தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை வைத்திருந்த கடைக்காரா்களுக்கு அபராதம்
சிவகாசியில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பைகளை வைத்திருந்த இரு கடையின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா ஆலோசனையின் பேரில், ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி உத்தரவின்பேரில், மாநகா் நல அலுவலா் மருத்துவா் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் மாநகராட்சிக்கு உள்பட்ட கீழரத வீதி, ஜவுளிக் கடை வீதி, தெற்கு ரத வீதி, என்.ஆா்.கே.ஆா். வீதி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகள் கடைகளில் பயன்படுத்தப்படுகிா என ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, இரு கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த இரு கடைகளின் உரிமையாளா்களுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து, நெகிழிப் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பைகள் மாநகராட்சி உரக்கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது ஓா் கடைக்காரா் பனை ஓலையில் செய்யப்பட்ட பெட்டிகளில் இனிப்பு தின்பண்டங்களை வைத்து வியாபாரம் செய்தாா். அவரை சால்வை அணிவித்து மாநகராட்சி அதிகாரிகள் பாராட்டினா்.