காதல் மனைவிக்கு மன்னர் கட்டிய கோவில்!

தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மர் தன்னுடைய காதல் மனைவி யமுனாம்பாளுக்கு நீடாமங்கலத்தில் கோயில் எழுப்பியுள்ளார். 
யமுனாம்பாள் அரண்மனை சத்திரம் ஒருபகுதி.
யமுனாம்பாள் அரண்மனை சத்திரம் ஒருபகுதி.

நீடாமங்கலம்: தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மரின் காதல் மனைவி யமுனாம்பாளுக்கு நீடாமங்கலத்தில் கோயில் எழுப்பி வழிபாடு நடத்தப்படுகிறது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோயிலைச் சார்ந்த சத்திரங்களும், தர்ம நிறுவனங்களால் அமைக்கப்பெற்ற சத்திரங்களும் சேர்த்து 600க்கும் மேற்பட்ட சத்திரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கி.பி.1873-ம் ஆண்டின் வருவாய்த் துறை அறிக்கையின்படி, தஞ்சாவூர் பகுதியில் சத்திரங்கள் அமைந்த அளவுக்கு தென்னிந்தியாவிலேயே எந்தப் பகுதியிலும் சத்திரங்கள் இல்லை என்பது தஞ்சாவூருக்கே உரிய தனிச் சிறப்புகளில் ஒன்றாகும்.

தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர்கள், ராமேசுவரம் செல்லும் பெருவழியில் யாத்ரீகர்கள் தங்குவதற்காகச் சத்திரங்களை நிறுவியுள்ளனர். இந்தச் சத்திரங்கள் மராட்டிய மன்னர்களின் பெயரில் அல்லது அவர்களின் தாய், மனைவி, சகோதரி, ஆசைநாயகிகளின் பெயரில் அமைக்கப்பட்டுள்ளன. சில சத்திரங்கள் குல தெய்வத்தின் பெயரில் அமையப்பட்டுள்ளன.

ராமேசுவரம் வரை யாத்திரை செல்லும் பொதுமக்களும், பக்தர்களும் தங்கி இளைப்பாறுவதற்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும் கட்டப்பட்ட இந்தச் சத்திரங்களில் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் இரண்டு வேளை உணவு அளிக்கப்பட்டுள்ளது.

நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவில்.
நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவில்.

கோடைக் காலத்தில் சில இடங்களில் தண்ணீர்ப் பந்தல்களும் ஏற்படுத்தப்பட்டு வழிப்போக்கர்கள் இளைப்பாறுவதற்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. சத்திரங்கள் வழிப்போக்கர்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்தன. இரவு நேரங்களில் தங்குவோருக்கு வசதியாக விளக்குகள் பொருத்தப் பட்டிருந்தன. ஒவ்வொரு சத்திரத்திலும் உணவு வழங்குவதற்கு ஏதுவாக, அப்பகுதி கிராமங்களில் சில சத்திரத்தின் கட்டுப்பாட்டில் விடப்பட்டிருந்தன. அந்த கிராமங்களில் உள்ள நிலங்களில் விளையும் தானியங்களைக் கொண்டு உணவு தயாரித்து சத்திரங்களில் வழங்கப்பட்டு வந்தது.

மராட்டிய மன்னர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தச் சத்திரங்களில் பல சிதிலமடைந்து காணப்படுகின்றன. மேலும், பல சத்திரங்களின் கட்டிடங்கள் செடிகொடிகள் மண்டிக் காணப்படுகின்றன. இந்தச் சத்திரங்களை நிர்வாகிப்பதற்காக இன்றளவும் சத்திர நிர்வாகம் என்ற தனிப்பிரிவு தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு இயங்கி வருகிறது.

தஞ்சாவூர் சத்திர நிர்வாகத்துக்குட்பட்ட பல கிராமங்களில் அவற்றுக்கான நிலங்கள் இன்றும் உள்ளன. இதற்கான குத்தகையை மட்டும் சத்திரங்களின் நிர்வாகம் வசூலித்து வருகிறது.

 தை கடைசி வெள்ளி திருவிழாவில் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த யமுனாம்பாள்
 தை கடைசி வெள்ளி திருவிழாவில் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த யமுனாம்பாள்

தஞ்சாவூர், ஒரத்தநாடு, நீடாமங்கலம், ராசாமடம் போன்ற இடங்களில் உள்ள சத்திரங்கள் பள்ளி மாணவர்கள் தங்கிப் பயிலும் விடுதிகளாக முன்பு செயல்பட்டு வந்தன. சத்திரங்களின் கட்டுமானங்கள் பலவீனமடைந்து வந்ததால், தற்போது மாணவர் விடுதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

வடநாட்டிலிருந்து ராமேசுவரத்துக்கு யாத்திரையாக வரும் பக்தர்கள் பசியுடன் செல்லக் கூடாது என்பதற்காக ஆங்காங்கே அன்னச் சத்திரங்களை கட்டி, பக்தர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர் மராட்டிய மன்னர்கள். அவர்களின் சிறப்பான நிர்வாக முறைக்குச் சாட்சிகளாக இன்றளவும் விளங்குபவை இந்தச் சத்திரங்கள் என்றால் அது மிகையல்ல.

யமுனாம்பாள்
யமுனாம்பாள்

காதல் மனைவி யமுனாம்பாள்-குறிப்பாக தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டியமன்னர் பிரதாபசிம்மரால் தனது காதல் மனைவி யமுனாம்பாளுக்காக தோற்றுவிக்கப்பட்டது யமுனாம்பாள்புரம் எனும் கிராமம் ஆகும். நாளடைவில் இந்த ஊர் நீராடுமங்கலம் என மருவி தற்போதைய நீடாமங்கலமானது. தனது ஆசைநாயகி யமுனாம்பாள் பெயரில் நீடாமங்கலம் அரண்மனை சத்திரம் மன்னரால் கட்டப்பட்டது. யமுனாம்பாள் அந்த அரண்மனையில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இந்த அரண்மனையில் தஞ்சாவூர் சென்றுவர சுரங்கப் பாதையும் இருந்துள்ளது.

பிரதாபசிம்மரின் காதல் மனைவி யமுனாம்பாள் நீடாமங்கலம் பகுதியில் உள்ள மக்களிடம் அன்பு கொண்டு எல்லோருக்கும் வாழும் கடவுளாக திகழ்ந்து வந்துள்ளார். இதனாலேயே அவர் நிறைமாத கர்ப்பிணியாக ஐக்கியமான யமுனாம்பாள் தோட்டத்தில் அவருக்காக கோயில் ஒன்றினை கட்டி இன்றளவும் இப்பகுதி மக்கள் யமுனாம்பாளை போற்றி வருகின்றனர். இந்த கோயிலில் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் தீபமேற்றி வழிபாடு நடத்துகின்றனர். பௌர்ணமியன்று இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.

பக்தர்கள் வழிபடும் மாமரம்
பக்தர்கள் வழிபடும் மாமரம்

வருடம் தோறும் தை கடைசி வெள்ளிக்கிழமை திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமணமாகாத பெண்கள் திருமணமாக வேண்டியும் நிறைமாத கர்ப்பிணிகள் சுகப் பிரசவம் அடையவும், கல்வி, வேலைவாய்ப்பில் மேன்மையடையவும் யமுனாம்பாளிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

ராஜகணபதி
ராஜகணபதி

சாதி, மதவேறுபாடின்றி பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு யமுனாம்பாளை தரிசிக்கின்றனர். தை கடைசி வெள்ளி திருவிழாவில் பெண்கள் உள்பட பலரும் பால்குடம் எடுக்க, பாலாபிஷேகம் யமுனாம்பாளுக்கு செய்யப்படுகிறது. மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்படுகிறது. நூற்றுக்கணக்கான பெண்கள் மாவிளக்கேற்றி யமுனாம்பாளை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்கிறார்கள். தை கடைசி வெள்ளி திருவிழாவிற்கென்று திரளான பக்தர்கள் கலந்து கொள்வதால் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கின்றனர். ஏராளமான சிறு வணிக கடைகள் கோயில் வளாகத்தை சுற்றிலும் நடத்தப்படுகிறது. சிறுவர்களுக்கான விளையாட்டுப்பொருள்கள் , தின்பண்டங்கள் ஏராளமாக விற்பனையாகிறது.

நீடாமங்கலமே தை கடைசி வெள்ளி யமுனாம்பாள் கோயில் விழாவன்று விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது. விழாவில் கலந்துகொள்ள பள்ளி மாணவிகள், ஆசிரியைகளுக்கு முன் அனுமதி அளிக்கப்படுகிறது.

நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் குடும்பத்தோடு வெளியூரில் வசித்து வந்தாலும் தை கடைசி வெள்ளிக்கிழமை விழாவில் கலந்துகொள்ள வருகை தருகிறார்கள். பல வருடங்களாக இந்த முறைகள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் தை கடைசி வெள்ளி திருவிழா பிப். 11 ஆம் தேதி நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தர்கள் ராஜகணபதி சன்னதியிலிருந்து பால்குடம் எடுத்தனர். தொடர்ந்து பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ராஜ கணபதிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பெண்கள் மாவிளக்கிட்டு வழிபாடு நடத்தினர். திருமணமாகாத பெண்கள் திருமணமாக வேண்டியும், கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் அடைய வேண்டுதல் செய்தனர். விழாவில் திரளான பக்தர்கள் மழையை பொருட்படுத்தாது கலந்து கொண்டனர். சந்தானராமசாமி கைங்கர்ய சபாவினர் அன்னதானம் வழங்கினார். கோயில் விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை சத்திர நிர்வாகத்தினர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் செய்திருந்தனர். 

மன்னரின் மனைவிக்கு நீடாமங்கலம் பகுதி மக்கள் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினரும் மரியாதையை செலுத்துவதை அறிந்து அனைவருமே மெய்சிலிர்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com