Enable Javscript for better performance
கங்கையின் கோர தாண்டவம்! மீண்டுவரும் சிவனார் பூமி! (மினி தொடர் - 12)- Dinamani

சுடச்சுட

  

  கங்கையின் கோர தாண்டவம்! மீண்டுவரும் சிவனார் பூமி! (மினி தொடர் - 12)

  Published on : 27th July 2013 03:06 PM  |   அ+அ அ-   |    |  

  sushantha

  12. ஆகாயம்  வசமானது

  முதலில் இதை பாலம் என்று சொல்வதே சரியில்லை என்பேன். ஏனென்றால் பாலம் என்பது ஒரு பயணத்தில் பாதுகாப்பை தருவது போல ஒரு பிரமையையாவது தரும். இது பாதுகாப்பற்று இருந்தமையால் விழிப்பு உணர்வையே தந்தது.

  கரணம் தப்பினால்  மரணம் என்பதை உணர்ந்தே கடக்க  வேண்டியிருந்தது. மரணத்தைக்  காட்டிலும் மரணபயம் இன்னும்  அதிக வேதனையைத் தரும் என்பதை உறுதி செய்தது. சிறுகுழந்தைகள் சற்றே எளிதாக கடந்தார்கள்  என்பேன்.

  ஏனென்றால் முதலில்  ஒரு பைப்பை பிடித்துக் கொண்டு ஒற்றை கட்டை மீது நடந்து 20 அடி நதியை கடந்து நடுவீல் இருந்த தீவை அடையவேண்டும். அதன் பிறகு தண்ணீர் ஒரு காலும் சமதளத்தில் ஒரு காலுமாய் தொங்கிக் கொண்டிருந்த மேற்கூரையின் மேல் இரும்பு கயிறை பிடித்துக் கொண்டு வழுக்கி விடாது ஏறவேண்டும்.

  அந்த தகரத்தின் மேல் 2 பேர் அமர்ந்து உங்களை கைபிடித்து மேலேற்றி விடுவார். அதன் பிறகு அத்தகரத்தில் வழுக்கி விடாது சுமார் 3 ஸ்டெப்களில் அந்த பக்கம் சென்று விட வேண்டும். உதவிக்கு அந்த பக்கம் இருந்து ஒருவர் கை கொடுப்பார்.

  இதைத்தான் செய்ய  முடியும் என்பதும், இதன் மூலமாகவே நதிக்கு அந்த பக்கம் சிதிலமடையாது விட்டு வைக்கப்பட்டிருந்த சமதளத்தை அடைய முடியும் என்ற நிலை இருந்தாலும் பெரும்பாலோர் நதியை கடக்க முன்வரவில்லை,

  எப்படியாவது முதலில்  இங்கிருந்து தப்பித்தால்  போதும் என்ற மனநிலையில் இருந்தவர்களும், சில உள்ளுர் மக்களுமே முயற்சிகளை ஆரம்பித்தனர். தரையிறங்க சிரமம் அதிகம் இல்லாததால் பைலட்டுகளும் ஹெலிகாப்டர்களும் கருணை புரிய ஆரம்பித்தன, இதனால் உயிர் வாழும் வாய்ப்பு உள்ளதை கண்டு தைரியம் அடைந்து யாத்ரீகர்கள் பலரும் இந்த சாகசத்திற்கு முயற்சி செய்தனர்,

  அதே போல் சில தொண்டர்களின் முயற்சியால் முதலில் உடல் நிலை சரியில்லாதவர்கள் மற்றும் வயதானவர்கள் என முன்னுரிமை பெற்று கேதாரத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். இந்த ஹெலிபேட் வந்தடைந்த உடன் பிஸ்கட் பாக்கெட்டும் தண்ணீர் பாட்டிலும் கிடைத்தன.

  மக்களோ இத்தகைய சூழல்களுக்கு தகுந்த படிப்பறிவை பெறவில்லை என்பதை குறைவேதும் இல்லாது நிரூபித்தார்கள். ஹெலிகாப்டர் தரையிறங்கும் போதும் எழும்பும் போதும் அமரததால் சில சமயம் தரையிறங்காமலே செல்ல நேரிட்டது.

  தன்னலமில்லாது ஒருங்கிணைக்க முன்வந்தவர்கள் சரியான ஒத்துழைப்பை  மக்களிடம் இருந்து பெருவது  கடினமாக இருந்தது. அப்படி பணியாற்றியவர்களை இனம் கண்டு சின்ன அங்கீகரிப்பை வழங்கிய போது இனம் புரியாத சந்தோஷத்தை அந்த நொடி எனக்கு வழங்கியது.

  அது மட்டுமல்லாது பெரும்பாலோனார் குடும்பத்தை  தனித்தனியாக பிரித்து அனுப்ப  விருப்பமின்றி சேர்ந்து செல்ல முண்டியடித்து யாரும் செல்ல முடியாது வேறு இடங்களில் இருப்பவர்களை சுமந்து செல்ல நேரிட்டது.

  இதற்கு நடுவே  உள்ளூர் இளைஞர்களும், நேபாளிகளும்  தங்கள் வீரதீர சாகசங்களை  செய்யும் விதமாக வரிசைகளை மதிக்காது வேகமாக வெளியேற  முற்பட்டார்கள். காவலர்களோ  அல்லது ராணுவமோ வந்திறாத அந்த வேளையில் வரிசை தயார்  செய்வதிலும், பத்திரமாக ஹெலிகாப்டரில் அனுப்பி வைப்பதிலும் பலருடைய ஒத்துழைப்பை சிலர் பெற்றது சந்தோஷம் தந்தது.

  நான் இப்படி சென்று சேர்ந்த போது மணி மதியம் 2 ஆகி இருந்தது. அப்பாடா  சுமார் இரு இரவுகள் மற்றும்  இரு பகல் பொழுது கழித்து  குடிக்க ஒரு பாட்டில் மண்  இல்லாத சுத்தமான தண்ணீர் முழுவதுமாக கிடைத்தது மகிழ்வைத் தந்தது.

  இப்படி 7, 8 இடங்களில்  இருந்து ஹெலிகாப்டரில்  மக்களை வெளியேற்றியதால்  மீண்டும் ஒரு கூட்ட நெரிசல்  ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

  அவ்வளவு எளிதாக நான் திரும்புவதை அவன் விரும்ப  வில்லை போலும்.தன் திருவிளையாடலை  துவங்கினான். வரிசை மிக பெரியதாக இருப்பதாலும், நேரமாகிக் கொண்டே வருவதாலும் என்னோடு இருந்தவர்கள் சுமார் 2 கிமி தூரத்தில்,உயரத்தில் உள்ள ஹெலிபேடுக்கு செல்ல முடிவு செய்தார்கள்.

  sivanarboomi.jpg

  முடிவு செய்த  ஷணம் தெரியும் முன்பே சிலர்  வேகமாய் செல்ல முற்பட்டதால் வேறு வழியின்றி நானும் பின் தொடர முற்பட்டேன். அப்பாதை இவற்றுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல இருந்தது.

  25 அடி உயரத்தில்  இரு பாறைகளை தொடர்பு  கொள்ளச் செய்யும் விதமாக ஒரு கட்டையை போட்டிருந்தார்கள். அதில் சாகசம் செய்து சென்றால், அதாவது நாலுகாலை உபயோகித்து, இரு கைகளிலும் இரு கம்பை பிடித்துக் கொண்டு கால்களால் நடுக்கம்பில் நகரந்து செல்லவேண்டும். முக்கிய குறிப்பாக அந்த கட்டைக்கு கீழே பள்ளத்தில் பாய்ந்து ஒடும் வெள்ளத்தை கண்கள் பார்த்தாலும் தெரியக் கூடாது.

  ஒரு வழியாக 5 நிமிடத்திற்கும்  குறைவாக நடுவில் இருக்கும்  அந்த தீவுப் பாறையை சிந்துபாத் போல அடைந்து விட்டாலும் எழுந்து நின்று பேலன்ஸ் செய்ய முயற்சி செய்திடக் கூடாது. அடுத்த பாலம் உங்களுக்கு தயாராக சவாலை வைத்திருக்கிறது.

  அது பாலமும் அல்ல எங்கிருந்தோ ஒரு ஏணியை  கொண்டு வந்து பாலமாக்கி  இருந்தார்கள். அந்த ஒற்றை  குச்சியில் இரு பாதங்களையும் ஆடாது வைத்து நகர வேண்டும் அதுவும் அந்த குச்சி உங்கள் மூழு பாரத்தை வேகமாக உணரும் முன்பு அடுத்த கட்டைக்கு சென்று விடவேண்டும்.

