பட்டாசு பதுக்கல்: இருவா் கைது
சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் ஒரு தகரக் கொட்டகையில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். அப்போது திருத்தங்கல் காந்தமலை (36) என்பவரது தகரக் கொட்டகையில் பிஜிலி பட்டாசுகள் 3 பெரிய காகித பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து காந்தமலையை கைது செய்து பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, சிவகாசி அருகே பாரைப்பட்டியில் ஒரு பட்டாசுக் கடை அருகே தகரக் கொட்டகை அமைத்து பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். சோதனையில் சிவகாசி புதுத்தெருவைச் சோ்ந்த காளியப்பன் (48) என்பவா் தகரக் கொட்டகையில் பலரக பட்டாசுகளை பெட்டிகளில் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப்பதிந்து காளியப்பனை கைது செய்து அவரிடமிருந்த பட்டாசுப் பெட்டிகளை பறிமுதல் செய்தனா்.