ஜப்பானியர்கள் கொண்டாடும் டோரினோ இச்சி திருவிழா

ஜப்பானியர்கள், விஞ்ஞான வளர்ச்சியின் உச்சியில் அமர்ந்திருப்பவர்கள். கல்வி அறிவு பெற்றவர்கள் என்று வரும்பொழுது,
ஜப்பானியர்கள் கொண்டாடும் டோரினோ இச்சி திருவிழா

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் 61 

ஜப்பானியர்கள், விஞ்ஞான வளர்ச்சியின் உச்சியில் அமர்ந்திருப்பவர்கள். கல்வி அறிவு பெற்றவர்கள் என்று வரும்பொழுது, அதிலும் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் ஏறத்தாழ 100% விழுக்காடு என்று ஜப்பானியர்கள் இருக்கிறார்கள். மருத்துவம், இயற்பியல் , வேதியியல் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களில் 19 நபர்கள் இதுவரை நோபல் பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளனர்; தங்கள் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். 

இங்கு வேலை இல்லாதவர்கள் என்பது 47 சதவிகிதம் பேர். உலகின் தலைசிறந்த வாகனங்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், இயந்திரங்கள் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன. இவ்வளவு சாதனைகளைச் செய்திருந்தும், தங்களுடைய கலாசாரம், பண்பாடு, மத நம்பிக்கைகள் என்று வரும்பொழுது முன்னோர்கள் வகுத்த வழிமுறைகளைப் பயபக்தியோடு பின்பற்றுகிறார்கள்.
1992-இல் நான் முதல்முதலாக ஜப்பானுக்குச் சென்றபொழுது நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலின் வாசலுக்கு அருகில் மூன்று ஜப்பானிய பெண்கள் நின்றுகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முறையும் அந்த வழியாக நுழையும் கஸ்டமர்களையும், வெளியேறும் நபர்களையும், கீ கொடுத்த பொம்மைகளைப்போல இடுப்பை கீழ்நோக்கி வளைத்து, தலையைக் கவிழ்த்து வணங்குவார்கள். 

நன்றி சொல்வதற்கும், வரவேற்பதற்கும் இப்படிச் செய்வது தொன்றுதொட்டு வந்த ஜப்பானிய பண்பாடாகும். 2018-இல் நான் ஜப்பானுக்கு நான்காவது முறையாகச் சென்றபொழுதும் இப்படிப்பட்ட வணக்கங்களைப் பெற்றோம். நாம்தான் வளர்ச்சியின் உச்சியில் இருக்கிறோமே என்று தங்கள் பாரம்பரியத்தைப் புறக்கணிக்கவில்லை.

வயதில் முதிர்ந்த ஜப்பானிய மக்களுக்கு அங்கே தரப்படும் மரியாதையைப் பார்த்து மனம் நெகிழ்ந்து இருக்கிறேன். ரெஸ்டாரன்டுகள் மற்றும் விருந்துகளில் அவர்களுக்கு முதலிடம். உணவு, பானம் என்று வரும்பொழுது, முதியவர்களுக்குப் பரிமாறிய பிறகுதான் மற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஜப்பானின் தேசிய விளையாட்டு (sumo) "சுமோ'. 1500 வருடங்களுக்கு முன் உருவான இந்த விளையாட்டுக்கு என்று இருக்கும் மதச்சடங்குகளை இன்றளவும் இம்மி பிசகாமல் அரங்கேற்றுகிறார்கள். சுமோ வீரர்கள் வாழும் இடங்களுக்குச் சென்று நேரில் அவர்களைச் சந்தித்தேன். 

அங்கே, ஆட்டம் தொடங்குவதற்கு முன் சுமோ வீரர்கள், மலை போன்ற தங்களின் உடல்களை மோதிக்கொள்வதற்கு முன் ஒரு காலைத் தரையின் ஊன்றி மறுகாலை மேல்நோக்கி தூக்குகிறார்கள். பிறகு கைகளை வேகமாகத் தட்டுகிறார்கள். "இது எதற்கு' என்றதற்குக் "கடவுளின் கவனத்தைத் தங்கள் மீது ஈர்ப்பதற்காக' என்றனர். 

ஜப்பானியர்களின் மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கும் ஷின்டோ (Shinto) கோயிலுக்குள் நுழைவதற்கு முன் கைகளைத் தட்டிய பிறகே உள்ளே செல்கிறார்கள். இது மிகவும் பழமையான பழக்கம். சுமோ விளையாட்டைத் துவங்குவதற்கு முன் உப்பை மேல்நோக்கி எரிவது இன்றளவும் தொடர்கிறது. இது கெட்ட தேவதைகளை விரட்டுவதற்காகச் செய்யப்படுகிறது.

