காதலர் தினம்: உண்மையான நாகரிக சமூகத்தின் திறவுகோல்!

காதல் வயப்பட்ட ஒருவருக்கொருவர் தங்களுக்குள் வாழ்த்துகளைச் சொல்லிக் கொண்டும், பரிசுப் பொருட்களைப் பகிர்ந்தளித்துக் கொண்டுமாய் இன்புற்றிருக்கும் நாள். 
காதலர் தினம்: உண்மையான நாகரிக சமூகத்தின் திறவுகோல்!

பிப். 14 காதலர் தினம். உலகெங்கும் கொண்டாடப்படும் தினம், காதல் வயப்பட்ட ஒருவருக்கொருவர் தங்களுக்குள் வாழ்த்துகளைச் சொல்லிக் கொண்டும், பரிசுப் பொருட்களைப் பகிர்ந்தளித்துக் கொண்டுமாய் இன்புற்றிருக்கும் நாள்.

உண்மையில் காதல் என்கிற உன்னதமான  உணர்வு ஒருவரின் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டாலும், அதனைக்  கொண்டாடும் விதமாக பொதுவான ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து, முன்னிறுத்தி, அடையாளப்படுத்திக் கொண்டாடி வருகிறோம். எல்லாவற்றையும்போல இதற்கும் வரவேற்புகள், எதிர்ப்புகள் என இரு  வேறுபட்ட நிலைகள் சமூகத்தில் தொடர்ந்து நிலவி வருகின்றன. அது ஐந்து ரூபாய் வாழ்த்து அட்டையோ? அல்லது ஐந்து லட்ச ரூபாய் பரிசுப் பொருளோ? எதுவாகிலும்  விற்பனை வணிக  வியாபாரிகள் தம் லாபத்தை ஊதிப்  பெருக்கும் உபாயமாய்க் காதலர் தினத்தை வரவேற்கிறார்கள்.

மற்றொருபுறம் காவித்  துண்டோடும், கையில் தாலியுடன், இந்து சனாதன தர்மத்தை எப்பாடுபட்டேனும் என்ன விலை கொடுத்தேனும் பாதுகாத்திட வேண்டும் என எதிர்ப்புக் குரல் கொடுத்து அலைந்து திரிகிறார்கள் காவிக் கலாசாரக் காவலர்கள்.

அதேநேரம் இதனை வரவேற்கும்விதமாக காதல் கொண்டாடப்பட வேண்டியது என்று முற்போக்காளர்களும், சாதியை அழித்தொழிக்கும் வழிகளில் இதுவும் ஒன்று என புரட்சியாளர்களும் மாற்றுப் பண்பாட்டுக் கொண்டாட்டக்  களங்களைக் கட்டமைக்கிறார்கள்.

தீர்த்தக் கரைதனிலே, தெற்கு மூலையில்  செண்பகத் தோட்டத்திலே என கண்ணம்மாவோடு காதலால் கசிந்துருகி களித்துக் கிடந்து பாடல்கள் யாத்திட்ட அந்தப் பாரதிப் புலவன்  சொல்வது மாதிரி, கலையில் இலக்கியத்தில்,  திரைப்படத்தில் தொலைக்காட்சி ஊடகங்களில்  வரவேற்று, தன் சாதி  என்று வரும்போது மட்டும் சட்டென்று வெகுண்டெழுந்து, அரிவாளைத் தூக்கி ஆணவக்  கொலைகள் செய்திடும் கொடூரப் போக்கைக்  களைந்து, ஒரு நாகரீகமான சமூகத்தைச்  சமைக்க வேண்டுமானால் இது போன்ற காதலர் தினங்கள் கொண்டாடப்பட வேண்டியது அவசியம். உச்சி மோந்து உளக் களிப்புற்று வரவேற்க வேண்டியது கட்டாயம்.

காதல், சாதியை...  அதன் இருப்பை... கேள்விக்குள்ளாக்கிடும்.  காதல் என்கிற பேருணர்வு அந்தச் சாதிச் சனியனைச் சட்டென்று தூக்கி எறிந்து மேற் சென்றுவிடும். எனவேதான் நாம்  தீர்க்கமாகச் சொல்கிறோம். சாதியை அழித்தொழிக்கும் வழிகளில் முகாமையானது இந்தக் காதல் திருமணங்கள். சாதி ஆணவக் கொலைகளைக் களைந்திடும் ஆற்றல் கொண்டது இந்தக் காதல்  திருமணங்கள். சாதி ஆணவக்  கொலைகள் என்கிற காட்டு விலங்காண்டி  நிலையை மாற்றி உண்மையானதொரு நாகரீகமான சமூகத்தை உருவாக்க வேண்டுமென்றால், நாம் காதலர் தினம்  போன்ற மாற்றுப் பண்பாட்டுக் கொண்டாட்டக் களங்களை இம் மண்ணில் கட்டமைக்க வேண்டும்.

நிலவும் அவலத்தை மாற்ற சரியான மாற்று  என்பது, மாற்றுப் பண்பாட்டை முன் மொழிவதுதான். மாற்றுக் கொண்டாட்டங்களை முன்னெடுப்பதுதான். பழைய வருணாசிரம விழாக்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளோடு மட்டுமல்லாமல், அதை வருணாசிரம எதிர்ப்பு விழாக்களாக மாற்றுவதன் மூலமும், மாற்றுப் பண்பாட்டு  விழாக்களை, கொண்டாட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமாகவும், கொஞ்சம் கொஞ்சமாக சாதியின் இயங்கு  தளங்களை உள்ளுக்குள்ளேயே தகர்த்து,  உடைத்து, பின்னர் உதிர வைக்க வேண்டும்  என்பதே சரியான முடிவு. தீர்வு.

இதற்கான முன்னுதாரணம் நம் வரலாற்று வெளிகளிலிருக்கிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்த ம.பொ.சி, அந்தக் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ‘தமிழரசுக் கழகம்’  என்கிற துணை அமைப்பைத் துவக்கியிருந்தார். அந்த அமைப்பானது 1947ஆம் ஆண்டின்  பொங்கல் நாளை ‘தமிழர் திருநாள்’ என்று அறிவித்து, தமிழகம் முழுக்க முதன்முதலாகக் கொண்டாடியது.  இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் அண்ணா. ஏனென்றால், தந்தை பெரியார் முரட்டுத்தனமாக, கொஞ்சம்  தடாலடியாக அதிர்ச்சி வைத்தியம் செய்பவர். பிள்ளையார் சிலை உடைப்பார். ராமன்  படத்தை எரிப்பார். சமூகத்தின் புழங்கு வெளிகளுக்கு ஒருவித மின்  அதிர்வுச் சிகிச்சை  செய்வார். நாம் இப்படி எழுதுவதன் பொருள்  தந்தை பெரியாரின்  நடவடிக்கைகளைக்  குறைத்து மதிப்பிடுவதில்லை. கொச்சைப் படுத்துவதில்லை. மாறாக அதுவும் தேவைதான்  என்றாலும், சமூகத்தின் புழங்கு வெளிகளுக்கு  மற்றொரு பக்கமும் இருக்கிறது. அதைச் சரியாக இனம் கண்டு கொண்டனர் அண்ணாவும், அவர் தம் கட்சியும். ஏற்கெனவே, ம.பொ.சியின் தமிழரசுக் கழகம் முன் மொழிந்த தமிழர்  திருநாளை, மாற்று விழாவாகக் கண்டார். மாற்றுப் பண்பாட்டு நடவடிக்கையாகக் கண்டார். எனவேதாம், திமுக தொடங்கிய பின்னர் வந்த முதல் பொங்கல் விழாவை,  தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு மாற்று விழாவாக, மாற்றுக் கொண்டாட்டமாக  வழி மொழிந்தார். திமுக தலைமைக் கழக வெளியீடான “திமுக வரலாறு” இப்படிச் சொல்கிறது.

