உங்களுக்குத் தெரியுமா..? 

நமக்கு எல்லாம் தெரியும். ஆனால் எதுவும் தெரியாது என்ற நிலை எல்லோரிடமும் நிலவி வருகிறது. அதனை நினைவூட்டு விதமாக அறிந்தும்
உங்களுக்குத் தெரியுமா..? 


எல்லாம் தெரியும். ஆனால் எதுவும் தெரியாது என்ற நிலை எல்லோரிடமும் நிலவி வருகிறது. அதனை நினைவூட்டு விதமாக அறிந்தும் அறியாத, தெரியாத தகவல்களை இந்த தொடரின் மூலம் தெரிந்துகொள்வோம். 
தெரியாதவற்றை தெரிந்து கொள்வோம், தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்வோம்.

வாங்க தகவல்களுக்குள் செல்வோம்...

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது அறிவுசார் சொத்துக்கள் உருவாக்கப்படுவதால், இன்றைய காலத்தில் பதிப்புரிமைச் சட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. புதிய படைப்புகளை உருவாக்குவதற்கு தொழில்நுட்பங்களை ஊக்கமளிக்கும் அதேநேரத்தில், படைப்புகள் திருட்டு போவதற்கும், அபகரிக்கப்படுவதற்கும் காரணமாகி விடுகின்றன. அத்தகைய திருட்டுகளை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களை சுருக்கமாக உங்களுக்குத் தெரியுமா? என்ற தொடரில் ரத்தின சுருக்கமாக பார்ப்போம்...

* பதிப்புரிமை என்றால் என்ன? 
பதிப்புரிமை என்பது, இலக்கியங்கள், இசை, நாடகம், கலைப்படைப்புகள் ஆகியவற்ரின் படைப்பாளர்களுக்கும், திரைப்படம், இசைப்பதிவுகள் போன்றவற்றின் உரிமையாளர்களுக்கும் வழங்கப்படும் சட்ட உரிமை ஆகும். தங்களின் படைப்புகளை மறு உருவாக்கம் செய்தல், பொதுத்தொடர்புக்கு அளித்தல், தழுவி எழுதுதல், மொழி பெயர்த்தல் போன்ற வை தொடர்பாக படைப்பாளிகளுக்கு சில பாதுகாப்பு அம்சங்களை இந்த உரிமை வழங்குகிறது. கலைப்படைப்புகளுக்கு பாதுகாப்பும், வெகுமதியும் தருவதுதான் இதன் நோக்கமாக உள்ளது. 

* இந்திய பதிப்புரிமையை எந்தச் சட்டம் நிர்வகிக்கிறது? 
1957  ஆண்டில் உருவாக்கப்பட்டு பின்னர் 1993, 1984, 1992, 1994 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்ட பதிப்புரிமை சட்டம்தான் இந்தியாவில் பதிப்புரிமைகளை நிர்வகிக்கிறது. இந்தியாவின் பதிப்புரிமைச் சட்டம், 1886 ஆம் ஆண்டின் பெர்ன் மாநாட்டு ஒப்பந்தம், 1951 ஆம் ஆண்டின் உலகளாவிய பதிப்புரிமைச் சட்டம், 1995 ஆம் ஆண்டின் அறிவுசார் சொத்துரிமையின் வணிகம் தொடர்பான அம்சங்கள் பற்றிய உடன்பாடு (TRIPS) உள்ளிட்ட பல்வேறு உலக ஒப்பந்தளுடன் ஒத்துப்போகும் வகையில் அமைந்திருக்கிறது. 1961 ஆண் ஆண்டின் ரோம் மாநாடு மற்றும் உடன்பாட்டில் இந்தியா பங்கேற்கவில்லை என்றபோதிலும், அதன் பிரிவுகள் அனைத்தும் இந்தியசட்டத்துடன் ஒத்துப்போகின்றன, எனினும் இணையதள உடன்பாடுகள் என்று பொதுவாரக அழைக்கப்படும் இரு உடன்பாடுகளில் இதுவரை இந்தியா கையெழுத்திட வில்லை. இந்த இரு சட்டங்களும் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் WIPO கட்டுப்பாட்டில் வருகின்றன. இந்தச் சட்டங்கள் WIPO காப்புரிமை உடன்பாடு (WCT), WITO செல்பாடுகள் மற்றும் ஃபோனோகிராம் உடன்பாடு WPPT என்று அழைக்கப்படுகின்றன. இணையதளங்கள் பெருகிவிட்ட நிலையில் பதிப்புரிமையை கைவசம் வைத்திருப்போர், ஃபோனோகிராம் கலைஞர்கள் மற்றும் உரிமையாளர்களின் நலனை பாதுகாப்பதற்காகவே, தொடர்புடைய அனைவருடனும் பேசி இந்தச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. 

