
13. வானத்தில் தெரிந்த என் உலகம்
காத்திருத்தல் என்பதே சுகமானது. அதுவும் கனவுகளோடு காத்திருத்தல் என்பது அற்புதமானது, அழகானது, அதுவும் அந்த கனவுகளில் வாழ்க்கைக்கான காதலும் , அதை அளித்தவர்களுக்கான நன்றியும் கலந்த போது …….. அடடா என்ன ஒரு சுவையும் , அழகும்
இந்த கனவிற்கு விதை விதைத்தவர்கள் நிச்சயம் அற்புதமான மனிதர்கள்தான். அவர்கள் இல்லையேல் இது நிச்சயம் உயிர் பெற்று இருக்காது.
ஒரு விதை முளைக்கும் போது ஏற்படும் போராட்டத்தின் வலியை அதைத் தவிர வேறு எவர் உணர இயலும். அப்படித்தான் நான் கேதாரத்தில் இருந்து இறங்கி தரையை தொட்ட நிமிடங்களும் , நாட்களும்………
பல்வேறு மாநில அரசுகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஹரித்துவார் ரயில் நிலையத்தை ஆக்ரமித்து இருந்தன. ஏராளமான உள்ளூர் பிச்சைக்காரர்களுக்கும் மரியாதையாய் உணவு கிடைத்தது என்பேன்.
ஷாந்தி குச்சில் இருந்த ஒரு தொண்டரால் எனக்கும் கூட ஒரு செட் உடைகள் ஆசிர்வாதத்துடன் அளிக்கப்பட்டது. அதை சுமந்து புதியதாய் பிறந்தவனாய் ஹரித்துவாரை வலம் வர ஆரம்பித்தேன்
இடர்பாடுகளையும் சேதங்களையும் அடிக்கடி சந்திக்கும் ஒரு மாநிலத்தின் . அதுவும் யாத்திரையின் மிக முக்கிய சீசனில் , ஏற்பட்ட பெரும் சேதத்திற்கு பின்னரும் கூட எவ்வித சுதாரிப்பும் இல்லாதது போல ஆமை வேகத்தில் அரசு இயந்திரத்தை அதன் பணியாளர்கள் சுழற்றினர் என்பதை காணும் போது என்னுடல் உஷ்ணமடைந்து குளிரையெல்லாம் விரட்டியடித்தது.
மீட்கப்பட்டவர்கள் பெயர் பட்டியல் கம்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, மிக புத்திசாலித்தனமாக அதை பிரிண்ட் அவுட் எடுத்து . கேட்பவர்களுக்கு தகவலை மிக நிதானமாக தேடித் தேடி அழகாக சேவை செய்ததை கண்டபோது , இவர்களுடைய அறியாமையை நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா எனத் தெரியாமல் விக்கித்து நின்றேன்.
6 நிமிடத்திற்கு ஒரு முறை ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்பட்டவர்களை சுமந்து வரும் அவசர காலத்தில், தேசமே தங்களது நண்பர்களையும் , உறவுகளையும் தேடிக் கொண்டு இருக்கும் ஒரு தருணத்தில், 2 தினங்கள் முன்பு வரை மீட்கப்பட்டவர்கள் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு , அதையும் கூட ஹிந்தியில் மட்டும் வைத்துக் கொண்டு………. கொடுமையடா சாமி
போதாக்குறைக்கு அனைத்து மாநிலங்களில் இருந்து உதவி குழுக்கள் வந்திருந்த போதும், அவரவர் தனித்தனியாக முயற்சித்தினரே தவிர , ஒரு ஒருங்கிணைந்த அறிவிப்பு பேனரைக் கூட அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்த ரயில் நிலையத்தில் எங்கும் காண இயலவில்லை.
இதை எதற்கு சொல்கிறேன் என்றால் யார் வந்து எங்கு செல்லவேண்டும் என்று கேட்டாலும் அவர்களுக்கு ரயில் பாஸ் கிடைத்து விடும். அது கூட ரயில்வே துறையினரால் வழங்கப்பட்டது அல்ல. விஸ்வ ஹிந்து பரிஷத்தும் . ஆர்எஸ்எஸ் ஸும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கம்யூட்டர் பிரிண்ட் அவுட்டில் ரயில்வே போலீஸ் அதிகாரி சீல் வைத்து கையொப்பம் இட்டிருப்பார்.
வெகுதூரப் பயணமானாலும் வண்டியில் செல்லலாம் ஆனால் பர்த் எல்லாம் டிடிஆர் கருணையால் கிடைத்தால் மட்டுமே. ஒருவேளை பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் விபரமாக செயல்பட்டு தங்களது மாநில அரசின் உதவிக் குழுவை தொடர்ப்பு கொண்டிருந்தாலோ அல்லது அவர்களது உறவினர்கள் இவர்களைப் பற்றிய தகவல் தெரிவித்து இருந்தாலோ மட்டுமே அது சாத்தியம்.
அதை விட கொடுமை ஒரு வேளை உங்களது ஐடி கார்ட் தொலைத்திருந்தாலோ அல்லது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தாலோ, நீங்கள் கூறும் தகவல்களை வைத்து உங்கள் மாநில அரசு உதவி செய்ய சட்டத்தில் வழியில்லை. இதை நான் மிகைப்படுத்தி எழுதவில்லை.
மேலும் சேவை என்கிற பெயரில் ஏராளமான உணவு விரயமானதையும் நான் கண்டேன். பாதிக்கப்பட்டவர்களோ தங்கள் உடன் வந்தவர்களை இழந்த சோகத்திலும், உடமைகள் போன சோகத்திலும் எதைப் பற்றியும் உணர முடியாமல் , எப்படியாவது தப்பித்தால் போதும் என்று இருந்தனர்
அமைதியாகவும் அதே சமயம் அனைத்தையும் கூர்ந்து கவனித்து, கேள்விகளை முடிந்த போது எழுப்பிய என்னைக் கண்டால், பாதிக்கப்பட்டவன் போல தெரியவில்லை போலும். ஏனோ டிவிக்காரர்களும் , பத்திரிக்கை காரர்களும் கூட என்னை தவிர்த்தனர்.
ஒரு வேளை மாவட்ட அதிகாரிகளை கேள்வி கேட்டதும், தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டவர்களிடம் நமது மக்களின் அறியாமையையும் , விழிப்புணர்வின்மையையும் பேசிக் கொண்டிருந்தததும் கூட அச்சப்படுத்தி இருக்கலாம்.
எப்படியும் புனரமைப்பு என்கிற பெயரில் நிச்சயம் எதை எதையோ செய்வார்கள். அதே போல நிவாரணம் கிடைக்க வில்லை என்று புலம்புவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இந்த தேசம் இது போன்ற பல நெருக்கடிகளை தினமும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அரசியல் , அதிகார விளையாட்டுக்கள் அனுதினமும் நடக்கத்தான் செய்கின்றன, ஆனால் அவற்றை எல்லாம் மீறி அமைதியாக செயல்படுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
எத்தனையோ அமைப்புகள் தங்களது மனிதாபிமான சேவைகளை தாங்களே புகழ்ந்து பத்திரிக்கைகளுக்கு எழுதிக் கொடுத்துக் கொண்டு இருக்க , எவ்வித ஆர்ப்பாட்டங்களும் இன்றி செயல் பட்ட எண்ணற்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் வியப்பை தந்தது ஆச்சரியம் தந்தது.
இதே போன்றுதான் முஸ்லீம் அமைப்பு ஒன்றும். இன்னும் சொல்லப் போனால் கௌரிகுண்டில் குதிரைகளை வைத்திருப்பதும் இவர்கள்தாம், இங்கு கடை வைத்திருப்பவர்களில் பெரும்பாலோர் இவர்கள்தாம். அவர்களும் பெருத்த நஷ்டத்தையும் இழப்பையும் சந்தித்திருந்தனர்.
ஆனால் இவர்களைப் பற்றி எல்லாம் எந்த பத்திரிக்கைகளிலும் பெரிதாக வரவே இல்லை என்று கூறினார்கள். ஒரு வேளை ஹிந்தி எனக்கு தெரியாததால் பத்திரிக்கைகளை தேடிப்பார்க்கவும் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நான் என்ன செய்யலாம் என்கிற கனவில் முழுகி இருந்ததால் அதையெல்லாம் கண்டு கொள்ள எனக்கு நேரமும் இல்லை.
தனது இரு ஆஸ்ரமங்களையும் சில சன்னியாசிகளையும் இழந்த போதும் பாரத் சேவா ஆஸ்ரமம் மக்கள் துயர் துடைப்பில் பங்கேற்கிறது. ரிஷிகேஷில் உள்ள சுவாமி சிதானந்த சரஸ்வதியின் பரமார்த்த நிகேதன் புராஜக்ட் ஹோப் என்று ஒரு 3 அடுக்கு திட்டத்தை வகுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை தத்தெடுத்து செயல்படுத்தி வருகிறது.
பாபா ராம்தேவின் பாரத் ஸ்வபிமாண் அமைப்பும் , குஞ்ச் என்கிற அமைப்பும் களத்தில் பணியாற்றுகின்றன. ஆனால் இன்னும் ஏராளமான அமைப்புகள். ஆனால் யார் செய்ய வந்தாலும் ஆகஸ்ட் இறுதி வரை காத்திருக்க வேண்டியதுதான்.
அதைவிட இத்தனை அமைப்புகளை எப்படி மாநில அரசும் , உத்திரகாண்டின் மறுசீரமைப்பு துறையும் முன்னின்று ஒருங்கிணைக்கின்றன என்பதுதான் மிக முக்கியமான சவால். ஒரு தனிமனிதனாக நான் இந்த ஒருங்கிணைப்புக் குழுவோடே இணைய விரும்புகிறேன் .
அதற்கு காரணம் ..............
(தொடரும்....)