காதலுக்காக முடிதுறந்த மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்

தான் காதலித்து மணந்த ஆஸ்திரேலியப் பெண்ணுக்காகத் பதவியைத் துறந்தார் ஒரு தமிழ் மன்னர்.
காதலுக்காக முடிதுறந்த மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்
காதலுக்காக முடிதுறந்த மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்

மன்னராட்சிக் காலத்தில் உலகிலேயே முதன்முதலாகக் காதலுக்காக முடிதுறந்த மன்னர் என இங்கிலாந்து அரசர் எட்வர்டு பெயர்தான் பிரபலமாகியிருக்கிறது.

ஆனால், அந்த நிகழ்வுக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு தமிழ் மன்னர், தான் காதலித்து மணந்த ஆஸ்திரேலியப் பெண்ணுக்காகத் தனது மன்னர் பதவியைத் துறந்தார் என்பது வரலாறு.

அவர்தான் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரை மன்னர்களில் ஒருவரான மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்.

மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்
மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மிக முக்கிய பங்கு வகித்தவர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான். 1886 முதல் 1928 வரை இவரது ஆட்சிக்காலம். 1886 மே 2 ஆம் நாள் தன்னுடைய 11 ஆவது வயதில் மன்னராகப் பொறுப்பேற்றவர். ஜூலை 8 ஆம் தேதி ஆங்கிலேயே அரசு இவரை மன்னராக அங்கீகரித்தது. சிறு வயது மன்னர் என்பதால் அரசுப் பொறுப்புகளை கவனித்துக்கொள்ள சேஷய்யா சாஸ்திரி என்பவர் திவானாக நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்சு ஆகிய மொழிகள் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்குக் கற்றுத் தரப்பட்டன. கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் அளவுக்குப் பயிற்சி பெற்றார். வெளியுலக அறிமுகமும் வேண்டும் என்பதால் சென்னையில் தொடங்கிய பயணம், புதுச்சேரி, கொல்கத்தா, தில்லி, மைசூர், மும்பை போன்ற நகரங்களுக்கும் நீண்டது. 

மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்
மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்

மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்கு 19 வயது நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 1894 நவம்பர் 26 ஆம் தேதி  முழு நிர்வாகப் பொறுப்பு அளிக்கப்பட்டது. இவரது காலத்தில் வந்தவைதான் இப்போதும் புதுக்கோட்டையை மிளிரச் செய்து வரும் நீதிமன்றம், பதிவுத் துறை அலுவலகம், வருவாய்த் துறை அலுவலம், கிளைச் சிறை போன்றவற்றை உள்ளடக்கிய பொது அலுவலக வளாகம், ராணியார் அரசு மருத்துவமனை, நகர்மன்றம் போன்ற கட்டடங்கள் எல்லாமும். 

1898 இல் ரோம் நகருக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பியபோது அவரை வரவேற்கக் கட்டப்பட்டதுதான் இப்போது புதுக்கோட்டையில் பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் நகர்மன்றம்.

மன்னர் ஆட்சியில் மக்களின் பங்களிப்பையும் உறுதிசெய்ய மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டப்பேரவையை அமைத்தவர் மார்த்தாண்ட பைரவர்தான். இவரது ஆட்சியின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழாவின்போது ஜார்ஜ் மன்னர் வழங்கிய பட்டம் - 'கிராண்ட் கமாண்டர் ஆப் தி இந்தியன் எம்பரர்.'

இத்தனைச் சிறப்புகளைக் கொண்ட மார்த்தாண்ட பைரவ தொண்டைமான், 1915 இல் ஆஸ்திரேலியா சென்றார். அங்கு மெல்பர்ன் நகரிலுள்ள வழக்குரைஞர் உல்ப் பிங்க் என்பவரின் மகள் எஸ்மி மோலி பிங்க் மீது காதல் மலர்ந்தது. இருவருக்கும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அங்கேயே திருமணமும் நடைபெற்றது. 

புதுக்கோட்டை சமஸ்தானம்
புதுக்கோட்டை சமஸ்தானம்

நிறபேதங்கள் கடுமையாக நிலவிய அந்தக் காலத்தில் இவர்களின் திருமணம் குறித்து இங்கிலாந்து அரசும் ஆஸ்திரேலிய அரசும் அதிர்ச்சியடைந்தன. ஆஸ்திரேலியாவிடம் விளக்கம் கேட்டது இங்கிலாந்து.

தேனிலவை முடித்துக்கொண்டு மன்னர் மார்த்தாண்ட பைரவரும் மோலியும் 1915 நவம்பர் 22 ஆம் தேதி புதுக்கோட்டை திரும்பினர். திருக்கோகர்ணம் பகுதியிலுள்ள கருப்பர் கோயில் அருகே பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்றுள்ளனர். தொடர்ந்து நகர்மன்றத்திலும் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி. மோலிக்கு ராணியார் உயர்நிலைப் பள்ளியில் தனியே வரவேற்பும் நடைபெற்றது.

இந்த நிலையில் மோலி கருவுற்றார். ஆனால், புதுக்கோட்டையில் இருப்பது பாதுகாப்பானதல்ல என எண்ணி ஆஸ்திரேலியா புறப்பட முடிவு செய்தார் மோலி. மார்த்தாண்ட பைரவரும் ஒப்புக்கொண்டு இருவரும் ஆஸ்திரேலியா சென்றனர். அங்கு சிட்னியில் மோலிக்கு மகன் பிறந்தான். சிட்னியில் பிறந்ததால், சிட்னி மார்த்தாண்டன் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

வெளிநாட்டுப் பெண்ணுக்கு மகன் பிறந்ததால் வாரிசுப் பிரச்னை உருவானது என்றும், ஆங்கிலேயே அரசும் மன்னருக்கு சாதகமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. அதாவது, புதுக்கோட்டையில் தீரர் சத்தியமூர்த்தி தலைமையில் மக்கள் எதிர்ப்புக் குரலை எழுப்பியுள்ளனர்.

அதேநேரத்தில் இங்கிலாந்து அரசு, வெள்ளையர் - இந்தியர் இடையே அரச மணம் முடிப்பதை அங்கீகரிப்பதில்லை என்று சட்டமே இயற்றியிருந்திருக்கிறார்கள். நிறவெறிதான் இச்சட்டத்தின் அடிப்படை. கருப்பர் கலப்பு ஏற்படக் கூடாது என்பதே இதன் அடிப்படை. 

மோலி
மோலி

அப்படியும் மார்த்தாண்ட பைரவர், இங்கிலாந்து சென்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். தனக்கு அருகில் ராணியாக அமரும் அங்கீகாரத்தை மோலிக்கு அளிக்க வேண்டும் எனக் கோரினார். ஆனால், அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இதனால், காதல் மனைவியைப் பிரிய விரும்பாமல் - செல்ல மகனைப் பிரிய மனமில்லாமல் மன்னர் பதவியைத் துறப்பது என்று முடிவு செய்தார். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் வைப்பு நிதியில் இருந்து ரூ. 20 லட்சம், திருமண நிதியில் இருந்து ரூ. 1.60 லட்சம் மார்த்தாண்ட பைரவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

குடும்பத்துடன் பாரிஸ் நகரில் குடியேறினர். அங்கேயே வாழ்ந்து, 1928 மே 28இல் மார்த்தாண்ட பைரவர் காலமானார். அவரது உடல் லண்டன் எடுத்துச் செல்லப்பட்டு ஜூன் 6 ஆம் தேதி இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது. சிட்னி மார்த்தாண்டன் இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளார்.

லண்டனில் வசித்து வந்த மோலி, தனக்கும் தனது மகனுக்கும் நீதி கேட்டு ஆங்கிலேயே அரசிடம் தொடர்ந்து போராடி வந்தார். எதுவும் நடக்கவில்லை. 1967 இல் காலமானார் மோலி.

சிட்னி மார்த்தாண்டன் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணை மணந்து கொண்டு சிறிது காலத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். மிகவும் செல்வாக்காக வாழ்ந்த சிட்னி மார்த்தாண்டனும் 1984 இல் பிளாரன்ஸ் நகரில் காலமானார். இவர்கள் அனுபவித்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள  பொருள்கள், இன்னமும் வாரிசு யாரென்று அறியப்படாமல் இங்கிலாந்து நாட்டில் வைக்கப்பட்டுள்ளனவாம்.

ஆட்சி, அதிகாரம், ஆஸ்திக்கு ஆசைப்பட்டு காதல் மனைவிக்கான உரிய அந்தஸ்து இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று இருந்துவிடாமல், அந்தக் காலத்திலேயே மணிமுடி துறந்த வரலாறு, காதலின் அன்பை, பிரியத்தை,  ஆழத்தைப் பறை சாற்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com