"மவாசி' (Mawashi) என்கின்ற கோவணம் போன்ற உடையை இடுப்பில் கட்டியிருப்பது, சுமோ வீரர்களுக்கே உரித்தான தலை அலங்காரம் என்பதில் இன்றளவும் மாற்றம் இல்லை. அது போல சுமோ சண்டையின், ரெப்பிரியை ஜியோஜி (Gyoji) என்று அழைக்கின்றனர். அவர் உடையே பிரத்தியேகமானது.
அதைத்தவிர இந்த உடையில் ஒரு கத்தி இடுப்பின் அருகே சொருகப்பட்டிருக்கும். இவர் தப்பான தீர்ப்பை வழங்கினால் "செப்புக்கு' (seppuku) என்ற முறையில், இந்த கத்தியைக் கொண்டு, வயிற்றை இடதுபுறத்திலிருந்து, வலதுபுறம் வரை வெட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டுமாம். சுமோ விளையாட்டை அந்த அளவிற்கு ஜப்பானியர்கள் புனிதமாகக் கருதியதால் இன்றளவும் ஜியோஜியின் இடுப்பில் கத்தி காணப்படும்.

ஏன் இவற்றை எல்லாம் இங்கே சொல்லுகிறேன் என்றால், ஜப்பானியர்கள் மேற்கத்திய நாகரிகத்தைப் பின்பற்றினாலும், தங்களுடைய பாரம்பரிய நம்பிக்கைகளை பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகின்றனர். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவைகளை அவர்கள் விட்டுக் கொடுப்பதே இல்லை. டோரினோ இச்சி திருவிழாவும் ஈடோ (Edo) காலகட்டத்தில் தொடங்கி இன்றளவும் அதே ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது.
இந்த முறை 2018-இல் நாங்கள் ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் காலடி வைத்தபொழுது மக்கள் இலையுதிர் காலத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர். பல இடங்களில் மேப்பிள் மரங்களின் இலைகள் பச்சை வண்ணத்தைத் தொலைத்து, சிகப்பு நிறத்தை ஏந்திக் கொண்டிருந்தன. 
பல வகையான மரங்களில் இருந்து உதிர்ந்த வண்ணம் இருந்த இலைகள் தெருக்களில் பாய்விரித்திருந்தன. தென்றல் காற்றில், கீழே விழுந்த இலைகள் உருண்டோடிய பொழுது என் மனமும் அவைகளைப் பின் தொடர்ந்து மயங்கியது.

எப்பொழுதும் போல் டோக்கியோ நகரத்து மக்கள் சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்தனர். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ரிசப்ஷனுக்கு அருகே இருந்த ஒரு பலகையில், டோக்கியோவில் நடக்கவிருக்கும் முக்கியமான நிகழ்வுகளைப் பற்றியும், கேளிக்கைகள் பற்றியும் விளம்பர அட்டைகளைச் சொருகி வைத்திருந்தனர்.

அதில் இருந்த ஒர் அட்டையின் மூலம் டோக்கியோவில் இன்னும் இரண்டு நாட்களில் நடக்க இருக்கும் டோரினோ இச்சி திருவிழாவைப் பற்றி அறிந்துகொண்டோம். டோரினோ இச்சி ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் மாதம் சீனத்துக் காலண்டரில் குறிக்கப்பட்டிருக்கும் ரூஸ்டர் (rooster) நாட்களில் ஓடோரி (Otori) கோயில்களில் ஜப்பானின் பல பாகங்களில் கொண்டாடப்படுகிறது.

ரூஸ்டர் நாட்கள் நவம்பர் மாதத்தில் ஒவ்வொரு 12 நாட்களுக்கு ஒருமுறை வருவதால், டோரினோ இச்சி, ஒரு ஆண்டில் இரண்டு முறை கொண்டாடப்படுகிறது. 2017-ஆம் ஆண்டு ரூஸ்டர் நாட்கள் மூன்று முறை வந்திருக்கிறது. 2017-ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி முதல் முறை. அதே ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி இரண்டாவது முறையாகவும், நவம்பர் 30 ஆம் தேதி என டோரினோ இச்சி திருவிழாவை மூன்று முறை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.

டோரினோ இச்சி திருவிழா எதற்காகக் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

அறுவடை முடிந்துவிட்டது. தானியங்கள் நிறைந்து காணப்படுகிறது. மக்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறார்கள். கடந்து செல்லப்போகும் ஆண்டிற்கு நன்றி சொல்லி, வரப்போகும் புது ஆண்டை வரவேற்க தயாராகி, அந்த ஆண்டு தரப்போகும் நன்மைகளுக்காகவும், வழங்கப்போகும் செல்வத்திற்காகவும் கொண்டாடப்படுவது தான் டோரினோ இச்சி திருவிழா.
ஜப்பான் முழுவதிலும் இருக்கும் ஓடோரி (Otori) கோயில்களில் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த டோரினோ இச்சி திருவிழா நடக்கும் சமயத்தில், நானும் என் கணவரும் அங்கே இருந்தது எங்கள் பாக்கியமே. காணுவதற்கு அரிய காட்சிகளையும், மத நம்பிக்கைகளையும் கண்டு மகிழ்ந்தோம்.


(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com