Enable Javscript for better performance
கங்கையின் கோர தாண்டவம்! மீண்டுவரும் சிவனார் பூமி! (மினி தொடர் - பகுதி 9)- Dinamani

சுடச்சுட

    

    கங்கையின் கோர தாண்டவம்! மீண்டுவரும் சிவனார் பூமி! (மினி தொடர் - பகுதி 9)

    By சுவாமி ஸுஷாந்தா (இமயத்தில் இருந்து...)  |   Published on : 26th July 2013 01:02 PM  |   அ+அ அ-   |    |  

    sushantha

    9. பாதுகாப்பான இடம் தேடி?

    கோவில் பிரதேசம் தரைமட்டம் ஆகிவிட்டதாலும், நதியின் நடுவே வந்தது போலத் தோன்றியதாலும், நானும் கோவிலை விட்டு முன்புறம் வெளியே வந்தேன். நுழைவாயிலில் நிறையப் பேர் தங்கள் உடலை அங்கேயே விட்டுச் சென்றிருந்தார்கள்.

    கோவிலின் முன்புறமோ வேற்று கிரகத்தின் படம் பார்ப்பதுபோல் பாறைகள் இடம் பெயர்ந்து இருந்தன. பாதுகாப்பான இடம் தேடிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் பாதுகாப்பற்று வாழ்வதற்காக பரமனின் பூமியில் சில நொடிகள் நடந்தேன்.

    கண்கள் எதையும் பார்க்க மறுத்தன. நந்தி மேடையில் கண்ட பிரளயக் காட்சி கண்ணை விட்டு அகல மறுத்தது. பார்ப்பதை எதையும் பதிவு செய்யப் போராடியது. அகலத் திறந்த விழிகளில் ஆகாயமாய் வெறுமையை உணரமுடிந்தது. கால்கள் எங்கே இழுத்துச் செல்கின்றது என்பதே மனதுக்குப் புரியவில்லை.

    கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பழகிய பூமி என் பாதங்களுக்கு இப்போது சற்றும் பிடிபட மாட்டேன் என்று போராடுவதை கவனிக்க முடிந்தது. மரண அமைதி மனதைக் கிழித்தது.

    எவ்வளவு நேரம் இப்படி கழிக்க வேண்டும் என்பது புரியாமல் இருந்தது. பாதுகாப்பான இடம் கேட்டு அலைந்த யாத்ரீகர்களிடம் தெரிந்த மரணபயம், நம்மையும் மரணத்தை பற்றி சிந்திக்க வைத்தது. மறுநொடியும், மறுதினமும் மாயை என்பது போல் இல்லாத ஒரு விஷயமாய் மனதிற்கு தென்பட்டது.

    மந்தாகினி தான் கடந்து சென்ற போதே மனிதர்களின் மரண ஓலத்தையும் சேகரித்துச் சென்றுவிட்டதால் மயான அமைதி வானத்தில் போர்த்தியது. எல்லோருடைய கண்களும் மனமும் யாரையாவது தேடிக் கொண்டிருப்பதை உணர்த்தியது.

    இப்படி நெருங்கிய உள்ளங்கள் தேடிக் கொண்டு இருப்பதை உணர முடியாத அளவு ஆழத்தில் அமைதியாக அவர்கள் நெடுந் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர் என்றே நினைக்க முடிந்தது.

    7 கி.மீ., தொலைவில் உள்ள ராம் பாடாவிற்கும். 14 கி.மீ., தொலைவில் உள்ள கௌரி குண்ட்-டுக்கும் யாரும் தப்பித்தவறிக் கூட எச்சரிக்கை விடுத்திடக் கூடாது என்கிற நோக்கத்தில், டெலிபோன் அலுவலகங்களையும் தன் போக்கில் அடித்துச் சென்றிருந்தாள். எந்த நெட்வொர்கும் இல்லை. சமிதி மற்றும் ராணுவத்தின் தகவல் தொடர்பு அலுவலகங்களும் தொலைத் தொடர்பு சாதனங்களையும்கூட அவள் விட்டு வைக்கவில்லை.

    sivanarboomi.jpg

    நேற்றைய இரவைக் கழித்த அறை இருந்த சுவடே தெரியவில்லை. கோவிலுக்கு எதிரே மார்க்கெட் பகுதி மயானப் பகுதியாக மாறி இருந்தது. கட்டடங்கள் வேரோடு களையப்பட்டு இருந்தன.

    மழை சிறிதும் இல்லாத ஒரு தருணத்தில் தண்ணீர் இவ்வளவு ஆக்ரோஷமாகவும், 70 அடி உயரத்திற்கும் வந்தததால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வரலாம் என்ற எண்ணத்தை உருவாக்கி இருந்தது. முகத்தில் அப்பிய மண், சிறிது தொண்டைக்குள்ளும் புகுந்ததால் தாகத்தில் தொண்டைக் குழி வறண்டது. ஆனால் தண்ணீரோ இன்னமும் மண் கலந்து ஒடிக் கொண்டிருந்ததால் யாரும் குடிக்க இயலாத நிலை.

    கோவிலின் வலது புறம் இருந்த ஓம்காரேஸ்வர் ஆலயம், சமிதியின் அலுவலகம், பாரத ஸ்டேட் வங்கியின் கிளை, ஸமிதியின் பணியாளர்கள் அறை என அனைத்தும் இருந்த சுவடே தெரியாது மணல்மேடு ஆகியிருந்தது.

    ஒருமாத காலமாக சேர்ந்து இருந்த மஹாராஷ்ட்ரா மண்டலின் அன்பர்கள் என்ன ஆனார்கள் என்பதை உணர இயலவில்லை. என்னைப் போலவே அவர்களும் என்னைத் தேடிக் கொண்டு இருப்பார்கள் என்று உணர்ந்தாலும் இறையருளின் கையில் விட்டுவிட்டு அமைதியானேன்.

    கோவிலுக்கு இடதுபுறம் எதிரே தெரிந்த ஒரு மாடியில் பலர் நின்றிருப்பதைக் கண்டு அவர்களோடு நிற்கலாம் என்று சென்றேன். அப்போதுதான் கவனித்தேன் அந்த மாற்றத்தை! அனைத்து கட்டடங்களின் தரைத் தளம் மண்ணுக்குள் புதைந்திருந்தது.

    ஆங்காங்கே குவிந்திருந்த இடிபாடுகளுக்குள் தெரிந்த கைகளும் கால்களும் அவற்றுக்குள் சிக்கி உயிர் விட்டிருந்த மனிதர்களை தெரியப்படுத்தின. கோவில் முன்புறமும், அருகே இருந்த கட்டட இடிபாடுகளிலும் கண்ட மனித உடல் பாகங்கள் கடந்து போன வெள்ள நீரின் வலிமையை உணர்த்தியது.

    பிழைத்துக் கொண்டேனா அல்லது அடுத்த தவணைக்காக விட்டு வைக்கப்பட்டு இருக்கிறேனா என்பது என்னால் உணர முடியவில்லை. நிச்சயமற்ற நொடிகளில் சுவாமியிடம் மற்றும் தகவல் சொல்லிவிடலாம் என்று மொபைலை தேடினால்... அது டவர்களை அந்த வெள்ளத்தில் தொலைத்திருந்தது.

    ஒரு வழியாக பல்வேறு சாமான்கள் மேல் ஏறி மாடியில் குதித்தால் கோவிலின் ஏரியல் வியூ கண்களில் தெரிந்தது. கட்டடங்கள் எல்லாம் காணாமல் போய் கண்ணுக்கு எட்டிய வரை தண்ணீரோடு அடித்து வரப்பட்ட பாறைகள் ஆக்ரமித்து இருந்தன.

    மீண்டும் ஒரு முறை அதே அளவு தண்ணீர் வந்தாலும் சேதமின்றி செல்லும் வழியாக ஒரு 6 வழிச் சாலை கோவிலின் இரு புறமும் உருவாகி இருந்தது. இந்த ஒரே ஒரு விஷயம்தான் நாம் காப்பாற்றப்படும் வரை நிச்சயம் உயிரோடு இருப்போம் என்கிற நம்பிக்கையை தந்தது.

    அதற்குள் அந்த கட்டடத்தை அனைவரும் மீண்டும் காலி செய்ய ஆரம்பித்ததால் மீண்டும் அங்கிருந்து வெளியேறினேன். அப்போது கண்ணில் தென்பட்ட பெப்ஸி பாட்டிலை எடுத்து என் தாகத்தை தணித்திட வேண்டி பத்திரப் படுத்திக் கொண்டேன். கூடவே ஒரு பிஸ்கெட் பாக்கெட்டும் கிடைத்தது. இவையெல்லாம் எதோ ஒரு கடையில் இருந்து அடித்து வரப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது,

    காலபைரவர் ஆலயத்துக்கு அடைகலம் தேடிச் செல்ல வேண்டி பிரவசன் ஹால் திசையில் சென்றால். சிற்றோடை சரஸ்வதி பெரிய நதியாக 50 அடி அகலத்திற்கு பிரவாகமெடுத்து ஓடியது. அவளும் தன்பங்குக்கு வலதுபுறம் கடைசி வரிசையில் இருந்த கட்டடங்களை சுவடில்லாது ஆக்கி இருந்தாள்,

    வழியில்லாது போகவே கோவிலுக்கு அருகே மீதமிருந்த கட்டடத்தின் தரைதளத்தில் (அதாவது முதல் தளத்தின்) இருந்த அறையை நாடினேன். அங்கு ஏற்கனவே கான்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பம் தஞ்சம் புகுந்திருந்தது. அவர்களோடு சில சாதுக்களும் சேர்ந்து இருந்தனர். அந்தக் குடும்பத்தின் பெரியவர் ஆக்ஸிஜன் குறைவால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு மருமகளும், மகளும் தப்பிப் பிழைப்போமா என்ற பயத்தால் அழுது கொண்டிருந்தனர். இன்னொரு மருமகளோ கணவனோடு ஒடுங்கி இருந்தார். அம்மா ஈசனை கருணை காட்டும் படி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

    யாருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வழி ஏதும் கிடைக்குமா என்று மகன்கள் அல்லாடிக் கொண்டு அமைதியாக இருந்தனர். என்னைப் பார்த்தவுடன் வரவேற்ற அவர்கள் அமர்ந்து கொள்ள இடவசதி செய்து கொடுத்தார்கள். நல்ல வேளையாக அவர்கள் ஆங்கிலம் புரிந்து கொண்டதுடன் உரையாடவும் செய்தார்கள். என் நிலை உணர்ந்து அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக ஏற்று அடைக்கலம் தந்தார்கள். தண்ணீர் தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு என்னிடம் இருந்த பெப்ஸி சிறிது உதவி புரிந்தது. அனைவரும் ஒரே ஒரு மிடறு பருகினோம்.

    அந்த கட்டட உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் என யாரும் இல்லை, கடந்த 2 தினங்களுக்கு முன்னதாகவே அங்கேயே அவர்கள் வந்திருந்ததை அறிந்து கொண்டேன். பக்கத்தில் கல்கத்தாவில் இருந்து ஒரு குடும்பம் இன்னொரு அறையில் தங்கியிருந்தது. அவர்கள் பாரத் சேவா ஆஸ்ரமத்தில் இருந்து இடம் மாறி இருந்தனர்.

    இந்தக் கட்டடங்கள் பாதுகாப்பானதா ? என்று அவர்கள் கேட்கும் போதெல்லாம் எனக்குள் குருவின் திருவடி ஒன்றே பாதுகாப்பானது என்று தோன்றும். அதே சமயம் மீண்டும் ஒருமுறை அதே விதமாய் அதே ஆக்ரோஷத்துடன் அதே வேகத்துடன் வருமாயின் நான் இருந்த அறை, அதுவும் நான் கதவிற்கு அருகிலேயே அமர்ந்திருந்ததால் நானே முதல் இலக்காகலாம் என்று தோன்றியது. இருப்பினும் மரணம் என்னை நோக்கி வரும் அந்த நிமிடங்களை மௌனமாக எதிர்கொள்ள ஒரு வாய்ப்பு தெரிந்தது.

    குற்றுயிரும் குலையுருமாய் கிடந்த இதர கட்டடங்களில் செல்ல நேரிட்டால் பின்பக்கம் வந்த தண்ணீரே தாக்க வாய்ப்பு. மரணத்தை நேரிடையாக எதிர் கொள்ள இயலாது என்பதால் மரணத்தின் வாயிலிலேயே காத்திருக்க ஆரம்பித்தேன். எவ்வித பிரார்த்தனைகளும் இன்றி வெறுமையாக, அமைதியாக, பாதுகாப்பாய் பாதுகாப்பற்று, நம்பிக்கைகள் எல்லாம் தொலைந்து நம்பிக்கையற்று, நம்பிக்கையுடன் அற்று அமர்ந்திருந்தேன்.

    நம்பிக்கையற்ற “ என்று நான் குறிப்பிடும் போது, அந்த சொல்லுக்கு நீங்கள் கொள்ளும் அர்த்தத்தில் குறிப்பிட வில்லை. எனக்குள் எந்த நம்பிக்கையும் இருக்கவில்லை என்ற பொருளில் குறிப்பிடுகிறேன். நான் ஆதரவற்ற நிலையில் கவலை கொண்டிருந்ததாக சொல்லவில்லை, மாறாக அமைதியாக, சாந்தமாக, கவலையற்றவனாக, குருவின் திருவடிகளை நினைத்து இருந்தேன், பாதுகாப்பற்ற சூழலிலும் பாதுகாப்பாய் இருப்பதைப் போல உணர்ந்தேன். தவிர்க்க முடியாத மரணத்தை, அந்த ஷணத்தை முழுமையாக என் சுவாசத்துடனும் சத்குரு நினைவோடும் அனுபவித்துக் கொண்டு இருந்தேன். அடுத்த கணம் எதைத் கொண்டு வந்தாலும் அதை சந்திக்க வேண்டிய கட்டாயத்தை நன்கு உணர்ந்து இருந்தேன். சிறு பாறை உருளும் சப்தம் கேட்டு தலையை சிறிதளவே திருப்பினாலும் நதியின் படுகை நன்றாக கண்ணில் படும் வகையில் மரணம் எதிர்நோக்கி காத்திருக்கையில் கடிகார முள் நகர ஆரம்பித்து இருந்தது.

    (நாளையும் தொடரும்)

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp