Enable Javscript for better performance
இலங்கையில் சில தினங்கள்…- Dinamani

சுடச்சுட

  
  03

  பயணம் என்பது பலவித புதிய அனுபவங்களை நமக்கு கொடுக்கும். அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு, நெருக்கடியான சூழ்நிலையில் வாழும் நமக்கு, பயணிப்பது சற்றே நிம்மதியை அளிக்கிறது.

  புது இடம், புது மனிதர்கள், அவர்களின் கலாசாரம், வாழ்க்கை முறை, மொழி, பேச்சுவழக்கு, உணவு வகைகள் என பயணிக்கும்போது நாம் தெரிந்துகொள்வது ஏராளம்.

  புதிய இடங்களைத் தேடி பயணிக்க விரும்பாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஏனென்றால், தனியாகவோ, நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ ஒவ்வொருவரும் எங்காவது பயணிக்க ஆவல் கொண்டிருப்போம்.

  அப்படி, அண்மையில் நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக இலங்கை சென்றிருந்தேன். சென்னையிலிருந்து சரியாக ஒரு மணி நேரப் பயணத்தில் கொழும்பு சென்றுவிட முடிகிறது.

  விமானத்தைவிட்டு இறங்கி வெளியே செல்லும் வழியில் புன்னகையுடன் புத்தர் வரவேற்றார். (விமான நிலையத்தின் மையப் பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது)

  நண்பன் கிரிசாந்தன் எனக்காகக் காத்திருந்து வரவேற்றார். அங்கிருந்து கொழும்பு புறநகரில் உள்ள நண்பனின் உறவினர்  இல்லத்துக்கு சென்றோம். அங்கு மதிய உணவை முடித்துச் சற்று இளைப்பாறிக் கொண்டிருந்தேன்.

   அதற்குள், “கிளம்பு டா.. கொழும்பு நகரை சுற்றி பார்த்து விட்டு வரலாம்” என்றார் நண்பர்.

  அங்கிருந்து பேருந்தில் கொழும்பு மாநகராட்சி சபைக்குச் சென்றோம்.. ரம்மியமாக காட்சி அளித்தது மாநகராட்சி சபை. அதற்கு எதிர்புறம் பூங்கா ஒன்று இருந்தது (அங்குக் காதலர்களின் எண்ணிக்கை சற்று அதிகம்தான்..!)

   (அழகான பொழுதுபோக்கு பூங்காவானது, காதலர்களுக்கானது மட்டுமல்ல; சுற்றுலாப் பயணிகளுக்கும்தான்)

  அந்தப்பூங்காவின் நுழைவாயில் பகுதியிலும் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. சில மணி நேரம் அங்குச் செலவழித்துவிட்டு, அங்கிருந்து கொழும்பு பேருந்து நிலையம் வந்து, யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் அன்றிரவே ஏறினோம்.

  கொட்டு மழைக்கு நடுவே பேருந்து புறப்பட்டது. தமிழ்ப்படங்களை பார்த்துக் கொண்டே ஊர் வந்து சேர்ந்தோம்.

  யாழ்ப்பாணத்திலிருந்து சில கி.மீ. தொலைவில்  உள்ளது நண்பரின் இல்லம்.அங்கு, மகிழ்ச்சியுடன் அவரது மனைவியும் (சிந்து அக்கா), சுட்டிப்பையன் (அமுதீசனும்) என்னை வரவேற்றனர்.

  வீட்டில் எனக்காக ஒதுக்கித் தரப்பட்ட தனி அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டேன்.

   கேரள பாணியில் சிந்து அக்கா உணவு பரிமாறினார்.  உணவில் உப்பு கம்மிதான். இருந்தாலும், அது ஒரு தனி சுவையுடன் இருந்தது  (இலங்கை வாழ் தமிழர்கள் உணவில் உப்பை அதிகம் சேர்த்துக் கொள்ள மாட்டார்களாம்)

  பின்னர், சிந்து அக்கா அவரின் தம்பி ஜெசிதரனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

  மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், புது விருந்தாளி (நான்) வந்திருப்பதாலும், ஊரைச் சுற்றிக்காட்ட வெளியே அழைத்துச் சென்றனர்.

   கிரிசாந்தன், சிந்து அக்கா, அமுதீசன் ஒரு பைக்கிலும், நானும், ஜெசிதரனும் ஒரு பைக்கிலும் புறப்பட்டோம் (3 வயது அமூதீசன் உள்பட அனைவரும்

  தலைக்கவசம் அணிய வேண்டியது இலங்கையில் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது).

  எங்கு அழைத்துச் செல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருந்தது. சாலையின் இருபக்கமும் நெல் வயல்களும், பசுமையான மரங்களும் இருந்தன. பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

  தென்தமிழகத்தில் பயணிப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.  வெயில் சுட்டெரித்த போதிலும் சில்லென்ற காற்று மேனியை வருடியது.

   எந்தப் பக்கத்திலும் குப்பையை காண முடியவில்லை. சுகாதாரத்துக்கு அங்கு அத்தனை முன்னுரிமை அளிக்கின்றனர்.

  கீரி மலை: அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் கீரி மலை நகுலேஸ்வரர் கோயிலுக்கு வந்தோம்.

  அங்கிருந்த முட்டை வடிவிலான கேணியில் குளித்துவிட்டு அருகிலிருந்த  தூய்மையான கடற்கரையை ரசித்தோம். பின்னர், கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தோம் (இலங்கையில் உள்ள அனைத்து ஹிந்து கோயில்களுக்குள் செல்லும்போது ஆண்கள் மேல் அங்கி அணியக் கூாடது).

   பின்னர், அங்கிருந்து, கிரிசாந்தனின் சொந்த ஊரான குப்பிளானுக்குச்

  சென்றோம்.  ஜில்லென்ற காற்று வீசிக்கொண்டே பசுமை போர்த்தி மிகவும் அழகாக இருந்தது அந்தக் கிராமம். கிரிசாந்தன் படித்த பள்ளிக்கு சென்று அவரின் சிறுவயது  நினைவலைகளை மீட்டெடுத்தோம்.

  அன்றைய தினம் பயணம் சிறப்பாக அமைந்தது.

  பிரசத்தி பெற்ற முருகன் கோயில்கள்:

   மறுநாள், நல்லூர் முருகன் கோயிலுக்கு ஜெசிதரன் அழைத்துச் சென்றார்.

  இக்கோயிலில் வீற்றிருக்கும் முருகப் பெருமான் அலங்காரக் கந்தன் என்று அழைக்கப்படுகிறார்.

   இதேபோல், மற்றொரு தினம் தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் (அன்னதானக் கந்தன்) கோயிலுக்கும், மாவிட்ட புரத்தில் அமைந்துள்ள முருகன் (ஆடம்பரக் கந்தன்) கோயிலுக்கும் கிரிசாந்தனும், ஜெசிதரனும் அழைத்துச் சென்றனர்.

  (இந்தக் கோயில்களுக்கு சென்றபோது போரால் பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டபடியே சென்றோம்)

   இந்த மூன்று முருகன் கோயிலும் இலங்கையின் வடமாகாணத்தில்

  மிகவும் புகழ்பெற்றவை.அன்றைய தினம் ஆலயங்களுக்கும், சில முக்கிய இடங்களுக்கும் சென்றுவிட்டு இல்லம் திரும்பினோம்.

   

  போருக்கு பிந்தைய சூழல்:

  இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றுவந்த காலத்தில் அங்கு வசிக்கும் தமிழர்கள்  மிகவும் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான  தமிழர்களின் அன்றாட வாழ்வும் பாதிக்கப்பட்டது.
  பள்ளிகளுக்கு செல்லும் சிறார்கள் குண்டுகளையும், வெடிபொருள்களையும்
  கண்ணால் பார்ந்து ஒரு வித அச்சத்துடன் சென்றிருக்கிறார்கள்.
  துப்பாக்கி ஏந்திய கைகளுடன் திரியும் ராணுவத்தினரைக் கண்டு, அன்றாட வாழ்க்கையை ஒருவித போராட்டத்துடனேயே அவர்கள் வாழ்ந்தனர். இளைஞர்கள் என்றாலே அவர்கள் விடுதலை புலிகளாக இருப்பார்களோ என்று சந்தேககக் கண்களுடன் அந்நாட்டு ராணுவம் கண்டு மிரண்ட காலம் அது.
  எனது நண்பரும் கண்ணி வெடியை வீட்டு வாசலில் கண்டெடுத்தாக கல்லூரி நாட்களில் தெரிவித்திருக்கிறார்.
  சரி, அப்படி ஒரு சூழலில் இருந்த தமிழர்கள் வசிக்கும் பகுதி இப்போது எப்படி இருக்கிறது?
  வடமாகாணத்தில் நான் சென்று பார்த்த வரை பெரும்பாலான கிராமங்களையொட்டி நெடுஞ்சாலை உள்ளது. ஒரு கிராமத்துக்குச் செல்ல வேண்டுமானால், நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலையை பயன்படுத்திதான் செல்ல வேண்டும்.
  இயற்கை எழில் சூழ்ந்திருக்கும் அந்த கிராமங்களைக் காண வேண்டுமானால், இலங்கை ராணுவத்தை கடந்தே தற்போது செல்ல வேண்டியிருக்கிறது.
  நெடுஞ்சாலையை விட்டு விலகிச் செல்லும் சாலையை  ஒவ்வொரு கிராமத்தின் நுழைவுப் பகுதி என்று  நாம் அனுமானித்துக் கொள்ளலாம். கிராமத்தினரையும், சுற்றுலா பயணிகளையும் சோதனை செய்து
  ராணுவ வீரர்கள் அனுப்பவில்லை.  இருப்பினும், விடுதலைப் புலிகள் அல்லது அதுபோன்ற ஒரு இயக்கம் மீண்டும் தலையெடுத்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் ராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
  அதேபோல், போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் வேலி அமைக்கப்பட்டு ராணுவத்தினர் காவலுக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
  முக்கிய பகுதிகளில் காவல் நிலையங்கள் இருக்கும்போது, ராணுவ வீரர்களும் பெரும்பாலான கிராமங்களில் நடமாட வைத்திருப்பது இன்னமும் தமிழர்களின் வாழ்வில் இயல்பு நிலை திரும்பவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
  அங்கிருக்கும் சிலருடன் உரையாடியபோது, முன்பு போல் அடக்குமுறைகளும், சோதனைகளும் இல்லை என்றாலும், அவ்வபோது கிராமத்துக்குள் ராணுவ வீரர்கள் வருவதால், சுதந்திரமாக இருப்பது போன்ற உணர்வு தோன்றவில்லை என்று கவலை தெரிவித்தனர்.
  அதேநேரம், போருக்கு பின்பு, பெரும்பாலான பகுதிகளில்  உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நண்பர் தெரிவித்தார். உள்கட்டமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டு வசதிகளை செய்து தர, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் இலங்கை அரசுக்கு நிதி உதவி அளித்துள்ளதை அங்கு வைத்திருக்கும் தகவல் பலகைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.


  வல்வெட்டித்துறை:


  விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊர் வல்வெட்டித் துறை. நண்பரின் ஊருக்கு வெகு அருகிலேயே இருந்ததால், அந்த ஊருக்கு சென்று அவர் பிறந்து வளர்ந்த இல்லத்தை காண முடிந்தது. எனினும், அவரது இல்லம் தற்போது பராமரிப்பு இன்றி முட்புதர்களால் நிரம்பி உள்ளது. அந்த ஊரில் ராணுவ வீரர்களின் கண்காணிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

   

  முல்லிவாய்க்கால்:

   

    விடுதலைப் புலிகளுக்கு எதிராக முல்லிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிக்கப்பட்ட போரில், பிறநாடுகளின் ராணுவ உதவியுடன்,  ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்ததை யாரால் மறக்க முடியும்.

