நம்மை அழைக்கும் டார்ஜிலிங்

மேற்கு வங்காளத்திலிருந்து பிரித்து தனிமாநிலம் வேண்டும் எனக்கேட்ட டார்ஜிலிங் பகுதிக்கு சிறப்பு
நம்மை அழைக்கும் டார்ஜிலிங்

மேற்கு வங்காளத்திலிருந்து பிரித்து தனிமாநிலம் வேண்டும் எனக்கேட்ட டார்ஜிலிங் பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி பிரச்னையைத் தாற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறது மேற்கு வங்க அரசு. தனி மாநிலம் கேட்கும் டார்ஜிலிங்கிற்கு சுற்றுலா சென்று வந்த அனுபவம் இதோ...

தூரத்திலிருந்து பார்க்கும் போது வெறும் பசுமை நிறக் காடுகளாகவே காட்சி அளிக்கிறது டார்ஜிலிங். நெருங்கிச் சென்றால் அதன் விஸ்வரூபம் பார்க்க அத்தனை வியப்பு. பன்னிரண்டாயிரம் சதுர மைல் பரப்புக் கொண்டது டார்ஜிலிங் மலைப்பகுதி. 2001-ஆம் ஆண்டு கணக்குப்படி இதன் மக்கள் தொகை 16 லட்சத்து 5900. அதாவது சதுர கிலோ மீட்டருக்கு 510 பேர்.

எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட டென்சிங் நார்கே ஹெர்பா டார்ஜிலிங்கில் வசித்து அங்கேயே இறந்தவர். டார்ஜிலிங்கில் திரும்பிய பக்கம் எல்லாம் தெரிவது புத்த மடாலயங்களும் புத்தர் கோயில்களும்தான். புத்த மடாலயங்களில் முக்கியமானவை மூன்று. செüராஷ்டிரா பகுதியிலிருக்கும் 1879-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பூட்டியா புத்த மடாலயம். டென்சிங் நார்கே சாலையில் இருக்கும் அலுபரி யால் மோப்பா மக்டாக் மடாலயம். இன்னொரு மடாலயம், புத்தரின் சீடர்களான சென்ட்ரசி, சாங்கப்பா காட்சி தரும் இகா காலிங் மடாலயம்.

மேற்கு வங்காள மாநிலத்தின் ஆளுநருக்கான கோடை வாசஸ்தலமாக இருப்பது டார்ஜிலிங் ராஜ்பவன். ராஜ்பவனில் நின்று கொண்டு கீழே குனிந்து பார்த்தால், சிறிய மாநிலமான சிக்கிம் காலடியில் விரிகிறது. மலைப்பிரதேசமாக இருப்பதாலும் கடுமையான காலநிலைகளைத் தாக்குப்பிடித்து வருவதாலும் டார்ஜிலிங்வாசிகள் இயற்கையாகவே உடல் வலிமை உடையவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் முறையே சோலோ கோம்பு, நாம் கே பஜார் போன்ற இனப் பிரிவினரின் வழிவந்தவர்கள்.

தேயிலையைத் தாக்கும் ஒருவிதமான அட்டைப் பூச்சிக்கு மிகவும் பயப்படுகிறார்கள். அட்டைப் பூச்சியிலிருந்து தேயிலையைக் காக்க துர்கா மாதாவிற்கு (தேயிலையின் தெய்வம்) விழா எடுத்து வழிபடுகிறார்கள்.
தேயிலை பறிக்கும் போது பயன்படுத்தும் பாரம்பரியமான உடையை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு வசதியாக பத்து ரூபாய் வாடகை வசூலிக்கிறார்கள்.

டார்ஜிலிங் என்றால் தேயிலைக்குப் பெயர் பெற்ற இடம் என்றும், கோடை வெயிலில் இளைப்பாற உதவும் குளிர்மலை என்றும், மட்டுமே தெரியும். ஆனால் உள்ளே சென்று பார்த்தால் ஆச்சர்யங்கள் அணிவகுக்கின்றன. பெரிய அளவில் சர்வதேச மக்கள் புழங்குகிற சந்தை முதல் ஆச்சர்யம்.

டார்ஜிலிங்கில் வசிப்பவர்களில் 95 சதவீதம் பேர் கூர்க்காக்கள் (இந்திய நேபாளிகள்). இவர்களுடன் பெங்காலிகள், பூட்டியாஸ் (பூட்டான் நாட்டைச் சேர்ந்தவர்கள்), திபெத்தியர்கள், மார்வாடிகள், பீகாரிகள், சிந்தியாஸ், பஞ்சாபிகள் என்று பல இனத்தவர்களும் சேர்ந்து ஒரு "காஸ்மோபாலிடன்' கெட்டப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

டார்ஜிலிங் தெருவில் நடப்பதற்குத் தனிப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். குறுகலாகவும் சரிவாகவும் இருக்கும். பஜார் நெடுகிலும் ஆயத்த ஆடைரகங்கள், ஸ்வெட்டர்கள், டீ-சர்ட்டுகள், ஷூ மற்றும் இதர தோல் பொருள்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன.

ஹெச்.டி.லாமா கார்னர், ராபர்ட்சன் ரோடு, மால் ரோடு என்ற இந்தப் பிரதான சாலைகளின் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஷாப்பிங் செய்ய அழகழகான ஷோரூம்கள். மால் ரோடு, செüராஷ்டிரா மார்க்கெட் ஆகிய பகுதிகளில் நேபாளம், பூடான் நாடுகளின் கைவினைப் பொருள்கள் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றன.

டார்ஜிலிங் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கடைகளில் வியாபாரம் எப்படி நடக்கிறது என்று கேட்டால்...,

அருமையாக நடக்கிறது' என்கிறார் டெக்ஸ்டைல்ஸ், ரீ-டெய்ல் ஷோரூம் நடத்திவரும் டி.கே. பொத்தார்.

அது எப்படி சாத்தியம்?

'நீங்கள் நினைப்பது போல டார்ஜிலிங் பொருளாதாரம் டீ-கார்டனை மட்டும் நம்பியில்லை. இங்குள்ள கூர்க்காக்கள் கடுமையான உழைப்புக்கும் வீரத்திற்கும் பெயர் போனவர்கள். இவர்கள் வேறு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். திபெத் நாட்டைச் சேர்ந்த நிறைய இளைஞர்கள் அமெரிக்காவில் பணிபுரிகிறார்கள். இவர்கள் அனைவரும் ஷாப்பிங் செய்வதற்கு டார்ஜிலிங்கைத் தேடித்தான் வருகிறார்கள்.'

'அப்படியென்றால் சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பி நீங்கள் வியாபாரம் செய்வதில்லை?'

'நிச்சயமாக இல்லை. சுற்றுலாப் பயணிகளால் வரும் வருவாய் எங்களுக்கு வெறும் மூன்று மாதங்களுக்கு மட்டும்தான். மற்ற நாட்களில் எல்லாம் உள்நாட்டு மக்களின் ஆதரவுதான். பூட்டியாஸ்களையும் திபெத்தியர்களையும் நாங்கள் சுற்றுலாப்பயணிகளாகக் கருதவில்லை...'

'நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு... அப்புறம் ஏன் தனிமாநிலம் கேட்டு தகராறு பண்றீங்க?'

'இமயமலைப் பகுதியில் இருக்கும் டார்ஜிலிங் வாசி மாநிலத் தலைநகருக்குப் போகவேண்டும் என்றால் இரண்டு மாநிலங்களைக் கடந்து வங்கக் கரையிலிருக்கும் கொல்கத்தாவிற்குப் போகவேண்டும். இதில் ஆரம்பிக்கிறது அடிப்படையான நடைமுறைச் சிக்கல். அப்புறம் மொழிவாரி மாநிலங்கள் என்ற வகையில் பார்த்தால் கூட நேபாளி மொழி பேசும் எங்களை வங்காள மொழி பேசும் மேற்கு வங்காளத்துடன் இணைப்பது நியாயமில்லையே...'' என்றவரிடம் பேச்சை மாற்றி வேறொரு கேள்வி கேட்டோம்.

புதிதாகத் தொழில் தொடங்க டார்ஜிலிங் வருபவர்களுக்கு எந்த அளவிற்கு வாய்ப்புகள் இருக்கின்றன?

தாராளமாகத் தொடங்கலாம். டெக்ஸ்டைல், மின்சாதனப் பொருள்களை ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஆகியவை எத்தனை வேண்டுமானாலும் தொடங்கலாம். நல்ல லாபம் கிடைக்கும். நல்ல உணவகங்களுக்கு மவுசு அதிகம். தென்னிந்திய ஹோட்டல்கள் இங்கு சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

தேயிலைத் தோட்டத் தொழிலில் ஈடுபடுவது குறித்து டீ-கேலரி வைத்திருக்கும் ஓ.பி.குரூங் சில தகவல்களைச் சொன்னார்.

'தேயிலைத் தோட்டத் தொழிலில் ஈடுபடுவதற்கு கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு வேண்டும். ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. உள்ளூர் வியாபாரம் மூலமும் பணம் பண்ணலாம்.

ஆங்கிலேயர்கள்தான் முதன் முதலில் இங்கு டீ-எஸ்டேட்களை உருவாக்கி நேபாளிகளை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள். இன்றைக்கு இவை பெரும்பாலும் மார்வாடிகள், பெங்காலிகள் கைகளில்தான் இருக்கின்றன. அஸ்ஸôமில் உள்ள பழங்குடி மக்களான கலிதா, போர்தலாய், ராஜ்பங்க்ஷி ஆகியோரிடம் சிறிய அளவில் தோட்டங்கள் இருக்கின்றன. பழங்குடி இன மக்கள் இதனை குலத் தொழிலாகச் செய்து வருவதால் அவர்களிடமிருந்து ஒரு போல்' (400 சதுர அடி) நிலத்தைக் கூட வாங்கமுடியாது' என்றார்.

மார்வாடிகள், பெங்காலிகளிடமிருந்து டீ-எஸ்டேட்டுகளை வாங்குமளவிற்கு நீங்கள் வசதி படைத்தவர்கள் என்றால்... ஆல் தி பெஸ்ட், நீங்கள் இருக்கவேண்டிய இடம் டார்ஜிலிங்! உடனே புறப்படுங்கள் ஒரே இரவில் ஒபாமா ஆகிவிடலாம்!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com