காஷ்ஷ்ஷ்மீமீமீர்ர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர்!

வட இந்தியாவில் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள இயற்கை எழில் மிக்க மாநிலம் ஜம்மு - காஷ்மீர்!
காஷ்ஷ்ஷ்மீமீமீர்ர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர்!

வட இந்தியாவில் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள இயற்கை எழில் மிக்க மாநிலம் ஜம்மு - காஷ்மீர்! இம்மாநிலம் ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, மற்றும் லடாக் என மூன்று மாறுபட்ட நில அமைப்பும் சீதோஷ்ண நிலையும் கொண்ட நிலப் பகுதிகளைக் கொண்டது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், வடக்கிலும் கிழக்கிலும் சீனா, தெற்கே இமாச்சலப் பிரதேசம், மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை எல்லையாகக் கொண்டது. வடக்கிலும் மேற்கிலும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் - காஷ்மீர் மற்றும் ஹிமாசலப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்கள் தெற்கு எல்லைகளாக உள்ளன. 

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் 4000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. வரலாற்றுக்கு முந்தைய மக்கள் குடியிருப்புப் பகுதிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் பல உள்ளன. 

இம்மாநிலம் நிர்வாக வசதிக்காக 22 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீநகர் மாநிலத்தின் கோடைக்கால தலைநகரமாகவும் ஜம்மு பகுதியில் உள்ள ஜம்மு நகரம் குளிர்கால தலைநகரமாகவும் உள்ளது. 

ஜம்மு!
சிவாலிக் மலைத்தொடரின் உயரம் குறைந்த பகுதியில் ஏற்ற இறக்கங்களுடனான நில அமைப்புடன் அமைந்துள்ள பகுதி ஜம்மு. ஜம்மு, நகரமே இப்பகுதியின் பெரிய நகரம். மேலும் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமுமாகும். 

ஜம்மு, வடக்கு, கிழக்கு, தென்கிழக்கில் திரிகுடா மலைத்தொடராலும் சூழப்பட்டுள்ளது. மாநிலத்தின் வடக்குப் பகுதி போல் இல்லாமல் ஆண்டு முழுவதுமே இதமான குளிருடன் கூடிய காலநிலை கொண்ட பகுதி. 

"தாவி' ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஜம்மு நகர எல்லைக்குள் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களும், பழமையான பள்ளிவாசல்களும் நிறைய உள்ளன. மஹாபாரதத்திலேயே இப்பகுதியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. 

இப்போதுள்ள ஜம்மு (பழைய) நகரம் கி.பி.1350 -இல் இப்பகுதியை ஆண்ட ராஜாசம்புலோச்சன் என்ற மன்னரால் உருவாக்கப்பட்டது. தாவி ஆற்றின் வலது கரையில் பழைய நகரமும், இடது கரையில் புதிய நகரமும் உள்ளது. பழைய நகரிலே உயரமான "தோத்ரா அரண்மனை‘ இருக்கிறது. மேலும் இரு நகரையும் இணைக்கும் வகையில் தாவி ஆற்றின் குறுக்கே 5 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஜம்மு பகுதியில் இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர். 

காஷ்மீர் பள்ளத்தாக்கு!

இமயத்திற்கும் "பீர்' மலைத்தொடருக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்குப் பகுதியே காஷ்மீர் பள்ளத்தாக்கு எனப்படுகிறது. 

பல அருவிகளும் ஆறுகளும் பாய்ந்து இயற்கை அழகுடன் பசுமையாகக் காட்சியளிக்கிரது. இஸ்லாமியர் அதிகம் வசிக்கின்ற பகுதி. 

சுமார் 100 கி.மீ. அகலத்தில்15520 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இமயமலை காஷ்மீர் பள்ளத்தாக்கை லடாக் பகுதியில் இருந்து பிரிக்கிறது. மேலும் "பீர் பஞ்சால்' மலைத்தொடர் இப்பள்ளத்தாக்குப் பகுதியை மேற்கிலும், தெற்கிலும் சூழ்ந்திருக்க, வடகிழக்குப் பகுதியில் பனி மூடிய இமயமலைத் தொடர் காட்சியளிக்கிறது.

அதிக மக்கள் வாழும் அழகிய காஷ்மீர் பள்ளத்தாக்கு, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1850 மீ. உயரத்தில் அமைந்திருக்க, அதன் அருகில் 5000 மீ உயரத்தில் "பீர் பாஞ்சல்' மலைத்தொடரும் , பொங்கிவரும் "ஜீலம்' ஆறும், பல பெரிய ஏரிகளும், மலைச்சரிவுகளில் எல்லாம் தோட்டங்களுமாக காட்சியளிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது.

லடாக்!


தொலைதூர மலைத்தொடர் அழகிற்காகவும், கலாச்சாரத்திற்காகவும் புகழ் பெற்றது. குறைவான மக்கள் தொகை கொண்ட இப்பகுதியில் பழமையான திபெத்திய வம்ச மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களது கலாச்சாரம் மிகுந்து காணப்படுவதால் "சிறிய திபெத்' என்று அழைக்கப்படுகிறது.
இங்கு பெளத்தர்களும், இஸ்லாமியர்களும் சரி சமமாக வசிக்கின்றனர். மலை ஏற்றத்திற்கு புகழ் பெற்ற இடம். 

ஜம்மு - காஷ்மீர், மற்றும் ஆசாத் காஷ்மீர் வரலாறு! 

இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஹரிசிங் என்ற மன்னர், ஜம்மு, காஷ்மீர், மற்றும் லடாக் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது காஷ்மீரின் மக்கள்தொகையில் 77% பேர் இஸ்லாமியர்களாக இருந்தனர். 

1947 -ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆங்கிலேயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்து, நாடு சுதந்திரம் அடையும் பொழுது பாரத தேசம் இந்தியா - பாகிஸ்தான் என மதத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 

இப்பிரிவினையின்போது நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளுடன் மன்னராட்சிக்கு உட்பட்ட சமஸ்தானங்களும் இருந்தன. நாடு இரண்டாகப் பிரிந்தபோது அனைத்து சிற்றரசர்களும் தங்கள் விருப்பப்படி இந்தியாவுடனோ, அல்லது பாகிஸ்தானுடனோ அல்லது தனி நாடாக அவர்களே ஆட்சி செய்து கொள்ளலாம் என முடிவு செய்து அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் காஷ்மீர் பகுதியை ஆட்சி செய்த அரசர் ஹரிசிங், இரு நாடுகளுடனும் இணையாமல் தனித்து தானே ஆட்சி செய்ய தீர்மானித்தார். 
இந்த சூழ்நிலையில் 1947அக்டோபர் 20 -ஆம் தேதி பாகிஸ்தான் படையின் ஆதரவு பெற்ற பழங்குடி மக்கள் காஷ்மீரைத் தாக்கினார்கள். மன்னர் ஹரிசிங் பாகிஸ்தானை எதிர்த்து ஆரம்பத்தில் போராடினார். ஆனால் அக்டோபர் 27- ஆம் தேதி சமாளிக்க முடியாமல் இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் இந்தியாவின் ராணுவ உதவியை நாடினார். இந்தியாவுடன் இணைந்தால் ராணுவ உதவி செய்வதாகக் கூறியதால் மன்னரும் ஒப்புக்கொண்டார். இந்தியாவுடன் உடன்பாட்டு ஆவணம் கையெழுத்தானது!

அதன்படி மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மொத்த நிலப்பகுதியும் இந்தியாவிற்கு உரியது, இந்தியாவின் நிர்வாகத்திற்கு உட்பட்டது எனத் தீர்மானிக்கப்பட்டது. 

அதன்பின் இந்தியப் படையும் காஷ்மீருக்குள் நுழைந்தது. ஆனால் அதற்குள் பாகிஸ்தான் படையினர் காஷ்மீரின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றி இருந்தனர். இந்தியப் படை மேற்கொண்டு பாகிஸ்தான் படை முன்னேறாமல் தடுத்தது. ஆனால் பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி இன்றுவரை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. 

மன்னர் ஹரிசிங் ஆட்சிக்கு உட்பட்ட, ஆனால் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை விட்டு வெளியேற பாகிஸ்தான் மறுத்துவிட்டது. ஜம்மு - காஷ்மீரின் அப்பகுதிதான் ஆசாத் - காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது.

இரு நாடுகளும் ஒப்புக்கொண்டு எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டை வரையறுத்துள்ளது. இரு நாட்டு ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிகவும் பதற்றமான பகுதியாகவும், உலகின் ஆபத்து நிறைந்த யுத்தப் பகுதியாகவும் உள்ளது. 

இரு நாடுகளுக்கு இடையே காஷ்மீர் விவகாரத்தால் 3 முறை பெரிய அளவிலும் நூற்றுக்கணக்கான சிறு தாக்குதல்களும் நடந்த வண்ணம் உள்ளன. 

அக்சாய் சின் - (இந்தியா - சீனா பிரச்னை)
அக்சாய் சின் லடாக்கின் வடமேற்கு நிலப்பகுதி. மிகக் குறைவான மக்கள் வசிக்கும் பகுதி. மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி இந்தியாவுடன் இணைந்த பகுதியாக இருக்க வேண்டும். ஆனால் இந்தியா - சீனா இடையிலான எல்லையை நிர்ணயிக்கும் "மக்மோகன் கோட்டினை‘ சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் 1962 -இல் இந்திய - சீனப் போர் நடந்தது. அதில் சீனா வெற்றி பெற்றது. அக்சாய் சின் நிலப்பகுதி முழுவதும் இப்பொழுது சீனாவின் ஆளுகையில் உள்ளது. 

அதிகாரபூர்வ அறிவிப்பு!
இந்திய வரைபடத்தில் உள்ள காஷ்மீர் மாநிலத்தின் மொத்த நிலப்பகுதியும் முழுமையாக தற்போது இந்தியாவிடம் இல்லை. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் "ஆசாத் காஷ்மீர்' மற்றும் "வடக்கு நிலம்' என 30% நிலப்பகுதியும் சீனாவின் கட்டுப்பாட்டில் லடாக்கின் வடமேற்குப் பகுதியான் "அக்சாய் சின்' என 10% நிலப்பகுதியும் உள்ளன. மீதம் உள்ள 60% பகுதிதான் இந்தியாவின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக உள்ளது. இதனை அதிகார பூர்வமாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதி ஜம்மு - காஷ்மீர் மாநிலம் எனப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் மற்றும் சீன நாட்டவர்கள் "இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர்' என்றே கூறுகின்றனர். 

கார்கில் போர்!
கார்கில் நகரம் லடாக் பகுதியில் உள்ளது. கரடுமுரடான மலைப்பிரதேசம். ஸ்ரீநகருக்கு 205 கி.மீ. தொலைவில் வடக்கு எல்லையில் இமயமலைகளுக்கு அருகில் உள்ளது. அதனால் கோடை காலம் குளிர்ந்ததாகவும், குளிர்காலம் நடுங்க வைக்கும் குளிருடன் மிக நீண்டதாகவும் இருக்கும். 

இங்குள்ள ராணுவ கண்காணிப்பு தளங்கள் சுமார் 5000 மீ உயரத்தில், மனித நடமாட்டமற்ற இடத்தில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை NH - ID கார்கில் நகரத்தின் வழியாகச் செல்கிறது. 

1999-ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி மேற்கு லடாக் பகுதியில் இருக்கும் கார்கில், திராஸ், முஷ்கா, பதாலிக் மற்றும் சோர்பத்ரா ஆகிய பகுதிகளில் சுமார் 200 கி.மீ. பரப்பிற்கு ஊடுருவினார்கள்.

இந்திய ராணுவத்தினர், வான் படையுடன் சேர்ந்து பாகிஸ்தானியர்களை விரட்டியடித்தனர். மே மாதம் 3 -ஆம் தேதி ஆரம்பித்த பதற்றமான நிலை, யுத்தமாக மாறி ஜூலை 26 -ஆம் தேதி அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது. அந்நாள் கார்கில் வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது. 

கார்கில் நினைவுச் சின்னம்!


இந்திய ராணுத்தால் "திரஸ்' பகுதியிலுள்ள "தோலோலிங்' மலையடிவாரத்தில் கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்களின் நினைவாக போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் ஓர் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வீரர்களின் படங்கள், போர் குறித்த ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சியாச்சென் (SIACHEN) 
பாகிஸ்தான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் இமய மலைக்கு வடக்கேஅமைந்துள்ளது "காரகோரம் மலைத்தொடர்.' 

500 கி.மீ. நீளம் கொண்டது. உலகின் இரண்டாவது உயரமான சிகரமாகிய "K2'' இங்குள்ளது. உயரம் 8611 மீ!

வட, தென் துருவங்களில் ஆர்டிக், அண்டார்டிகா தவிர்த்து மிகுந்த அளவில் பனிமூடிக் கிடக்கும் இடம் காரகோர மலைச்சிகரங்களே! 70 கி.மீ.நீளமுள்ள சியாச்சென் பனியாறும், 63 கி.மீ. நீளமுள்ள "ஃபியாஃபோ' பனியாறும் இம்மலைப் பகுதியில்தான் உள்ளன. 

லடாக்கிலிருந்து 50 கி.மீ. வடகிழக்கே காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாசின் பனிமலையில் 900 ச.கி.மீ. பரப்பளவு நிலத்தின் உரிமை குறித்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பிரச்னை உள்ளது.

இரு நாட்டு ராணுவமும் இங்கு முகாமிட்டு உள்ளதால் பதற்றம் நிறைந்த பகுதியாக எப்பொழுதும் உள்ளது. உலகின் உயரமான போர்முனை இதுதான். இங்குள்ள வீரர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் ஹெலிகாப்டர் மூலமே கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக 6400 மீ உயரத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. 

இப்போர்முனையில் யுத்தத்தில் இறந்த மற்றும் காயமடைந்த வீரர்களை விட பனிச்சரிவு, கடுமையான பனிப்பொழிவு, தாங்க முடியாத குளிர் போன்றவற்றால் மரணமடைந்த மற்றும் காயமடைந்த வீரர்கள் அதிகம்! அதனால் இரு நாடுகளுமே இப்போர்முனையில் உயிரிழப்பையும், பொருளாதார இழப்பையும் சந்திக்கின்றது.

....தொடரும்....
தொகுப்பு : கே.பார்வதி,
திருநெல்வேலி டவுன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com