. இறுதி நொடிகளை எப்படி கழிப்பது என்று தோன்றியபோது எப்போதோ வேண்டிய பிரார்த்தனை மனதில் நினைவிற்கு வந்து சத்குருநாதனை உரக்க அழைக்கலானேன்.

    தோடுடைய செவியன் விடையேறி வந்து என் குரலை கேட்டது போல என்னை கைபிடித்துக் கொண்டான். வெட்டவெளியில் ஓடும் நீரில் மண்ணும் சகதியும் மரணத்தோடு கலந்து நின்ற பரப்பில் நின்றிருந்த சுமார் ஒரு மணி நேரமும் இறுதி பேச்சாக. எண்ணமாக •• சத்குருநாதா •• என்பதையே உரக்க மந்திரம் போல் உச்சரித்துக் கொண்டிருந்தேன்.

    தண்ணீர் வடிந்தபோது கோவிலின் உயரம் காணாமல் போய் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மண் கொட்டி சமதளப்படுத்திவிட்டு சென்றிருந்தாள் மந்தாகினி.

    அடித்து வரப்பட்ட பாறைகளோடு ஆங்காங்கே மனித உடல்களும் வீசப்பட்டிருந்தன. கோவில் வாசலில் நெரிசலிலும் இடிபாடுகளிலும் சிக்கி இறந்து போனவர்களோடு ஒரு மனிதன் உயிர் கையில் பிடித்துக் கொண்டு இறைவனை அழைப்பதைப் போல கையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தான்.

    அங்கு நின்றிருந்த கூட்டத்தை விரட்டி அவனை சுற்றியுள்ள இடிபாடுகளை அகற்றி மண்ணை கலைத்து மறுஜென்மம் கொடுத்திட எதுவும் வசதியில்லாததால் அவனது முக்திக்காக ஈசனை நினைக்கத்தான் முடிந்தது. உயிர் தப்பிய மனிதர் கூட்டம் தங்களின் இறுதி கணங்களை எதிர் நோக்கி நின்றது.

    தினசரி கோவிலில் ஆரத்தியின் போது சந்திக்கும் சீக்கிய ரெஜிமென்டை சார்ந்த ராணுவ வீரர்களும் கோவிலின் உள் நுழைவாயில் சுவற்றோடு பல்லியாய் ஒட்டி நின்றனர். அதில் ஒருவர் என்னை கவனித்து படியின் ஓரத்தில் இருந்து இழுத்து நுழைவாயிலின் அருகே இடுக்கில் சில மனிதர்க்கு இடையே ஒளித்து வைத்தார்.

    மேலே தொங்கிய மணியின் மீது கால் வைத்து அமர்ந்திருந்த இருவரில் ஒருவர் அதிக நேரம் நிற்க முடியாமல் மணியின் மீது ஏறி நின்ற போது கீழிருந்த கூட்டம் மிரண்டு அலறி அவனை பணிய வைத்தது. கால் வைக்க கூட இடமில்லாது நின்ற அச்சிறு இடத்தில் செக்யூரிடி மிஷினின் பலகை அதன் மேல் நின்றவர்கள் பாரம் தாங்காது என் கணுக்கால் எலும்பை உடைத்து விடுவது போல அழுத்தியது.

    3 மணி நேரம் இப்போராட்டத்தில் உயிர்பிழைத்த நான். என் கால் எலும்பு முறிந்து விடும் என்றே எண்ணினேன். மழை குறைந்து நின்று போயிருந்தது. அதுவரை கேதாரத்தின் மிக உயரமான பகுதியாக இருந்த கோவில் சமதளமானதாலும், நதியின் நடுப் பகுதியாக வந்து விட்டதாலும், கோவிலுக்கு உள்ளேயும் மண்ணோடு மரணமும் புகுந்து விட்டதாலும் பாதுகாப்பை தேடி எஞ்சியிருந்த கட்டிடங்களில் தஞ்சம் புக ஆரம்பித்தனர்.

    என்னையும் காலபைரவர் கோவிலுக்கு சென்றுவிடுமாறு கூறி வெளியேறச் சொன்னார்கள். காரணம் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களேயானால் ஒருவேளை கோவில் கட்டமைப்பு தகர்ந்திட ஆரம்பித்தால் ஒரு சிலராவது தப்பித்திட வழியாவது இருக்கும்.

    கண்முன் உடல்கள் கிடக்கும் மயானத்தில், கண்களின் கருவிழியில் 70 அடி உயரத்திற்கு கோவிலின் இருபுறமும் தண்ணீரை ஆக்ரோஷமாக கண்ட காட்சி உறைந்துவிட்ட தருணத்தில் குருவின் திருவடி தவிர வேறு எந்த ஒரு இடமும் பாதுகாப்பென்று உணர இயலவில்லை

    ஆனாலும் பாதுகாப்பாக்காக இல்லாவிட்டாலும், பிணங்கள் மத்தியில் இருக்க முடியாது என்கிற காரணத்தால் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டி கோவிலில் இருந்து வெளியேற முடிவு செய்தேன்.

    (நாளையும் தொடரும்)

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp