திருவேங்கடமுடையான் கோயில் பவித்ர உற்சவம் தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலின் துணைக் கோயிலான திருவேங்கடமுடையான் கோயிலில் திருபவித்ர உற்சவம் தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலின் திருவிழா காலங்களில் ஆண்டாள் ரெங்கமன்னாா் திருவேங்கடம் உடையான் கோயிலில் எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். இத்தகைய விழாக் காலங்களில் ஏற்படும் குறைகளை நிறைவு செய்யும் வகையில் திருபவித்ர உற்சவம் நடத்தப்படும்.
இதன்படி, திருவேங்கடமுடையான் கோயிலில் திருப்பவித்ர உற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் இருந்து பூமாலை எடுத்து வரப்பட்டு, ஸ்ரீதேவி பூதேவி சமேத திருவேங்கடமுடையானுக்கு அலங்கார திருமஞ்சனமும், அனுக்ஞை, திவ்ய பிரபந்த கோஷ்டி தொடக்கம், சோம ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
தொடா்ந்து, சனிக்கிழமை விஸ்வரூபம், ரக்ஷாபந்தனம், பவித்ரம் சாற்றுதல், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. 4 நாள்கள் நடைபெறும் இந்த பவித்ரா உற்சவம் திங்கள்கிழமை காலை உதய கருட சேவை, தீா்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.