வெளிநாட்டுப் பெண் பயணிகள்!

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பெண் பயணிகள், குட்டைப் பாவாடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்''
வெளிநாட்டுப் பெண் பயணிகள்!

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பெண் பயணிகள், குட்டைப் பாவாடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்'' என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறிய கருத்தால் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து, புனிதத் தலங்களுக்குச் செல்லும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை வழங்கும் நோக்கத்திலேயே தாம் கருத்து தெரிவித்ததாக அவர் விளக்கம் அளித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை, இது தொடர்பாக கூறியதாவது:

பெண் சுற்றுலாப் பயணிகள், தங்களது பாதுகாப்பு கருதி, குட்டைப் பாவாடை போன்ற ஆடைகளை அணியக் கூடாது. இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்ற பட்டியலுடன் அவர்களுக்கு ""வரவேற்பு அட்டை'' வழங்கப்படுகிறது. அந்த அட்டைகளில், பெண்கள் இரவில் தனியாகச் செல்லக் கூடாது; குட்டைப் பாவாடை அணியக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

அவரது கருத்துக்கு அரசியல் கட்சிகளும், தில்லி மகளிர் ஆணையமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ், ஆம் ஆத்மி எதிர்ப்பு: ""மகேஷ் சர்மாவின் கருத்து, மிகவும் பண்படாதது'' என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான மணீஷ் திவாரி கூறினார். இதேபோல், ""பெண்கள் தங்களது விருப்பப்படி ஆடைகள் அணிவதில் மோடி காலத்துடன் ஒப்பிடுகையில் வேத காலத்தில் அதிக சுதந்திரத்துடன் இருந்தனர்'' என்று தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கூறினார்.

அதைத் தொடர்ந்து, தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால், தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அமைச்சர் மகேஷ் சர்மா, பெண்களின் ஆடை விஷயத்தை விட முதலில் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் ஆடைகளுக்கும், பலாத்கார குற்றச் சம்பவங்களுக்கும் தொடர்புபடுத்தக் கூடாது. 2 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதற்குக் கூட அவர் அணிந்திருந்த குட்டைப் பாவாடைதான் காரணமா? என்று ஸ்வாதி மாலிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மகேஷ் சர்மா விளக்கம்: இதனிடையே, மகேஷ் சர்மா தாம் கூறிய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது:

வெவ்வேறு கலாசாரம், உணவுப் பழக்கம், ஆடையலங்காரம் பின்பற்றப்படும் நாடு இது. விருந்தினரை கடவுளுக்கு நிகராகவே பார்க்கும் பாரம்பரியம் நம்முடையது. எனவே, விருந்தினர்களுக்கு உடைக் கட்டுப்பாடு போடுவதை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.

குருத்வாராவுக்குச் செல்லும்போது தலையை மூடுகிறோம். கோயிலுக்குச் செல்லும்போது காலணிகளை வெளியே விடுகிறோம். அதுபோலவே, வெளிநாட்டுப் பெண் பயணிகள், புனிதத் தலங்களுக்குச் செல்லும்போது உடைக் கட்டுப்பாடு வேண்டும் என்று அறிவுரை வழங்கும் நோக்கத்திலேயே நான் அப்படிக் கூறினேன்.

இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தையான நான், ஒருவர் எந்த உடையை அணிய வேண்டும் அல்லது அணியக் கூடாது என்று கருத்துக் கூறவில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com