* 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பின் எல்லைகள் என்ன? 
1957 ஆம் ஆண்டின் பதிப்புரிமைச் சட்டத்தின்படி, இலக்கியம், இசை, நாடகம், கலைப்படைப்புகள், திரைப்படங்கள், இசைப்பதிவுகள் போன்றவற்றின் மூலம் படைப்புகள் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படுகிறது. மூலப்படைப்புகளும், கணினி பயன்பாட்டுக்கான சூத்திரங்களும் இந்த சட்டத்தின்படி பாதுகாக்கப்படுகின்றன. 

பதிப்புரிமை என்பது கருத்துக்களை வெளியிடும் முறைக்கு மட்டும்தானே தவிர, கருத்துக்களுக்கு அல்ல. மேலும் சமுதாயத்தின் நலன்கருதி சில படைப்புகளுக்கு பதிப்புரிமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிசிகள், தனியார் ஆய்வுகள், நீதிமன்ற நடைமுறைகள், விமர்சனங்கள், செய்தி அறிக்கைகள், இலவசமாக நடத்தப்படும் தொழில் முறையற்ற நிகழ்ச்சிகள், இலக்கிய ஒலிப்பதிவுகள், நாடகம் மற்றும் இசைப்படைப்புகள் போன்றவை சில நிபந்தனைகளின் அடிப்படையில் பதிப்புரிமையில் இருந்து விலக்களிக்கப்பட்ட சிலவாகும்.

* பதிப்புரிமைச் சட்டத்தால் யாருடைய உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன? 
மூலப்படைப்பின் ஆசிரியருடைய உரிமை இச்சட்டப்படி பாதுகாக்கப்படுகின்றது. கலைப்படைப்புகளின் ஆசிரியர், இசைப்படைப்புகளின் இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், ஒலிப்பதிவுகளின் தயாரிப்பாளர், புகைப்படக்காரர்கள், கணினி மூலம் தயாரிக்கப்படும் படைப்புகளின் தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், இசைக்கருவி வாசிப்பவர்கள், ஒலிப்பதிவு நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமைகலும் இச்சட்டப்படி பாதுகாக்கப்படுகின்றன. நிகழ்ச்சிகளை நடத்துவோர், ஒலிபரப்புவோர் ஆகியோரின் உரிமைகளையும் இச்சட்டம் பாதுகாக்கிறது. 

* ஒரு படைப்புக்கு பதிப்புரிமை கோரி பதிவு செய்வது எப்படி? 
மூலப்படைப்புகள் உருவாக்கப்பட்டதுமே அதற்கு பதிப்புரிமை வந்து விடுகிறது. எனினும், படைப்புகளுக்கு பதிப்புரிமை கோரி பதிவு செய்வது நீதிமன்றங்களால் ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுவதால், படைப்புகளை பதிவுசெய்து கொள்வது சிறந்ததாகும்.  படைப்புகளை பதிவு செய்ய தில்லி பதிப்புரிமை அலுவலகத்தில் உள்ள பதிப்புரிமை பதிவாளருக்கு பதிப்புரிமை விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

* பதிப்புரிமை எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்? 
பதிப்புரிமை பொதுவாக 60 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இலக்கியம், நாடகம், இசை மற்றும் கலைப்படைப்புகள் ஆகியவற்றுக்கான பதிப்புரிமை அவற்றின் ஆசிரியர் இறந்த பிற 60 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். திரைப்படங்கள், ஒலிப்பதிவுகள், புகைப்படங்கள், ஆசிரியரின் மறைவுக்கு பிறகு புதுபிக்கப்படும் படைப்புகள், அனாமதேய படைப்புகள், அரசின் படைப்புகள், சர்வதேச அமைப்புகளின் படைப்புகள் போன்றவற்றுக்கு அந்த படைப்புகள் போன்றவற்றுக்கு அந்த படைப்புகள் வெளியான நாளில் இருந்து 60 ஆண்டுகளுக்கு படைப்புரிமை இருக்கும். 

* பதிப்புரிமைச் சட்டம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது? 
பதிப்புரிமை தொடர்பான விவகாரங்களை கவனித்துக்கொள்ள "பதிப்புரிமை செயல்பாட்டு ஆலோசனைக்குழு" என்ற பெயரில் ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பதிப்புரிமைச்சட்டம் செயல்படுத்தப்படுவதை இந்த அமைப்பு ஆய்வு செய்கிறது. இது தவிர பதிப்புரிமை வாரியம் என்ற பெயரில் பாதியளவு-நீதித்துறை அமைப்பு ஒன்றும் செயல்படுகிறது. சில வகையான மேல்முறையீடுகளை விசாரிக்கும் அதிகாரம் இந்த அமைப்புக்கு உண்டு. பதிப்புரிமை பதிவாளருக்கும் உரிமையியல் நீதிமன்ற அதிகாரம் உண்டு. உரிமை தொடர்பான வழக்குகளை அவர் விசாரிக்க முடியும்.

