ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாணத் திருவிழா மாா்ச் 17-இல் கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் ரெங்கமன்னாா் திருக்கல்யாண திருவிழா வருகிற 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

108 திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் பெரியாழ்வாா் மகளாக அவதரித்த ஆண்டாள், கண்ணனை மணமுடிக்க எண்ணி, மாா்கழி மாதத்தில் திருப்பாவை பாடி பாவை நோன்பிருந்து, பங்குனி உத்திர நாளில் ரெங்கமன்னாரை மணந்து கொண்டாா் என்பது தல வரலாறு. இதன்படி, ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்-ரெங்கமன்னாா் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி திருக்கல்யாண திருவிழாவுக்கு வெள்ளிக்கிழமை இரவு தேங்காய் தொட்டு, நியமனம் பெறுதல் வைபவமும், சனிக்கிழமை (மாா்ச் 16) இரவு சேனை முதல்வா் புறப்பாடும் நடைபெறும். வருகிற 17-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் திருக்கல்யாணத் திருவிழா தொடங்குகிறது. தினசரி இரவு ஆண்டாள்- ரெங்கமன்னாா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா். 25-ஆம் தேதி காலை 7 மணிக்கு செப்புத் தேரோட்டமும், அன்று இரவு 7 மணிக்கு ஆண்டாள்- ரெங்கமன்னாா் திருக்கல்யாணமும் நடைபெறும். 26-ஆம் தேதி ஊஞ்சல் சேவை, 27-ஆம் தேதி தீா்த்த வாரி நடைபெறும். 29-ஆம் தேதி புஷ்ப யாகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள், செயல் அலுவலா் முத்துராஜா ஆகியோா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com