கூத்தாநல்லூர்: இஸ்லாமியர்களின் புனிதமிகு பக்ரீத் பெருநாள்

சின்ன சிங்கப்பூர் என பெருமையுடன் அழைக்கப்படும் கூத்தாநல்லூர் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற ஊராகும். அதே போல, இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த கூத்தாநல்லூர் வட்டத்தில்
கூத்தாநல்லூர்: இஸ்லாமியர்களின் புனிதமிகு பக்ரீத் பெருநாள்

உலக மக்கள் அனைவருக்கும் பல்வேறு பண்டிகைகள் உள்ளன. அந்தந்த மதத்தினர்களும் அவரவர்களின் மார்க்கத்திற்கு ஏற்றபடி கொண்டாடி, மகிழ்ச்சி  அடைவார்கள். அதன்படி, இஸ்லாமியர்களின் பண்டிகைகளில், ரம்ஜானும், பக்ரீத்தும் முக்கியமான பண்டிகைகளாகும். அப்படிப்பட்ட திருநாளில் இன்று ஆகஸ்ட் முதல் தேதி பக்ரீத் பண்டிகை திருநாளாகும். 

திருவாரூர் மாவட்டத்தில், சின்ன சிங்கப்பூர் என பெருமையுடன் அழைக்கப்படும் கூத்தாநல்லூர் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற ஊராகும். அதே போல, இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ள பொதக்குடி, அத்திக்கடை, பூதமங்கலம், வேளுக்குடி, வடபாதிமங்கலம் உள்ளிட்ட ஊர்களும் தனிச் சிறப்புகள் கொண்ட ஊர்களாகும். 

இஸ்லாமியர்களின் திருநாளான பக்ரீத் பண்டிகை குறித்து, கூத்தாநல்லூர் எம்.எப்.பீ. இஸ்லாமியக் கல்லூரி முதல்வர் தானாதி ஜாகிர் ஹுசைன் ஆலிம் கூறியதாவது:  அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டில் நபி இப்ராஹிம், தனது மனைவியுடன்,தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததை நினைத்து, வருந்தி இறைவனிடம் மன்றாடினார்கள். இறைவன் அவரின் தள்ளாத வயதில், ஒரு ஆண் குழந்தையை கொடுத்தார். இதைக் கண்ட இப்ராஹீம் நபி, எல்லை இல்லாத மகிழ்ச்சி அடைந்தார். இந்த மகழ்ச்சி அடங்குவதற்குள் இறைவனின் சோதனை அவருக்கு வந்தது. தனது மகன் இஸ்மாயிலை, தனக்காக நரபலி கொடுக்க வேண்டும் என்று நபி இப்ராஹீம் க்கு, இறைவன் ஆணையிட்டார். ஆணையை நிறைவேற்ற இப்ராஹீம் முனைந்த போது, அதை தடுத்த இறைவன், இஸ்மாயிலுக்கு பகரமாக ( மாற்றாக ) ஒரு ஆட்டைப் பலி இடுமாறு ஏவினார். இறைவனின் ஏவலை ஏற்றுக் கொண்ட நபி இப்ராஹீம் ஒரு ஆட்டை பலி கொடுத்து இறை விசுவாசத்தைக் காட்டினார்கள். இந்த தியாகத்தை நினைவு படுத்தும் விதமாகத் தான், முஸ்லீம்கள் இத் தியாகத் திருநாள் அன்று இறைவனுக்காக ஆட்டை பலி கொடுத்து, அதன் இறைச்சியை தாங்களும் உண்டு, உறவினர்கள், ஏழைகள் மற்றும் பிற சமுதாய மக்களுக்கும் கொடுத்து மகிழ்கிறார்கள்.

மேலும், இன்றைய தினத்தில் இஸ்லாமியர்கள் பொருளாதார பலமும், உடல் ஆரோக்கிய பலமும் உள்ளவர்கள், புனித மெக்காவிற்கு யாத்திரை செல்வார்கள். அங்கு, காஃபா என்ற ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபட்டு தங்களின் பாவங்களைப் போக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறார்கள். அராஃபா என்ற இடத்தில் ஹஜ் புனித யாத்திரை சென்றவர்கள் ஒன்று கூடி சிறப்புத் தொழுகை நடத்துவார்கள். இந்த இடத்துக்குப் போகவில்லை யென்றால், ஹஜ் யாத்திரை சென்றதில் பலனில்லை. தொடர்ந்து, மினார் என்ற இடத்தில்,3 சாத்தான்கள் மீது கல் எறிவார்கள். 

கல் எறிவது என்பது, இப்ராஹீம் தனது மகன் இஸ்மாயிலைப் பலி கொடுக்கப் போகும் போது, சாத்தான் இப்ராஹீம் மிடம் வந்து, உங்களது பாசமான பிள்ளையை பலி கொடுக்கப் போகிறீர்களே எனக் கேட்டதும், வந்துள்ளது சைத்தான் எனத் தெரிந்து கொண்டு, ஒரு கல்லை எடுத்து சைத்தான் மீது அடித்தார். சைத்தான் அடுத்து, தாயார் ஹஜராவிடமும் போய் சொன்னதும் அவரும் கல்லால் அடிக்கிறார். அதைத் தொடர்ந்து, இஸ்மாயிலிடம் சென்ற சாத்தான், உன் தந்தை உன்னை நரபலி கொடுக்கப் போகிறார் என்றதும், இஸ்மாயிலும் கல்லால் அடிக்கிறார். அன்று முதல் கல் எறியப்படுகிறது. மூவரிடமும், தனித்தனியாகச் சொல்லிப் பார்த்தும் பயனில்லை. 

இந்தப் புனித நாளான பக்ரீத் திருநாளில், இஸ்லாமியர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப, ஒட்டகம், மாடு, ஆடு இவைகளில் ஏதாவது ஒன்றை இறைவனுக்கு பலியாக்குவார்கள். அதை, தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு பங்கு, ஏழைகளுக்கு ஒரு பங்கு, பிற சமுதாய மக்களுக்கு ஒரு பங்கு என 3 பங்காகப் பிரிப்பார்கள். இறைச்சியின் தோல்களை, பள்ளி வாயில்களில் கொடுத்து விடுவார்கள். அவர்கள் அதை விற்று, பள்ளிவாயிலுக்கு வரக்கூடிய ஏழைகளுக்கு தர்மமாக கொடுப்பார்கள். ஒற்றுமையின் உணர்வை வெளிப்படுத்தும் பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் பண்டிகை எனத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com