அஸ்ஸாம், கோவா, குஜராத், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மராட்டியம், மேகாலயா, ஒரிசா, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, மேற்குவங்கம், அந்தமான் நிகோபார் தீவுகள், சண்டிகர், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கலில், பதிப்புரிமை தொடர்பான வழக்குகளை விசாரிக்க அந்தந்த மாநிலங்களின் குற்றப்பிரிவு காவல்துறையில் தனிப்பிரிவுகளோ அல்லது சிறப்பு பிரிவுகளோ ஏற்படுத்தப்பட்டுள்ளன. பதிப்புரிமை சட்டத்தை செயல்படுத்துவதில் சம்மந்தப்பட்ட தொழில்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த தொடர்பு அதிகாரிகளும் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். 

* பதிப்புரிமை தொடர்பாக செய்யப்படும் பொதுவான விதி மீறல்கள் எவை? 
போலியான படைப்புகளை தயாரித்தல், அவற்றை விற்பனைக்கோ, வாடகைக்கோ விடுதல், பதிப்புரிமைச் சட்டப்படி தடை செய்யப்பட்டு நிகழ்ச்சிகளை நடத்துதல், படைப்புகளின் நகல்களை விற்பனைக்காகவோ அல்லது அதன் ஆசிரியரின் உரிமையை பாதிக்கும் வகையிலோ வெளியிடுதல், படைப்புகளை அனுமதி பெறாமல் விற்பனைக்காக பார்வைக்கு வைத்தல், அனுமதி பெறாத படைப்புகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்தல் ஆகியவை விதிமீறல் ஆகும்.

* பதிப்புரிமை மீறலுக்கு எதிரான உரிமையியல் நடவடிக்கைகள் என்ன? 
ஒரு படைப்பின் மீதான பதிப்புரிமையை மீறுவோர் மீது, அந்த படைப்பின் உரிமையாளர் தடை பெறுதல், இழப்பீடு பெறுதல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க மாவட்ட அளவிலான நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு.

ஏதேனும் படைப்புகளின் பதிப்புரிமை மீறப்பட்டதாகவோ அல்லது மீறப்படும் வாய்ப்பிருப்பதாகவோ உதவி ஆய்வாளர் நிலைக்கு மேல் உள்ள காவல்துறை அதிகாரி கருதினால், பதிப்புரிமை மீறலுக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள், உருவாக்கப்பட்ட படைப்புகள் போன்றவற்றை எந்தவிதமான நீதிமன்ற ஆணையுமின்றி பறிமுதல் செய்யலாம். அதன்பின்னர் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும். 

* காப்புரிமைச் சட்ட மீறலுக்கான தண்டனை என்ன? 
எவரேனும் தெரிந்தே பதிப்புரிமையை மீறினாலோ அல்லது அதற்கு துணை போனாலோ, அது பதிப்புரிமை சட்டத்தின் 63வது பிரிவின்படி குற்றமாகும். இதற்காக குறைந்தபட்சம் 6 மாத சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபதாரமும் விதிக்கப்படும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இதே தவறை செய்தால் குறைந்தது ஓராண்டு சிறையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். 

* இணையதள பதிப்புரிமை மீறலை தடுப்பதற்கான சட்டம் எது? 
பதிப்புரிமை மீறல் தொடர்பான அனைத்து குற்றங்களும் பதிப்புரிமை சட்டத்தின் கீழ் வரும். அதேபோல் இணையதள பதிப்புரிமை மீறலும் இச்சட்டத்தின் கீழ் வரும். இந்தியாவில் கணினி சட்டங்கள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் இணையதள பதிப்புரிமை மீறல் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அச்சட்டத்தின் 43வது பிரிவில், கணினி, கணினி நெட்வொர்க் ஆகியவற்றின் உரிமையாளர் அல்லது பொறுப்பாளரின் அனுமதியின்றி ஏதேனும் விவரங்களை பதிவிறக்கம் செய்தல், தகவல்களை அல்லது தகவல் தொகுப்புகளை எடுத்தல், பிரதி எடுத்தல், தகவல்கள் அல்லது தகவல் தொகுப்புகளை எடுத்தல் உட்பட கணினியில் எளிதில் பிரித்து எடுக்கும் வகையிலான சேமிப்பு அமைப்பில் இருந்து ஏதேனும் விவரங்களை எவரேனும் எடுத்தால், அதனால் பாதிக்கப்படுபவருக்கு அதிகபட்சமாக ஒரு கோடி வரை இழப்பீடு தர வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

எனினும், பதிப்புரிமை சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்தான் செல்லுபடியாகும். ஆனால் இணையதளம் சர்வதேச எல்லைகளை தாண்டிய ஒன்றாகும். எனவே, இணையதள திருட்டுக்களை தடுக்கவும். சர்வதேச சட்டங்களுக்கு இணையான சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com