“பொங்கல் விழா - அறுவடை விழா - உழவர் தம் விழா - மகிழ்ச்சி விழா.  இவ்விழாவினைக்  கிளைக் கழகங்கள் சிறப்பாகக் கொண்டாட  வேண்டும் என்று திமுக தலைமை நிலையப் பிரசாரக் குழுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் 12.01.50ல் அறிக்கை வெளியிட்டார். நாடெங்கும் கொடியேற்றி,  ஊர்வலம், கூட்டம் நடத்தி, ஏழைகளுக்கு உணவளித்து, விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது”  என்று எழுதியது. இதற்குப் பிறகும், அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு  பொங்கல் விழாவையும், தீபாவளிக்கு ஒரு மாற்று விழாவாகவே, மக்கள்  விழாவாகவே இதை  முன்னிறுத்தியது. இங்கு திமுகவும், அண்ணாவும், அவர்தம் தம்பியர்களின் வழிநடத்துதலின்  விளைவாய், தமிழகத்தைச் சீரழித்து, நசிவுப் பாதைக்குக் கொண்டு போனது குறித்து ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் நமக்கு இருந்தாலும்,  வருணாசிரமம் சார்ந்த  பண்டிகைகள், கொண்டாட்டங்களிலிருந்து தமிழர்களை விடுவிக்க  ‘மாற்று விழாக்கள்  தேவை’ என்கிற  திட்டவட்டமான பண்பாட்டுச்  சிந்தனையை மட்டும்  நாம் படிப்பினையாக  எடுத்துக் கொள்ள  வேண்டும்.

ஆக, இது போன்ற  மாற்றுப் பண்பாட்டு நடவடிக்கைகளை தமிழர்களுக்குச் சொல்லி, நாமே முன் நின்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டு அவர்களையும் கொண்டாடச் செய்ய வேண்டும்.

சகலமும் சாதிப்  பிணிக்குள் சிக்குண்டு  சீரழிந்து கிடக்கும் இந்தச் சாதியச் சமூகத்தில்,  புதிய பண்பாட்டு மரபாக, நம் அறிவுப் பேராசான் திருவள்ளுவரின் சொல்படியே ‘பிறப்பொக்கும்  எல்லா உயிர்க்கும்’ என்ற அடிப்படையை மையமாய் வைத்து, நம்மோடு, சாதி ஒழிப்பில் அக்கறை கொண்டுள்ள மாற்று  இயக்கத்தினர்களையும் ஒன்று சேர்த்துக்கொண்டு, சாதியை ஒழிக்க  வேண்டும் என்கிற சமூகப் புரிதலால் இயல்பாக இணையும் ‘சாதி மறுப்புத் திருமண தினம்'  என்றோ அல்லது காதல் வயப்பட்டதால் சாதியைத் தூக்கி எறிய நேரிட்டவர்களை ஒன்று சேர்த்து 'சாதி மறுப்புக் காதல் தினம்’ என்ற நாள் ஒன்றினை உருவாக்கி, அதை அறிவர் அம்பேத்கர் நாளிலோ அல்லது பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்கள் நாளிலோ முன்னெடுப்பது என்பது போன்ற  மாற்று விழாக்களை சமூக விழாக்களாக மாற்ற வேண்டும் நாம்.

இப்போதும் இத்தகு விழாக்கள் நம்மில் சிலரால் மட்டும் தனித் தனியாகக் கைக் கொள்ளப்படுகிறது. மாறாக, அதை எல்லோரும் கொண்டாடும் விதமாக, மக்கள் செல்வாக்குப் பெறும் விழாக்களாக, சமூக மயப்படுத்த வேண்டும். நம்மில் கோடிக் கணக்கானவர்கள், லட்சக் கணக்கானவர்கள் இல்லாவிடினும், ஊருக்கு சில நூறு பேர்களாவது வேறு வேறு  இயக்கங்களாய்ப் பிரிந்திருப்போம். முதல் கட்டமாக அந்த நூறு நூறு  பேர்களும் ஒன்றிணைந்து ஆயிரக்கணக்கானவர்களாகக் கூடி, எல்லோரும் ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து திரளாக விழாவெடுத்தால், மக்களின் கவனத்தைச் திசை  திருப்பினால் மட்டுமே புதிய பண்பாட்டுப் பாதை விரிவு பெறும்.

புதிய பண்பாட்டுப்பாதை விரிவு பட்டால்,  சாதியப் பழக்கவழக்கங்களும், சாதிய மூட நம்பிக்கையின் முடை நாற்றச் சேற்றிலிருந்து மீண்டு, உண்மையானதொரு  நாகரிகமான சாதியற்ற சமூகத்தை இந்த மண்ணிலே நாம் சமைக்கலாம். அதைக் காதலர் தினங்கள் சாத்தியப்படுத்தும்  என்பது திண்ணம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com