சுடச்சுட

    

    மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் சிம்ஹஸ்த கும்ப மேளாவையொட்டி பன்முக கலாசாரத்தை பிரதிபலிக்கும் சுற்றுலா திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) தொடங்குகிறது. இந்த திருவிழா மே 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    இது குறித்து மத்திய சுற்றுலா துறை உயரதிகாரி கூறியதாவது: இந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய கும்ப மேளா திருவிழாக்களில் முக்கியமானதாக "சிம்ஹஸ்த கும்ப மேளா' கருதப்படுகிறது. பன்னிரண்டு கோள்கள் நேர் கோட்டில் வருவதைக் குறிக்கும் வகையில் சிம்ஹஸ்த கும்ப மேளா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதையொட்டி உஜ்ஜைனியில் உள்ள க்ஷிப்ரா நதியில் பக்தர்கள் புனித நீராடி இறை வழிபாடு செய்வதை முக்கிய கடமையாகக் கருதுகின்றனர்.

     பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், இந்து மதத்தைப் போற்றும் பக்தர்கள், துறவிகள் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்பதால் இந்த நிகழ்வைக் காண லட்சக்கணக்கானோர் உஜ்ஜைனிக்கு வருவர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உஜ்ஜைனி நகரில் ஏழு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள கலாசாரம், சுற்றுலா நிகழ்வுகளை தேசிய திருவிழாவாக மத்திய சுற்றுலா துறை நடத்துகிறது. இதையொட்டி, லலித் கலா அகாதெமி, சங்கீத நாடக அகாதெமி, தேசிய நாடகப் பள்ளி, சாகித்ய அகாதெமி ஆகியவற்றுடன் இணைந்து மத்திய சுற்றுலா துறையின் ஏழு மண்டலங்கள் சார்பில் பன்முக கலாசார திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிம்ஹஸ்த கும்ப மேளா தொடங்கும் வெள்ளிக்கிழமை முதல் மே 21-ஆம் தேதிவரை இந்த திருவிழா நடைபெறும். இதில் சுமார் 3 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்பர். வெவ்வேறு மாநிலங்களின் பெருமைகள், சிறப்புகளை பறைசாற்றும் நடனம், பாரம்பரிய நடனம், இசை நிகழ்ச்சி ஆகியவை திருவிழாவில் நடைபெறும்.

     தொடக்க நாள் நிகழ்வில் பண்டிட் ஜஸ்ராஜ் பங்கேற்கிறார். ஒவ்வொரு நாள் காலையில் வேத மந்திரங்களும், பக்திப் பாடல்களும் ஆகியவற்றுடன் நிகழ்வுகள் தொடங்கும். 150-க்கும் மேற்பட்ட ரங்கோலி கலைஞர்கள் பல்வேறு நடனங்களை வழங்க உள்ளனர். 300-க்கும் மேற்பட்ட ஓவியர்கள் தங்களது கற்பனை வெளிப்படுத்துவார்கள்.

      இது தவிர, சாஸ்திரிய, செமி-கிளாசிக்கல், மெல்லிசை, நாட்டுப்புறப் பாடல், நடனம், கவி சம்மேளனம், நாடகங்கள், ரங்கோலி, கலை பயிலரங்கம், புத்தகக் கண்காட்சி ஆகியன இத்திருவிழாவில் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. உஜ்ஜைனி நகருக்கு வருகை தரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வசதிக்காக தில்லி, நாக்பூர், மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து சிறப்பு தனியார் பேருந்துகள், கூடுதல் ரயில்கள் சேவைகள் அடுத்த ஒரு மாதத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன' என்றார் உயரதிகாரி.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai