
சென்னையில் மெரினா கடற்கரையையும், பெசன்ட் நகர் கடற்கரையையும் தாண்டி வேறு எங்காவது செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல இடம் செங்கல்பட்டு கொலவை ஏரியாகும்.
சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பது கொலவை ஏரி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டாவது மிகப்பெரிய ஏரி இந்த கொலவை ஏரிதான். மிகப்பெரிய ஏரியின் வரிசையில் முதலில் இருப்பது மதுராந்தகம் ஏரி என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்.
தற்போது சிலர், ஏரியை ஆக்ரமித்து கட்டடங்களை கட்டி வருவதால், ஏரியின் பரப்பளவு வெகுவாகக் குறைந்துவிட்டது. இது எப்போதும் நீர் நிறைந்து காணப்படுகிறது. கோடைக் காலத்திலும் இந்த ஏரி முழுவதுமாக வற்றுவதில்லை என்பது இதன் தனிச் சிறப்பு
அது மட்டும் அல்லாமல், சென்னையில் கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தொழிற்சாலைகளின் தேவைக்காக இந்த ஏரி நீரைக் கொண்டு வந்து பயன்படுத்துவதும் உண்டு.
கன்னியாகுமரியில் எவ்வாறு சூரிய உதயமும், சூரிய அஸ்தமனமும் சிறப்பாக இருக்குமோ அதுபோலவே இந்த ஏரிப் பகுதியில் இருந்து சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் கண்டு ரசிக்கலாம்.
இது ஒரு சுற்றுலாத் தலமாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மேலும் ஒரு வரப்பிரசாதமாக படகுச் சவாரியும் இயக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இங்கு தொடர்ந்து படகுச் சாவரி இயக்கப்படுகிறது.
இவ்விடத்துக்கு அருகில் பரனூர் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்கள் அமைந்திருப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு மேலும் வசதியாக உள்ளது.