  முல்லிவாய்க்கால் பகுதிக்கு ஜெசிதரண் என்னை மற்றொரு தினம் அழைத்துச் சென்றார். சில நூறு கி.மீ. கடந்து இருசக்கர வாகனத்தில் பயணித்தது புதுவித பயண அனுவபத்தைக் கொடுத்தது.

  போர் அருங்காட்சியகம்:

  இந்தப் பயணத்தின்போது, இலங்கையில் தமிழர்கள் வசித்துவரும் பெரும்பாலான கிராமங்களை காண முடிந்தது. முல்லிவாய்க்கால் நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில், போர் அருங்காட்சியகம் ஒன்று கண்ணில் தென்பட்டது. ஆம், விடுதலைப் புலிகளிடம்இருந்து கைப்பற்றப்பட்ட போர் கருவிகள், ஆயுதங்களை கண்காட்சிப் பொருளாக அங்கு சுற்றுலாவாசிகளுக்கு காண்பிக்கப்படுகிறது.

  விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களைக் கண்டு வெளிநாட்டு பயணிகள் வியப்படைந்து செல்கின்றனர். நானும்தான் பிரமித்துப் போனேன். எத்தனை வகை துப்பாக்கிகள், போருக்கு பயன்படுத்திய விதவிதமான படகுகள் என அனைத்தும் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டுள்ளன.

  அங்கிருந்து, முல்லிவாய்க்கால் கிராமத்துக்குச் சென்றோம். சாலையின் இருபக்கத்திலும் கண்காணிப்பு மையம் அமைத்து இலங்கை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்திய கைகளுடன் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

  முல்லைத் தீவு

   அந்தப் பகுதியை கடந்து சென்றால் முல்லைத்தீவு வருகிறது. முல்லைத்தீவு நம்மூர் மெரீனா கடற்கரையைப் போல் காட்சியளிக்கிறது. பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளை மட்டுமே அங்கு காண முடிகிறது. ஆங்காங்கே சில கடைகள். அங்கு ஒரு கடையில் இளநீர் சாறு அருந்தினோம். தொதல் எனும் ஒரு வகை இனிப்பு வகையை வாங்கி சுவைத்தது என்றும் நினைவில் இருக்கும்.

    யாழ்ப்பாணம் திரும்பும் வழியில் விடுதலை புலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட இடத்துக்கு, ஜெசிதரன் அழைத்துச் சென்றார். வனப் பகுதிக்குள் சென்றால் அந்த இடம் வருகிறது. நீச்சல் குளம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த இடத்துக்கு செல்ல வேண்டுமானால் ராணுவத்திடம் அனுமதி பெற வேண்டும். அந்தப் பகுதி முழுவதும் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

  பல்வேறு சோதனைகளுக்கு பிறகு அந்த இடத்துக்குள் சுற்றுலா பயணிகளை ராணுவம் அனுமதிக்கிறது.

   நீச்சல் குளம் என்றால் நீச்சல் அடித்தும் குளித்து மகிழும் இடமல்ல.  அங்குள்ள நீச்சல் குளத்தில்தான் விடுதலைப் புலிகளுக்கு கடலுக்குள் இருந்து தாக்குதல் நடத்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்தபோது, வியப்படைந்தேன்.

  தற்போது, அந்த நீச்சல் குளத்துக்கு அருகே ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

   நீச்சல் குளத்தை தாண்டி வேறு எங்கும் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை.

  பின்னர், அன்றிரவு வீடு வந்து சேர்ந்தோம். மறுநாள் யாழ்ப்பாணத்தில் உள்ள கோட்டை, புகழ்பெற்ற நூலகம் என முக்கியமான இடங்களுக்குச் சென்றேன்.

   இலங்கையில் வெளிவரும் அனைத்து தமிழ் செய்தித்தாள்களையும் ஒருசேர யாழ்ப்பாண நூலகத்தில் வாசித்தது நல்ல அனுபவம்.

  வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை இலங்கை சென்று வாருங்கள்.                          

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai