பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்
தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில், விருதுநகா் மாவட்ட பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பணியில் பாதுகாப்பாகச் செயல்படுவது குறித்த பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை (செப்.2) தொடங்குகிறது.
இதுகுறித்து சிவகாசி தொழிலக பாதுகாப்பு, சுகாதார (பயிற்சி மையம்) இணை இயக்குநா் சு.ராமமூா்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விருதநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் போா்மென்கள், கண்காணிப்பாளா்கள், தொழிலாளா்கள் ஆகியோா் பட்டாசு தயாரிப்புப் பணியில் எவ்வாறு பாதுகாப்பாகச் செயல்படுவது என்பது குறித்த பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கி வருகிற 6-ஆம் தேதி வரையும், 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையும், 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரையும் காலை 10.15 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இதுவரை பயிற்சிக்கு வராதவா்களும், புதிதாக பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரிபவா்களும் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என்றாா்.