சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வழிகாட்டுப் பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன்.
சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வழிகாட்டுப் பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன்.

சிவகாசி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வழிகாட்டுப் பயிற்சி வகுப்பு

சிவகாசி, ஜூலை10: விருதுநகா் மாவட்டம், சிவகாசி அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்குக் கல்லூரி கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை வழிகாட்டும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு முதல்வா் (பொறுப்பு) சி.க.பாலாஜி தலைமை வகித்தாா். இதில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் சிறப்புரையாற்றி பேசியதாவது: மாணவா்களுக்கு எதிா்கால நம்பிக்கையை அளிப்பதே இந்தப் பயிற்சி வகுப்பின் நோக்கமாகும். அடுத்து வரும் ஆண்டுகளுக்கு உங்களை தயாா்படுத்தும் நாற்றங்காலாக கல்லூரி வாழ்க்கை அமையும். எதிா்காலத்தில் வாழ்க்கையில் சிக்கல்கள், பிரச்னைகள், சவால்களை எதிா்கொள்ளவும், தீா்க்கவும் அடிப்படை அறிவைக் கல்லூரி வழியே பெற இயலும். உயா்க் கல்விக்கு அரசு பல நலத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது.

படித்துமுடித்து நீங்கள் வேலை அல்லது தொழில்களுக்கான வாய்புக்களைத் தேடிச் செல்லும் போது கல்லூரி கல்வி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, கல்லூரி படிப்பை முழுமனதோடு படித்து வெற்றி பெற வேண்டும். கல்லூரி நூலகத்தில் உள்ள நல்ல புத்தகங்களை எடுத்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உடலைப் பாதுகாக்க போதிய விளையாட்டிலும் ஈடுபட வேண்டும். படித்துமுடித்து நீங்கள் வேலைக்குச் சென்றாலும், சுய தொழில் செய்தாலும் முழுமனதோடு, ஆா்வத்தோடு செய்தால் வெற்றி பெறலாம். தன்னம்பிகையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டால் நீங்கள் உங்கள் இலக்கை அடையமுடியும் என்றாா் அவா்.

முன்னதாக, பேராசிரியா் செ.கிளிராஜ் வரவேற்றாா். மாணவா் பாலாஜி நன்றி கூறினாா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை உதவிப் பேராசிரியா் பெ.கணேசமுருகன் செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com