சுடச்சுட

  

  மதுரை என்றதும் மீனாட்சி அம்மன் கோயில்தான் அனைவருக்கும் நினைவில் வரும். அதே சமயம், மதுரையில் ஏராளமான பழமைவாய்ந்த கோயில்களும் அமைந்திருக்கின்றன.

  குறிப்பாக மதுரை ஆனைமலை. இப்பகுதி மதுரையில் இருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் மதுரை மேலூர் சாலையில் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்றால் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு முன்பே  ஆனைமலை வரும்.

  இங்கு செல்ல போக்குவரத்து வசதி போதிய அளவில் இல்லை. சொந்த வாகனத்தில்தான் செல்ல வேண்டும்.

  இதற்கு ஆனைமலை என்று பெயர் வரக் காரணம், தொலைவில் இருந்து பார்க்கும் போது இந்த மலை, ஒரு யானை படுத்திருப்பதை போல காட்சியளிப்பதே. வெறும் பாறையால் ஆன இந்த மலை நான்கு கிலோ மீட்டர் நீளமும், 1200 மீட்டர் அகலமும், 400 மீட்டர் உயரும் கொண்டது. 

  இங்கு மலையே ஒரு உருவகமாக அதாவது யானையைப் போல இருப்பது சிறப்புதான். இந்த சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இங்கு சமணர்களின் குடைவரை கோயில்கள் உள்ளன.

  முதலில் சமணர் குடைவரைக் கோயிலை பற்றி பார்ப்போம். இங்கு காலை நேரத்தில் செல்வதே உச்சிதம். கோடை வெயிலில் பாறை மீது ஏறுவது சிரமத்தை ஏற்படுத்தலாம். சுமார் அரை மணி நேரம் பாறைகளின் வழியே சென்று சமணர் குடைவரைக் கோயிலை அடையலாம்.

  இங்கு சிறிய குகை, கற்படுக்கைகள், குகையின் வாயிலில் சிறு குழிகளைக் காண முடியும். பல பழமையான கல்வெட்டுகளும் காண முடிகிறது. சமணர் குகை மற்றும் அங்கு செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களைப் பார்த்துவிட்டு மெதுவாகக் கீழே இறங்கலாம்.

  சாலையில் மேற்கொண்டு சென்றால், ஆனைமலையைக் குடைந்து கட்டப்பட்ட குடைவரை ஸ்ரீயோக நரசிம்மப் பெருமாள் கோயிலை அடையலாம்.

  கோயிலின் வாயிலில் நின்று பார்க்கும் போது, கோயிலுக்கு இடது புரத்தில் மிக அழகான தாமரைக் குளமும், கோயிலின் பின்னணியில் பிரம்மாண்டமான ஆனைமலையும் அமைந்திருப்பது இயற்கையே இறைவனாகக் காட்சி அளிப்பதாக உணர முடிகிறது.

  கோயிலின் உள்ளே இடது புரத்தில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயார் சன்னதி உள்ளது. அங்கு தாயாரை வணங்கிவிட்டு உள்ளே சென்றால் நரசிங்கப் பெருமாள் உற்சவர் வீற்றிருக்கிறார். அவரை சுற்றி உள்ளே சென்றால் யோக நிலையில் மிகக் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீயோக நரசிம்மர். அவரைக் காண கண்கோடி வேண்டும் எனும் அளவுக்கு அவரது தரிசனம் இருக்கிறது.

  கோயிலை சுற்றி வர இயலாது. ஏன் எனில் அதன் பின்புறம் அழகிய ஆலைமலை நமக்குக் காட்சியளிப்பதுதான்.

  மிகவும் அமைதியான அதே சமயம் இறைத்தன்மை நிறைந்த ஸ்ரீயோக நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது.

  இங்கிருந்து வந்த பாதையிலேயே திரும்பும் போது பாதையில்  வலது புரத்தில் சற்று உயரத்தில் ஒரு முருகன் கோயில் நம் கண்ணில் பட்டது.

  அங்கு என்ன சிறப்பு எனக் காண கோயிலுக்குள் சென்றால், அதுவும் ஒரு பாறை மீதுதான் அமைந்திருந்தது. கோயிலுக்குள் அழகிய பாலதண்டாயுதபாணி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

  அவரைக் கண்டதும், பழனி முருகனே இங்கு வந்து காட்சி அளிப்பதாகவே தோன்றியது. ஏழை எளியோருக்கு எங்கும் காணும் வகையில் ஒரு அழகிய கிராமத்தில், எந்த ஆரவாரமும் இல்லாமல் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்த முருகனை கண்குளிரக் காணலாம்.

  அந்த கோயிலின் இடது புறத்தில் மேற்கு நோக்கி பிரத்யங்கரா தேவி அமைந்துள்ளார். இங்கு அமாவாசை தோறும் பூஜைகள் நடத்தப்படுகிறது.

  பழனியில் முருகனைக் கண்ட அதே ஆனந்தம், இந்த சிறு குன்றில் அமைந்திருக்கும் பாலதண்டாயுதபாணியைக் காணும் போதும் ஏற்படுவதை பக்தர்கள் உணர முடியும்.

  மதுரை ஆனைமலை சென்றால் இம்மூன்று தலங்களையும் தரிசித்து வரலாம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai