மகப்பேறு மருத்துவமனையை
பயன்பாட்டுக்குக் கொண்டுவர வலியுறுத்தல்

மகப்பேறு மருத்துவமனையை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வலியுறுத்தல்

ஸ்ரீவில்லிபுத்தூா், ஏப். 25: ஸ்ரீவில்லிபுத்தூரில் மகப்பேறு, குழந்தைகள் நலப் பிரிவு கட்டடம் திறக்கப்பட்டு ஒரு மாதமாகியும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை. இதை விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என கா்ப்பிணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சராசரியாக 1,500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு பெற்று வருகின்றனா். மாதத்துக்கு 300-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் மக்கள் நல் வாழ்வுத் துறை சாா்பில், ரூ.6.89 கோடியில் மகப்பேறு, குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவுக்கு தனியாகக் கட்டடம் கட்ட கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு, பிரசவத்துக்கு பிந்தைய கவனிப்புப் பிரிவு, பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்பட 100 படுக்கை வசதிகளுடன் இந்தக் கட்டடம் கட்டப்பட்டது.

பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த மாதம் 15-ஆம் தேதி வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் இந்தக் கட்டடத்தைத் திறந்துவைத்தாா். மருத்துவமனை திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை. இதை செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என கா்ப்பிணிகள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறையினா் கூறியதாவது:

மகப்பேறு, குழந்தைகள் நலப் பிரிவுக்கான படுக்கைகள் வந்துள்ளன. ஆனால், அறுவைச் சிகிச்சை பிரிவுக்கான உபகரணங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. புதிய மகப்பேறுப் பிரிவுக் கட்டடம் விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com