  விட்டலாச்சார்யா கதை போல் அப்பக்கம் சென்று விட்டாலும் மீண்டும் திரும்பி வர நினைக்க கூட முடியாது. வெறும் கால்களை ஈரமும், குளிரும், பாறைகளும் பதம் பார்த்தன. ஒடினேன் என்றுதான் சொல்லவேண்டும், ஒடிய வேகத்தில் ஹெலிபேடுக்கு செல்லும் வழியை அடைந்து விட்டேன்.

  சரஸ்வதி நதி என்றழைக்கப்படும் ஒடை 50 அடி அகலத்திற்கு அனைத்தையும் அடித்துச் சென்று பெரும் பள்ளத்தை உருவாக்கி இருந்தது. போதாக் குறைக்கு ஆங்காங்கே வழிந்து கொண்டிருந்த ஐஸ் நதிகள் கால்களை உறைய வைத்தன. மண் பாதையில் ஏறி கால் வைத்தேன்.

  என்ன நடக்கிறது  என்பதை உணர முற்படுவதற்குள் அடுத்த நொடி என் இடது காலின் முழங்காலுக்கு மேல் புதைந்து போனது. வேகமாக ஒடியதால் நொடிப் பொழுதில் இருகால்களும் மண்ணுக்குள் புதைந்தது.

  நொடிக்கும் கணப்பொழுதில் சுதாரித்து கைகளை ஊன்றி ஒரு அடி பின் வாங்கினேன். வழுக்கலும் சறுக்கலும் கீழிறுந்த பள்ளத்தையும் அதில் ஒடிய மந்தாகினியையும் கண்களில் காட்டி பயமுறுத்தியது. ஒருவழியாக எல்லா பயமுறுத்தல்களையும் கண்டு உயரத்தில் இருந்த சமவெளிக்கு வந்திருந்தேன்.

  அங்கிருந்து எதிரே தெரிந்த மலையில் கேதாரின் நடைபாதை தெரிந்தது. கருர்சட்டிக்கு சற்று தொலைவில் இருந்த அந்த இடத்தில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதை இருந்த இடத்தில் பள்ளம் மட்டுமே இருந்தது. அப்போது குப்தகாசி வாழ் இளைஞர்கள் என்னை அடையாளம் கண்டு பேசினர்,

  அவர்கள் ராம்பாடாவில் வேலைக்கு இருந்தவர்கள். 3 அல்லது 4 மணி நேரத்தில் வந்தடைய வேண்டிய கேதார்நாத்தை கடந்த ஒன்னரை தினங்களாக மலைகளில் ஏறி பல வழிகளில் சுற்றி நதிகளை கடந்து வந்திருந்தனர்.

  ராம்பாடா கிராமம்  முழுவதும் தண்ணீரில் அடித்துச்  செல்லப்பட்டு விட்ட என்ற தகவலை முதல் முதலில் அறிந்தேன். யாருமே உயிர் பிழைக்காத அந்த நேரத்தில் அருகே இருந்த மலை மீது ஏறி இருந்ததால் தற்போது உயிரோடு இருப்பதாக கூறினான்.

  கீழே கௌரிகுண்டை அடைவது அல்லவா எளிது எதற்காக  மேலே ஏறினீர்கள் என்ற கேட்ட  போதே, அங்கும் அனைத்தும்  அடித்துச் செல்லப்பட்டதை கூறினான். 6 கிமீ தூரம் இருந்த வண்டிகள், சுமார் 300க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்பட என்னற்ற வண்டிகளும், கட்டிடங்களும் அடித்துச் செல்லப்பட்டதை கேள்வியுற்றதாக கூறினான்.

  அங்கு ராணுவத்தின்  சீக்கிய ரெஜிமெண்டின் அதிகாரி  ஒருவர் என்னை அடையாளம் கண்டு  கொண்டு கட்டியணைத்துக் கடவுளுக்கு நன்றி சொன்னார். ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க ஆரம்பித்ததால் தரையோடு அமர்ந்தோம்.

  என்னென்னவோ நிகழ்ந்து  அனைவரும் சென்ற பிறகு இறுதியாக செல்ல நினைத்த என்னை சீக்கிரமாகவே அவனருளோடு அனுப்பி வைத்திட வேண்டி ஹெலிகாப்டரில் ஏற்றி வைத்தான். அது 20 முதல் 50 ராணுவ வீரர்களை ஏற்றிச் செல்லும் கார்கோ ஹெலிகாப்டர். காக்பிட்டில் 2 பேரும் பின்புறம் ஒருவருமாக மொத்தம் 3 விமானப்படை வீரர்கள் இருந்தனர்.

  மண்ணில் ஊர்ந்த வாழ்க்கை விண்ணில் பறக்க தயாரானது. பின்புறம் திறந்த வெளியாக இருந்ததால் வானம் வசப்பட்டது உணர்ந்தேன். குப்தகாசி வந்தடைந்த நான், என் விபரங்களை போலீஸ் அதிகாரியிடம் பதிவு செய்து விட்டு அவரது வேண்டுகோளுக்கு இணங்க சிலருக்கு உதவி செய்ய வேண்டி அவர்களோடு டேராடூனுக்கு அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் அடுத்த ராணுவ ஹெலிகாப்டரில் பயணமானேன்.

  தரையிறங்கியவர்கள் தகவல் பரிமாறிய பிறகுதான் தாண்டவத்தை உலகம் உணர்ந்தது, என்நிலை அறிந்துணர்ந்து குருநாதர் ஆசீர்வாதத்தை அருளிச் செய்தததை தகவலாய் பெற்ற கணம் அவன் திருவடியில் வாழ்வதை உணர்ந்தேன்.

  மீண்டும் கேதார்நாத் செல்வதற்காக கால எண்ணிக்கைகள் இல்லாது காத்திருக்கிறேன். கடந்த 8 மாதமாய் வாழ்க்கையை பகிர்ந்து கொண்ட குப்தகாசி மக்களிடம் இருந்து என்னைத் தேடியும், என் நலம் விசாரித்தும் பல பல அழைப்புகள். எங்கெங்கிருந்தோ எவர் எவரோ அழைத்து உதவ தயாராய் இருக்கும் உள்ளத்தை வெளிப்படுத்தும் போது குருநாதனின் கருணையை எண்ணி கரம் குவிக்கிறேன்.

  இந்த 8 மாத காலத்தில், இந்த குளிர் பிரதேசத்திற்காக பலர் கொடுத்த பொருட்கள் மந்தாகினி தனக்கு வேண்டுமென எடுத்துச் சென்று விட்டாலும், அவர்களது அன்பையும், ஆசீர்வாதத்தையும் அவளது கருணையோடு சேர்த்து என்னிடம் விட்டு விட்டு சென்றுள்ளது.

  இதோ மீண்டும் 2 செட் துணிகள் வந்து விட்டன. பாதைகள் இல்லாததால் மீண்டும் குப்தகாசி செல்ல இயலவில்லை, அங்கு என்னை அறிந்த மனிதர்களாயினும் இருக்க, இங்கோ எதுவுமே இல்லை,

  நம்பிக்கைகள் அற்றுப்  போய் நலமாய் செயல்படுகிறேன். நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும்  கழன்று போனதால் எதிர்காலம் நழுவி நிகழ்காலத்தின் தொடர்வாய் நிகழ்கிறது, பாதுகாத்திட ஏதுமின்றி பாதுகாப்பும் இன்றி பரமனின் நிழலில் பாதுகாப்பாய் பரந்திருக்கின்றேன்.

  புணரமைப்பு பணிகளில் உதவி செய்ய விருப்பம் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் எனது தகவல்களை அளித்துள்ள நான், அழைப்பிற்காக காத்திருக்கும் இக்காலத்தில் குறுகிய எல்லைகளுக்குள் சிக்க விரும்பாததால்  வாழ்க்கை அதுவே தனக்கானதை தேடிக் கொள்ள வேண்டி அதன் போக்கில் அனுமதித்து ஆனந்தமாய் சஞ்சரித்துக் கொண்டு இருக்கின்றேன்.

  நேற்று இல்லாத மாற்றம் என்னது

  காற்று என்காதில்  ஏதோ சொன்னது

  .... .யாரோ தமிழ்க்காரர் போலும் தன் அலைபேசியில் பாடலை ஒலித்துக் கொண்டே என் வாழ்க்கையை கடந்து  சென்று கொண்டிருக்கிறார்

  மரணத்தில் வந்த புதிய  முகம் தானே, மௌனமாக ரசித்துக்  கொண்டேன்.

  காலம் சரியானதை சரியான நேரத்தில் சரியான நபர் மூலம் கொண்டு வந்து சேர்க்கும் என்பதால் எல்லாவற்றிற்கும் காத்திருக்கிறேன். கால்கள் போன போக்கில் சென்று கண்கள் கண்ட காட்சிகளில் கருணையான சிவனை வணங்கி அவன் காலடியில் சந்தோஷமாய் காத்திருக்கின்றேன்.

  (தொடரும்...)

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp