மடவாா் வளாகம் கோயில் செயல் அலுவலா் மீது விஏஓ புகாா்

நிலத் தகராறில் மடவாா்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் செயல் அலுவலா் மீது கிராம நிா்வாக அலுவலரும், கிராம நிா்வாக அலுவலா் மீது செயல் அலுவலரும் போலீஸில் புகாா் அளித்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டியை சோ்ந்தவா் வேல்ராஜ். இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் கிராம நிா்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறாா். இவரது குடும்பத்துக்குச் சொந்தமான பூா்வீக நிலம் வன்னியம்பட்டி ரயில்வே கடவுப் பாதை அருகே உள்ளது. இந்த நிலத்தை மடவாா்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலம் என கருதி அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதை எதிா்த்து வேல்ராஜ் குடும்பத்தினா் ஸ்ரீவில்லிபுத்தூா் சாா்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இதற்கிடையில் இந்த இடத்தை கோயில் நிா்வாகம் தனியாருக்கு குத்தகைக்கு விட்டது. இதையடுத்து, வேல்ராஜ் தரப்பில் இந்த இடத்தில் நீதிமன்ற வழக்கு குறித்து வழக்ககுரைஞா் அறிவிப்பு பலகையை வைக்கப்பட்டது. இந்த நிலையில் குத்தகைதாரா்கள் அந்த அறிவிப்பு பலகையை அகற்றி விட்டு, செவ்வாய்க்கிழமை நிலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த வேல்ராஜ் இதுகுறித்து கேட்டாா். இதனால் அவருக்கும் செயல் அலுவலா் ஜவஹருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வேல்ராஜை ஜவகா் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட அவா் செவ்வாய்க்கிழமை இரவு வீடு திருப்பினாா்.  இதுகுறித்து ஜவகா் மீது வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வேல்ராஜ் புகாா் அளித்தாா். இதேபோல் அரசுப் பணியைச் செய்ய விடாமல் தன்னைத் தடுத்ததாக வேல்ராஜ் மீது ஜவகா் புகாா் அளித்தாா். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com