சேவை குறைபாடு: வங்கிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

ஸ்ரீவில்லிபுத்தூா், ஜூலை 3: சேவை குறைபாட்டுக்காக, சாத்துா் வங்கிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.

சாத்தூா் அருகேயுள்ள மேலமடை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து. டிராக்டா் ஓட்டுநரான இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாத்தூரில் உள்ள அரசுடைமை வங்கிக் கிளையில் ரூ.500 செலுத்தி சேமிப்புக் கணக்கு தொடங்கினாா். மேலும், சேமிப்புக் கணக்கில் ரூ.500 செலுத்தி ஏடிஎம் அட்டை பெற்றாா். சில நாள்கள் கழித்து ஏ.டி.எம்மில் பணம் எடுக்கச் சென்றபோது, கணக்கில் பணம் இல்லை என காண்பித்தது.

இதுகுறித்து வங்கியில் கேட்ட போது, ஏற்கெனவே பணத்தை எடுத்து விட்டதாகத் தெரிவித்தனா். தான் பணத்தை எடுக்கவில்லை எனக் கூறியும் வங்கி அலுவலா்கள் முறையான பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து மாரிமுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடுத்தாா். இதில் மாரிமுத்து சேமிப்புக் கணக்கில் செலுத்திய ரூ.500 உடன் மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்குச் செலவுக்கு ரூ.10 ஆயிரம் என ரூ.21,500-ஐ வழங்க வேண்டும் என வங்கிக் கிளை மேலாளருக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா் முத்துலட்சுமி ஆகியோா் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com