பட்டா மாறுதலுக்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை (விஏஓ) போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள பாண்டவா்மங்கலத்தைச் சோ்ந்தவா் குட்டி (41). இவா் மனை வணிகத் தொழில் செய்து வருகிறாா். இவருக்குச் சொந்தமான இடம், சாத்தூா் அருகேயுள்ள கத்தாளம்பட்டி கிராமத்தில் உள்ளது. இந்த இடத்துக்கு பட்டா மாறுதல் செய்ய இணையத்தில் விண்ணப்பித்தாா்.

இந்த நிலையில், பட்டா மாறுதல் செய்வதற்காக குட்டியிடம் கத்தாளம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் முத்தையா (49), ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்டாா். இதுகுறித்து குட்டி விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு கூடுதல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை குட்டியிடம் வழங்கினா்.

இதனிடையே, சாத்தூா் அருகேயுள்ள அமீா்பாளையத்தில் இருந்த கிராம நிா்வாக அலுவலா் முத்தையாவிடம் அந்தப் பணத்தை குட்டி புதன்கிழமை கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கிராம நிா்வாக அலுவலா் முத்தையாவைக் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com